Saturday, April 25

மலச்சிக்கலை போக்க சிறந்த 10 வழிகள்

Click Here for the English Version

என்றாவது ஒரு இரவு, கல்யாணத்திலோ, கருமாதியிலோ, காட்டுத்தீனி தின்றுவிட்டு மறுநாள் காலை அடிவயிற்றில் கடமுட என்று சத்தம் கேட்க, வீறுகொண்ட வேங்கையாய் கழிப்பறையை நோக்கி ஓடி, உள்ளே இருந்து "ஐயோ ... எவ்ளோ முக்கினாலும் வரலியே" என்று நீங்கள் கதரியதுண்டா?
உங்களுக்கு ஒரு நற்செய்தி.

நீங்கள் தனி ஆள் அல்ல. நா அடக்கம் இல்லா நம்மைப்போல் நால்வருக்காக கண்டுபிடித்தேன் ஒரு தீர்வை. இசை. ஆம். இசைதான் உலகில் சிறந்த மருந்து (சிலர் சிரிப்பு என்று கூறுவார்கள் அது நமக்கு அவசியமில்லை). அந்த இசையைக்கொண்டு யான் கண்ட தீர்வில், சிறந்த பத்து பாடல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். மலச்சிக்கலோடு தங்களின் மனச்சிக்கலும் தீரட்டும்.

10. புத்தாண்டின் முதல் நாள் இது - இசை

இசை என்ற படத்தின் பாடலிலிருந்து நம் இசை பயணத்தை ... மன்னிக்கவும் ... மருத்துவத்தை தொடருவோம். எஸ்.ஜே. சூர்யாவின் இசை அமைப்பாளர் அவதாரம் நல்ல பாடல்களை தந்ததா என்ற கேள்விக்குள் நாம் செல்லாமல், அந்த பாடலின் பயனை நாம் போற்றுவோம். பொதுவாக சூர்யா முக்கி முக்கி பேசும் வசனங்களே நம் "போக்குவரத்துக்கு" சாதகமாக இருந்தாலும், இந்த வரிசைப்பட்டியலில் பாடல்களை மட்டுமே கணக்கிலெடுத்துகொள்கிறோம். ஆனால் இந்த பாடலில் முக்கலுக்கு குறைச்சல் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். துடக்கம் முதல் இறுதி வரை ஆட்டோ ட்யூன் செய்யப்பட்டாலும் நீங்கள் அந்த உணர்ச்சியை அவ்வாறே அபகரித்து, மூச்சை அடக்கி பாடினீர்களானால், உங்கள் அடைப்புகள் அனைத்தும் அகலும். சிக்கல்கள் சிதறும். சமீபத்தில் நான் கண்டறிந்த ஒரு அரிய பொக்கிஷம் இது.


9. வேலையில்லா பட்டதாரி - வேலையில்லா பட்டதாரி

மூச்சை பிடித்துக்கொண்டு இருப்பதெல்லாம் சரி. ஆனால் சில நேரங்களில் உங்களின் கோபமும் ஆக்ரோஷமும் தருகின்ற விளைவுகள் அபாரமானது. அதற்க்கு நீங்கள் ஒரு மாமாங்கம் மூச்சை பிடித்தாலும் உதவாது. அது போன்ற சமயங்களில் இந்த பாடல் நமக்கு பெரிதும் உதவுகிறது. அனிருத்தின் குரலில் உள்ள அந்த வெறி படத்திற்கு சாதகமாக இருந்ததோ இல்லையோ, இவ்விடத்திற்கு சாதகமாக இருக்கிறது. முக்கியமாக அவர் "வீ ஐ ப்பீ" என்று அழுத்தி கூறுகையில், ஒரு வேளை இதற்காகத்தான் அப்படி பாடியிருக்கிராரோ என்ற எண்ணம் எழும். என்ன எழுந்தால் என்ன, விழுவது விழுந்தால் நமக்கு நிம்மதி தானே.


