Friday, April 17

புரட்சிகரமான ஓவியம் நா. பிச்சமூர்த்தி சிறுகதை (Puratchigaramaana Oviyam by Na. Pichamurthy Review)புரட்சிகரமான ஓவியம்

நா. பிச்சமூர்த்தி சிறுகதை

எந்த வித முன்னுரயும் இல்லாமல் ஒரு கடிதத்தில் துவங்குகிறது.  யார் யாருக்கு எழுதுகிற  கடிதம்?ஒவிய விமர்சகர் சுதா ஷர்மா எழுதுகிறார். பால் ஸேஸானுக்கு.


கவனத்தை ஈர்க்க்க இதை விட அருமயான களம் தேவையா? நா. பிச்சமூர்தியின் 'புரட்சிகரமான ஓவியம்' ஒரு அற்புதமான கற்பனை. கற்பனை என்றுதான் தோன்றுகிறது. சிறுகதைகளின் முக்கிய குறிக்கோள் வாசிப்பவரின் கவனத்தை ஈர்ப்பதெனில் இக்கதை அதை மட்டும் செய்யாமல், கடைசி வரி வரை அதை தக்க வைத்தும் கொள்கிறது. பல சிறுகதைகள் படிக்கும் பொழுது நடுவில் சில வரிகளையும் வார்த்தைகளையும் தவிர்த்து விட்டு வசனப்பகுதிக்கு தாவுவது என் பழக்கம் (கோபிக்க வேண்டாம்). வாழை மரம் எப்படி இருந்தது, வெண்டைக்காய் எப்படி முளைத்தது, இதெல்லாம் சிறுகதைக்கு அவசியம்தானா?

தேவையில்லாத காட்சிகளுக்குள்  இறங்காமல் நெத்தி அடியாக கதைக்கு பிள்ளையார் சுழி போடுவது சுதா ஷர்மாவின் கடிதம். யார் இந்த சுதா ஷர்மா? கடிதத்தில் உள்ள விலாசத்தின்படி அவர் ஒரு ஒவிய விமர்சகர். ஒவியர் அல்ல. விமர்சகர். நமக்கு அறியாமல், சட்டைப்பையில் என்றோ வைத்த 100 ரூபாய் திடீரென்று கிடைத்ததுபோல் ஒரு அற்ப சந்தோஷம் எனக்கு. இதில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது? இதுபோன்ற கதாப்பாத்திரங்கள் சிறுகதை உலகில் மிக அரிது. அதுவும் அவசியமில்லாத பீடிகைகள் இன்றி ஒரு அறிமுகம். சபாஷ். அதென்ன விமர்சகர்? அதையும் பிச்சமூர்த்தி எடுத்துரைக்கிறார் அழகாக.

தலைப்பில் கூறப்பட்டுள்ள ஓவியம் தான் இந்த கதையின் கரு. அப்படி என்ன சிறப்பு இந்த ஓவியத்தில்? வரைந்தவனுக்கே தெரியாமல் ஜனித்த ஒவியம் அது. அதிலும் சிறப்பு - வரைந்தவன் ஓவியனே அல்ல. இந்த அற்புத படைப்பை கண்டெடுக்கிறார் சுதா ஷர்மா. ஒவியனுக்கும், விமர்சகனுக்கும் உள்ள இந்த நூலளவு வித்தியாசத்தை பிச்சமூர்த்தி எடுத்துரைக்கும்போது - வாழைப்பழத்தில் ஊசி. பிறக்கும் சிசுவிலிருந்து பறக்கும் இரயில் வரையில் எல்லாவற்றிற்கும் பெயரிட்டு பழக்கப்பட்ட மானுட அறிவு, கலைக்கும் பெயரிடுவது ஏன்? பெயரிடுவதால் அந்த கலையின் மதிப்பு குறைகிறதே அன்றி கூடுவதில்லை. பெயரறியாத ஓவியங்களை காணும்போது நாம் அதன் உன்னதத்தை மட்டுமே ரசிக்கிறோம். வேறு எதை பற்றியும் சிந்திப்பதில்லை. அந்த அனுபவத்தின் முக்கியதுவமும் இந்த கதையில் அழகாக கூறப்படுகிறது.

ஆனால் ஏன் எப்போதும் ஒரு 'புரட்சி'? தமிழ் எழுத்தாளர்கள் மிகவும் தாராளமாக பயன் படுத்தக்கூடிய பல சொற்களில் இதுவும் ஒன்று. தலைப்பில் இச்சொல்லை கண்டவுடன் 'அட போங்கப்பா' என்றுதான் தோன்றுகிறது. புரட்சி என்பது சமூகக்கொடுமையையும், ஏழைகளின் போராட்டத்தையும் தான் நினைவில் அமர்த்துகிறது. அவ்வாறாக என் மனம் பண் படுத்தபட்டிருக்கிறது என்பதே உண்மை. இக்கதையும் அதற்க்கு விதி விலக்கல்ல. பூசணிக்காயை சோற்றில் மறைக்காமல், தக்காளியை மறைத்திருக்கிறார் பிச்சமூர்த்தி. ஆனால் தக்காளி சாதமாய் இருக்க வேண்டியது, தக்காளியும் சோருமாய்  இருப்பதுதான் வருத்தம். துடக்கத்தில் என் ஆர்வத்தை தூண்டிய களம், அட இவ்வளவுதானா என்று கேட்க வைத்துவிட்டது. ஒரு குறுங்கதையாக இருந்திருக்குமெனில் இன்னும் பல சின்ன சின்ன விஷயங்களை நாம் அனுபவித்திருக்க முடியும். ஆனால் இந்த அளவிற்கு அதன் பாதிப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. ஒரு அர்ப்ப ஆசைதான் ... வேறென்ன.

எங்கோ பாரிஸில் நடக்கக்கூடிய ஒரு ஒவியப்புரட்சிக்கு (ஆமாம் ... புரட்சிதான் ... சரித்திரத்தை மாற்ற முடியாதே), இங்கே இருக்கும் ஒரு சாதாரண தொழிலாளியின் அன்றாட வேலை வித்தாக அமைவது, அதன் மூலம் ஒரு கற்பனை உலகத்திற்கு நம்மை கொண்டு செல்கின்ற இக்கதை, சிறுகதை மட்டும் அல்ல, சிறந்ததும் கூட.

Read this too:

My review of the Ponniyin Selvan play by Magic Lantern.

உதவி:
  1.  புரட்சிகரமான ஓவியம் - இங்கே படிக்கவும்.
  2. பால் ஸேஸான் - இங்கே பார்க்கவும்.
  3. ஒவியப்புரட்சி - இங்கே பார்க்கவும்.