Sunday, April 19

ஓகே கண்மணி - OK Kanmani - Movie Observations - not review

ஓகே கண்மணியும் ஓடக்கரை ஓணானும்

ஒண்ணே முக்கால் மணியிலிருந்து ஒண்ணரை மணி நேரம் காத்திருந்து ஒரு ஓரமான இருக்கையில் ஒரு கை ஒரு கால் மேல் வைத்து ஒரு கால் வராவிடில் என் செய்வது என்று யோசிக்கையில் ஓரமாக பக்கத்து செவிற்றில் ஒட்டிக்கொண்டது ஓடக்கரை ஓணான். என்னப்பா 'லேட்' என்றதற்கு 'அடப்போப்பா' என்றது ஓணான். இனிதே துவங்கியது எங்களின் திரைப்பார்வை.

 1. ஓணானின் தாமதத்திற்கு காரணம் நூறு நாள் காதல். 100 days of love என்ற மலையாள படத்தின் ஆங்கிலத்தலைப்பின் தமிழாக்கம் என்று ஓணான் மார்தட்டிக்கொண்டு சொன்னபோது என் நெற்றியை தட்டியது கைகள். அதிலும் இதே நடிகர்கள் என்பதால் ஓணானுக்கு குழப்பம். ஓணானுக்கு படிக்க தெரியாது. அது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

 2. படத்தில் ஒரு காட்சியில் துல்க்கர் சல்மானை கண்டு "ஹேய்" என்று கூச்சலிட்ட ஓணானிடம் விசாரிக்கையில், துல்க்கி அணிந்த சிகப்பு சட்டை மாதவன் அலைபாயுதே படத்தில் அணிந்தது என்று சொன்னது. மாதவன் துல்க்கியிடம் தந்ததா? இதில் உள்ளர்த்தம் உள்ளதா? ஓணானின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத விக்ரமாதித்தன் போல் நான். அம்மியில் இடித்த இஞ்சியாய் என் உதடுகள் பிசுங்க , "என்ன" என்று ஓணான் வினவியது. "அது மணி ரத்தினத்தின் சட்டையோ?" என்று நான் கூறுகையில் கோபித்துகொண்ட ஓணான், ஒரு முறைப்போடு "மணி சார்" என்று கூறியது. அடுத்த அலைபாயுதே படத்தில் ஓணானுக்கு முக்கிய கதாபாத்திரம் உண்டு என்று நினைக்கிறேன்.

 3. துல்க்கியும், நித்யாவும் கில்பஜக் கில்மா செய்யும்போது, விடுதி அறையில் இருக்கும் மேஜை கடிகாரம் சால்வடோர் டலியின் ஓவியத்தை நினைவூட்டியது. இது அவர்களின் கூடல் நேரங்களைச்சார்ந்த காலமும் இடமும் நீங்கா நினைவாக இருக்கிறது என்றும், இவர்களின் சேர்க்கை மென்மை மற்றும் வலிமையின் சேர்க்கையை மறைமுகமாக உணர்த்துகிறது என்றும் ஓணானிடம் கூறியபோது ஓணானை காணவில்லை. வெட்கப்பட்டு இருக்கையின் அடியில் ஒளிந்து கொண்டது. ஸீ சென்டர் (C center) ஓணான் போலும்.

 4. ஓணானின் மற்றொரு "ஹேய்" நிகழ்வுக்கு காரணமாயிருந்தது துல்க்கியின் பெயர். ஆதித்யா வரதராஜன். "அட இப்போ என்ன" என்று கேட்டதற்கு அலைபாயுதே மாதவனின் அப்பா பெயரும் வரதராஜன் என்று கூறியது. பிறகு கதாநாயகன் ஐயரா, ஐயங்காரா என்ற ஆலோசனைகளை துவங்கிய ஓணானுக்கு, ஆதித்யா தன் 'மன்னியை' 'அண்ணி' என்று அழைத்தபோது அதிர்ச்சி. இரண்டு பக்கமும் தலையை அசைத்தது. வேதம் புதிது சத்யராஜைப்போல். இனி சந்தியாவந்தனம் செய்யாமல் வெளியே கிளம்பமாட்டேன் என்று தனக்கு தானே உறுதிமொழி எடுத்துக்கொண்டது.