8. யம்மாடி ஆத்தாடி - வல்லவன்

டி. ராஜேந்தரின் கானாம்ருதத்தில் நனையும் பொழுது நம் அழுக்குகள் நீங்கி தூய்மை அடைகிறோம் என்று நான் சொன்னால் உங்களுக்கு வாந்தி கூட வரலாம். ஆனால் இந்த பாடலின் மருத்துவ குணங்களை சொல்லி மாளாது. இந்த பாடல், தந்தை மகனுக்கு ஆற்றிய உதவியோ இல்லை மகன் தந்தைக்கு ஆற்றிய உதவியோ அறியேன். ஆனால் இவ்விருவரும் நமக்காற்றும் உதவி இன்றியமையாதது. "யம்மாடி ஆத்தாடி" என்ற வரிகள் தொட்டு "யம்மா யம்மா" என்ற கூக்குரல் வரையில் எத்தனை எத்தனை தீர்வுகள், உங்கள் மலச்சிக்கலை போக்க, ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் அந்த "யம்மா யம்மா"வை, அவர் பாடுகின்ற அத்தனை விதத்திலும் நாம் பாடும்போது நம் அடி வயிற்றில் ஏற்படும் மாற்றம் இருக்கிறதே ... மருந்தாவது மண்ணாங்கட்டியாவது...


7. வருது வருது விலகு விலகு - தூங்காதே தம்பி தூங்காதே

இந்த பாடல் இங்கே இடம் பெற்றிருப்பதற்கான ஒரே தகுதி அதன் பல்லவியில் உள்ள வரிகள் மட்டுமே. இந்த பாடலை பாடியது எஸ்.பீ.பி என்பதால் முக்கி முக்கி நாம் பாடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை (நீங்கள் முயற்ச்சிக்கலாம், ஆனால் அது எந்த வகையில் பயன் தரும் என்று கூற முடியாது). இருந்தாலும் இந்த பாடல் வரிகள் நமக்கு தரும் அந்த உந்துதலால் நம்முடைய வேதனை வெகு சீக்கிரம் நிவர்த்தி அடையும். அரங்கேற்ற வேளை படத்தில் இளைய திலகம் இதை ஏற்கனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நீங்கள் பல்லவியை பாடிக்கொண்டே இருந்தால், மற்றது போய்க்கொண்டே இருக்கும்.
6. மச்சகன்னி ஒட்டிகிச்சு - நான் அவன் இல்லை

தலைவரை வணங்கும் நேரம் வந்துவிட்டது. ஆம். இந்த பாடலின் இசை அமைப்பாளர் - விஜய் ஆண்டனி என்கிற அந்த மாமேதை தான். இவ்வகை (எவ்வகை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்) பாடல்களின் இசை வல்லுனனாய் ஓங்கி நிற்கும் விஜய்க்கு நாம் காலம் முழுக்க கடமை பட்டிருக்கிறோம். இந்த பாடலில் உள்ள அருமை பெருமைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அடிவயிற்றை பிடித்துக்கொண்டு, தொண்டையை குறுக்கிக்கொண்டு, நம் கஷ்டத்தை உணர்ந்ததுபோல் "உம்மா" என்றும், "கடிச்சிக்கவா" என்றும் இவர் பாடும்போது இதில் ஒரு பங்கு நாம் செய்தால் நம் கஷ்டங்கள் அனைத்தும் காற்றோடு காற்றாய் பறந்து போயிருக்குமே என்று நமக்கு தோன்றும். அது முற்றிலும் உண்மை. விஜய் ஆண்டனியின் இந்த "முக்கி"ய குரலுக்கு நான் ரசிகன்.
5. ஆருயிரே - குரு

"முக்கி"ய விர்ப்பன்னர்களை காணும் நேரம் வந்துவிட்டது. ரகுமானின் இசை விசிறிகள் என்னைக்கண்டு கொந்தளிக்க வேண்டாம். அவர் நல்ல இசை அமைப்பாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்காக, அவர் பாடல்களின் இன்ன பிற பயன்களை எடுத்துரைக்காமல் இருக்க முடியாது. இந்த குறிப்பிட்ட பாடலில் அவரின் குரலும் அந்த ஸ்ருதியும் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது நம்முடைய அதிர்ஷ்டமே. பெண் குரலை ஒதுக்கிவிட்டு பார்ப்போமாயின், இதில் நமக்கு பயன்படுத்துவதற்கு தேவையான பல இடங்கள் இருக்கிறது. முக்கியமாக "என்னை விட்டு போனால் ..." என்று சரணத்தில் தொடங்கும் வரிகள் முதல் அந்த உச்சஸ்தாயியை எட்டும் வரிகளாகட்டும், பின்னே வருகின்ற ஸ்வரங்களாகட்டும், எல்லாமே நமக்கு மருந்துதான். அப்படியே மேல் ஸ்ருதியிலே நீங்கள் பாடும்போது, கீழ் பகுதியில் பாரங்கள் குறையும். மன நிம்மதி அடைவீர்.
4. ஏக் தோ தீன் சார் - அஞ்சான்

பாடகருமில்லை, இசை அமைப்பாளருமில்லை (என்னவோ இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கு இந்த தகுதிகள் அனைத்தும் அவசியம் என்பது போல) அனால் நான்காம் இடத்தை பிடிப்பவர் சூர்யா. நடிகர் சூர்யா. பல பேரின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளான இப்பாட்டில் நமக்கு தேவையான பல தீர்வுகள் இருப்பதை கண்டறியும்போது நம் கோபங்களும் வெறுப்பும் காற்றோடு காற்றாக பறக்கிறது. அவ்வகையில் சூர்யா இந்த பாடலை செதுக்கியிருக்கிறார். தன் உடற்க்கட்டைப்போல. என்ன இல்லை இந்த பாடலில். உங்களுக்கு பிடித்த கதாநாயகன் "ஒண்ணு ஒண்ணா" சொல்லித்தருகிறார். கற்றுக்கொள்ள வேண்டியதுதானே. அதுவும் அவர் சொல்லிக்கொடுப்பது "ஏக்" "தோ" மற்றும் அல்ல. "தீன்" "சார்"-ம் கூட. அத்தனை வலிமை பெற்ற பாடல் இது.
3. ஹே ரம்மு ரம்மு - கூலி

ஊதிப்போன வயிற்றிலிருந்து வெளியேற்றம் நடத்த ஊதி ஊதி புகை குடிக்கும் குடிமகன்களே, இதுதான் உங்களுக்கு சரியான பாடல். இந்த பாடல் என் சிறுவயதை ஞாபகபடுத்துகிறது. ஆஹா. குந்திக்கொண்டு அழகாக மடை திறந்த வெள்ளமாய் "போன" அந்தக்காலம். ஆனால் எல்லா நாளும் மடை திறந்ததில்லை. திறந்தாலும் வெள்ளம் வந்ததில்லை. வெள்ளம் என்ன ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்ததில்லை. அனால் என்னை காப்பாற்றிய அந்த மகான் ... சுரேஷ் பீட்டர்ஸ். ரகுமானுடன் எப்போதும் இருக்கும் அதே சுரேஷ் பீட்டர்ஸ் தான். "ரம்மூ" " தம்மூ" என்ற இந்த பாடலில் அவர் உதிர்க்கும் முத்துக்களை கேட்டு அப்படியே பாடினால் போதும். மடையும் திறக்கும், வெள்ளப்பெருக்கும் நடக்கும் (வெள்ளம் என்பது ஒரு உருவகத்திர்க்காக பயன் படுத்தப்பட்ட சொல்லே அன்றி அது உங்களின் "போ"க்கை குறிப்பதர்க்கல்ல. அது பனிக்கட்டியாகவோ, பசையாகவோ கூட இருக்கலாம்). விஜய் ஆண்டனி போன்ற ஆட்களுக்கு குருவாக இருந்த சுரேஷுக்கு ஒரு சலாம்.
2. போகாதே - தீபாவளி