 5. பவானி ஆன்டியாக வரும் லீலா சாம்சனுக்கு அல்சைமர்ஸ் (Alzheimer) என்று தெரிந்தவுடன் ஓணான் கேட்ட கேள்வி என்னை நெகிழ வைத்தது. இந்த வியாதிக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் உண்டா? ஓணானுக்கு இருக்கும் இந்த அக்கறை எனக்கு இல்லையே. என் பங்கிற்கு நானும் இரண்டு முறை அசைத்தேன் என் தலையை. மீண்டும் வேதம் புதிது சத்யராஜ். அவருக்கு வலிமையான கழுத்து போலும். எப்போதும் மழையில் நனைந்து கொண்டிருந்த பவானி ஆன்டிக்கு ஜலதோஷம் பிடிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்ட ஓணானிடம் கழுத்து வலிக்கிறது என்று கூறி மன்னிப்பு கோரினேன்.

 6. "மலர்கள் கேட்டேன் ..." பாடலுக்கு பிறகு "பாவமுலோன ..." டப்ஸ்டெப்பில் (dub-step) ஒலித்தபோது எனக்கு எழுந்த கேள்வி - பாவமுலோன பாடலையே நித்யா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே? எதற்கு கடவுள் வாழ்த்துபோல ஒரு பாடல்? ஓணானோ.. 'பாவமுலோன' பாடலுக்கு உண்டான பதிப்புரிமை தொகையை (royalty) அன்னமாச்சாரியார் குடும்பத்திற்கு தந்திருப்பார்களா என்று கேட்டது. இருவரும் யோசித்துகொண்டிருந்த அச்சமயத்தில்,  மெய்மறந்து கல்பனாஸ்வரங்களை பாடிக்கொண்டிருந்தது ஓணான். சுத்த தன்யாசி அதற்க்கு பிடித்த ராகமாம். தெலுங்கு ஓணானோ என்ற சந்தேகம் எனக்கு.

 7. ஆதித்யாவின் வீட்டை கண்டவுடன் எங்கள் இருவர் முகத்திலும் குஷி. ஓணானும் மேற்கு மாம்பல வாசியாம். பிறகு அந்த வீடு போஸ்டல் காலனியா இல்லை மூர்த்தி தெருவா என்று எங்களுக்குள் விவாதித்து கொண்டோம். படப்பிடிப்பு நடந்தது ஓணான் தங்கியிருந்த மரத்திற்கு அடுத்தாற்போல் இருந்த வீட்டில்தான் என்று கூறியபோது "அப்போ நீ எங்கே இருந்த?" என்று கேட்டேன். அதற்க்கு ஓணான் "எனக்கு அன்று வேறு கிளையில் வேலை இருந்தது" என்று கூறியது. சற்றே உற்றுப்பார்த்தால் ஓணானின் மனைவியும் குழந்தையும் தெரிவார்களாம். அவர்கள் உன்னோடு வரவில்லையா என்று கேட்டதற்கு "அவர்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது" என்று வெட்க்கப்பட்டுகொண்டது. ஒரு சிறிய புன்முறுவலுடன் "பன்னி கய் ('pun'ny guy)" என்று ஓணானை பாராட்டினேன். இந்த வயசில் 2 பொண்டாட்டி அதற்க்கு.

 8. ஆதித்யா ஆறு மாதத்தில் அமேரிக்கா போவதை கேட்ட ஓணானின் கண்களில் அடக்க முடியாத கண்ணீர். என்ன என்று கேட்டபோது இரண்டு முறை "L1B" நிராகரிக்கப்பட்டதாம். ஆதித்யாவிற்கு "H1" கிடைத்திருக்க கூடும் என்று கூறியதற்கு, "அட ச ... வாய்ப்புகளே இல்ல" என்று ஓணான் தன் விசா(visa) புராணத்தை பற்றி கூறத்தொடங்கியது. எனக்கு அது பிடிக்கவில்லை எனினும் என்ன விசா கொடுத்திருப்பார்கள் என்று எனக்கும் தோன்றியது. அதை விட முக்கியமான ஒரு கேள்வி தாராவிற்கு எப்போது விசா கிடைத்தது. எப்படி இந்த கேள்விகளுக்கு விடை அளிக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். "என்னப்பா உங்க டைரக்டர்" என்று நான் கேட்டபோது மறுபடியும் ஒரு முறைப்பு. அடுத்த படித்ததில் ஓணானின் அப்பா பெயர் வரதராஜன்.