சில பாடல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். சில நிம்மதி தரும். பின் கோபம், எழுச்சி இத்யாதி இத்யாதி போன்ற உணர்வுகளை தர பல பாடல்கள் இருந்தாலும் இந்த பாடல் நமக்கு தருவது... கண்ணீர். பயப்பட வேண்டாம். அது ஆனந்த கண்ணீராகத்தான் இருக்கும். இந்த பாடலுக்கு உண்டான சக்தியை குறைத்து எடை போட முடியாது. குரலோ, ஸ்ருதியோ, வரிகளோ... எல்லாமே செம்மையாக சேர்க்கப்பட்டு, ஒரு பதம் கூடாமல் குறையாமல், அருமையாக கலக்கப்பட்ட அற்புதம் இந்த பாடல். போகாதே என்று சொன்னாலும் நாம் போய் கொண்டிருக்கும் அந்த தருணத்திற்கேற்ப யுவனின் குரலில் உள்ள அந்த ஏக்கம், இது வரை அடிவயிற்றின் உள்ளே அக்கிரமம் நடத்திய அந்த துஷ்டனை நாம் முழு மூச்சுடன் வெளியேற்றி முடிக்கும் பொது உண்டாகும் அந்த ஆனந்தம்... அதன் சான்றிதழாய் வெளிவரும் நீர் (கண்ணீரை சொன்னேன்) ... ஆஹா ... மிக்க நன்றி யுவன் ... மிக்க நன்றி
முதலாம் இடத்தை பார்பதற்கு முன்பு சில கௌரவ வேட்பாளர்களை குறிப்பிட வேண்டும். நூலளவில் இவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறும் தகுதியை இழந்திருக்கிறார்கள்

கொம்பே சுறா - மரியான்
கலாசலா - ஒஸ்தி (டி.ஆரின் பகுதி மட்டும் கவனிக்க)
பூமிக்கு வெளிச்சமெல்லாம் - டிஷ்யூம்
முதலாம் இடத்தில் ....

1. சாத்திக்கடி போத்திக்கடி - சுக்ரன்

அலால கண்டா ... (இவ்வகை) பாடலுக்கு தகப்பா ... விஜய் ஆண்டனி ... உங்களை நான் வணங்குகிறேன். இந்த பட்டியல் முழுவதயும் விஜய் ஆண்டனி சொரிந்த இசைத்துளிகளை வைத்தே முடித்திருக்கலாம். ஆனால் இன்னபிற இசைக்கலைஞர்களின் உழைப்பை தாழ்த்தி மதிப்பிட்டுவிடுவோமோ என்ற ஐயத்தில் அதை நான் கடை பிடிக்கவில்லை. இந்த பாடலை பற்றி நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? விஜய் ஆண்டனியின் முதல் முயற்சியிலேயே (சின்ன பாப்பா பெரிய பாப்பாவை தவிர்த்து நோக்கினால்) தான்தான் ராஜா என்று நிரூபித்து விட்டார். சிறு வயதில் இந்த படத்தை கண்டபின் என் மனதிற்குள்ளேயே குடிகொண்ட இந்த பாடல், வயிற்றுக்குள்ளே இருந்த பல பல "சமாச்சாரங்களை" வெளியேற்ற உதவி செய்தது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வகையில் என் வாழ்கையில் "முக்கி"ய பங்களித்த இப்பாடல் காலத்தை கடந்து தன் உதவும் கரங்களை நீட்டுகிறது. விஜய் ஆண்டனி. வாழ்க நீ எம்மான்.
"பின்" குறிப்பு: மலச்சிக்கல், வாய்வு, இதற்க்கு தீர்வு சொல்ல நான் வலம்புரி ஜானோ, இல்லை அந்த சன் டி.வி தாத்தாவோ அல்ல. எந்த வித செயல்பாடு கோளாறுகளுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது. இதன் வாயிலாக தங்களின் திருவாய் மலர்ந்து சிரித்திருந்தீர்களேயானால் அதற்க்கு மட்டும் நான் பொறுப்பேற்று நன்றியை தெரிவிக்கிறேன்.

இதையும் படிக்கலாம்:

ஓகே கண்மணி படத்தை பற்றிய என் பார்வை.

உதவி:
  1.  சூர்யா முக்கி முக்கி பேசும் வசனங்களே - இங்கே பார்க்கவும்.
  2.  அரங்கேற்றவேளை படத்தில் இளைய திலகம் - இங்கே பார்க்கவும்.
  3.  தன் உடற்க்கட்டைப்போல - இங்கே பார்க்கவும்.
  4.  ஏக் தோ தீன் சார் - (ஹிந்தியில்) ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.