 9. ஆதித்யாவும் தாராவும் கரியோகேவில் (karaoke) பாடுவது குயினின் (Queen) "ஐ வான்டு ப்ரேக் ஃப்ரீ (I want to break free)" என்ற பாடல் என்று சொன்னபோது ஓணான் சட்டை செய்யவில்லை. "இந்த பாடலின் உள்ளர்த்தம் அவர்கள் சுதந்திரத்தை விரும்பி தனித்தனியே பிரிந்து செல்ல விரும்பிகிறார்கள் எனினும் அவர்களால் பிரிய முடியவில்லை என்பதை சூசகமாக சொல்கிறார் இயக்குனர்" என்றேன். ஏதோ புரிந்தாற்போல் தலையாட்டிய ஓணானை பார்த்து சிரித்து திரையை கண்டபோது துல்க்கியின் மீசை இப்போது நித்யாவின் மேல். நித்யாவின் பல் சற்றே நீள, அவள் உருவம் மெதுவாக மாறுகிறது. நம் கண் முன்னே ஃப்ரெட்டி மெர்குரி (Freddy Mercury). "I want to break free ... I want to break free from your lies"

 10. படம் முடிந்து உச்சா போய்விட்டு வெளிய வந்த ஓணானிடம் அடுத்தது என்ன என்று கேட்டபோது 'வேறென்ன ஓகே கண்மணிதான்' என்றது. "என்னப்பா ஒளர்ற" என்று கேட்டபோது, "இப்போதுதான் நூறு நாள் காதல் பார்த்தோமே" என்று சொல்லியது. ஓணானுக்கும் அல்சைமர்ஸ் இருப்பதை நினைத்து என் கண்ணில் தண்ணீர். அணிந்த பான்டும் ஈரமாவதற்கு முன் நானும் உச்சா போக ஆயத்தமானேன். ஓணான் "100 days of love" காண்கிறோம் என்று மறுபடியும் ஓகே கண்மணி காண உள்ளே சென்றது.
இதையும் படிக்கலாம்:


உதவி :
 1. 100 days of love - நூறு நாள் காதல். இங்கே பார்க்கவும்.
 2. அலைபாயுதே மாதவன் சிகப்பு சட்டை - இங்கே பார்க்கவும்.
 3. மணி சார் - மணி ஐயா. இயக்குனர் மணிரத்தினத்தின் புனைப்பெயர்.
 4. சால்வடோர் டலியின் ஓவியம் - இங்கே பார்க்கவும்.
 5. வேதம் புதிது சத்யராஜ் - இங்கே பார்க்கவும்.
 6. அல்சைமர்ஸ் (Alzheimer's) - ஒரு மனோ வியாதி. மேலும் படிக்க.
 7. பாவமுலோன - கர்நாடக சங்கீதத்தில் ஒரு புகழ்பெற்ற கீர்த்தனை. இங்கே பார்க்கவும்.
 8. டப்ஸ்டெப் (dubstep ) - இங்கிலாந்தில் பிறந்த ஒரு மேற்கத்திய இசை வகை. மேலும் படிக்க ...
 9. pun (பன்) - சிலேடை.
 10. கரியோகே (karaoke) - திரையில் வரும் வரிகளை பார்த்து பாடுவது. மேலும் படிக்க...
 11. குயினின் (Queen) "ஐ வான்டு ப்ரேக் ஃப்ரீ (I want to break free)" - இங்கே பார்க்கவும்.
 12. I want to break free ... I want to break free from your lies - நான் விடுதலை பெற வேண்டும்... உன் பொய்களிலிருந்து விடுபட வேண்டும்.
 13. துல்க்கி - துல்கர் சல்மானின் செல்ல பெயர்.
 14. நித்யா - நித்யா மேனோன். படத்தின் கதாநாயகி.