Saturday, May 23

சில நேரங்களில் சில கணிதர்கள்


தமிழ் நாடே எதிர்ப்பர்த்துகொண்டிருந்த மாபெரும் தீர்ப்பு வந்த போது, குதித்து கும்மாளம் அடித்து கொண்டிருந்தவர்கள் வாயில் வடையை வைத்து அடித்ததுபோல் ஒரு செய்தி வந்தது.

தீர்ப்பில் பிழை.


சாதரணமாகவே ஒண்ணும் புரியாத மொழியில் 9000 பக்கம் எழுதப்படும் தீர்ப்பை படிப்பதே ஒரு மாபெரும் செயல். அதையும் தாண்டி அதிலுள்ள பிழையை கண்டெடுக்கும் நக்கீரர்கள் இருக்கிறார்களா என்று எண்ணி, வியந்து, விண்வெளியையே தொட்டுவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருவிளையாடல் படத்தில் நக்கீரராக ஏ.பி.நாகராஜன்

இத்தனைக்கும் அப்படி என்ன பிழை கண்டார்கள்? அச்சுப்பிழையா? எழுத்துப்பிழையா? இல்லை ... அதையெல்லாம் தாண்டி ... நடக்கூடாதது நடந்துவிட்டது ... கணக்கு பிழை ... ஆம். எய் ராக்காயி, மூக்காயீ, செல்லாயீ கணக்கு தப்பா போச்சாம்டீ ..

பள்ளிப்பருவத்திலிருந்து , மூணு கண்ணன் வாரான், பூச்சாண்டி வாரான் என்ற பயபீதியை தூண்டும் அச்சுருத்தல்களுக்கெல்லாம் அஞ்சா சிங்கமாய் இருந்த நாம், கணக்கு பரீட்சை வருதுடா என்று சொன்னால் ஒண்ணுக்கு போவதற்கு கூட வெளியே வர பயப்படுவோம். இத்தனைக்கும் நாலாம் வகுப்பு வரை "ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி பாடு" என்று முருகன் அவ்வையை கேட்டதுபோல் செல்லமாக கேட்டுகொண்டிருந்த கணிதம், திடீரென்று ராசையா பிரபுதேவாவைப்போல் "x, y, z" என்று அடுக்கடுக்காக சேர்த்து அடிக்கும்போது, ஏதோ ரஜினி பாபாஜீயை கண்டதுபோல், ஒன்றும் புரியாமல், ரூம் போட்டு அழுதிருப்போம்.

பாபா படத்தில் ரஜினிகாந்த்

இதில் 50 பேர் செய்த வேலையை 5000 பேர் எத்தனை நாட்களில் செய்வார்கள் என்ற கேள்வி வேறு. "செஞ்ச வேலைய திருப்பி செய்யறதுக்கா காசு கொடுத்து படிக்கிறோம்" என்று, அரிஸ்டாட்டிலே வியந்து போகும் ஒரு வேதாந்த தத்துவத்தை கக்கியதாக நினைத்து, நமக்குள்ளேயே ஒரு நமட்டு சிரிப்பும் சிரித்திருப்போம். அதே கணக்கு மீண்டும் இங்கே, இந்த தீர்ப்பில் தலை தூக்கிய போது, பீதியுற்று படுக்கையில் விழுந்தவர்கள் எண்ணிலடங்கா. நானும் அதில் ஒருவன் என்று உங்களுக்கு சொல்லி புரியவேண்டியதில்லை.

ஒரு உயர் நீதிமன்ற தீர்ப்பில் இது கூடவா பாக்க மாட்டாங்க? என்று பலர் கேள்வி கேட்டார்கள். அவர்கள் பாவம். அல்ஜீப்ராவும், ஆர்க்கமிடீசும் அஞ்சால் அலுப்பு மருந்தால் தீர்க்கப்படும் வியாதிகள் அல்ல என்று தெரிந்தே வக்கீலுக்கு படித்தவர்கள்."suo motu" "amicus curiae" போன்ற சொற்களை தினம் படித்து அர்த்தம் புரியாமல், தீர்ப்பு எழுதும் நேரத்தில், கிடைத்த இடங்களில் எல்லாம், "இங்கி பிங்கி பாங்கி" போட்டு, லத்தீன் சொற்களால் நிரப்பி, சம்பந்தமே இல்லாத பல தேவையில்லாத வாக்கியங்களை அதில் சேர்த்து, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி தீர்ப்பு எழுதும் அவர்களிடம் - கணக்கு சரி இல்லப்பா என்று சொன்னால் - கோவம் வருமா வராதா?. இதையெல்லாம் தாண்டி கணக்கு பார்ப்பதா அவர்கள் வேலை?

நம் நீதிமன்றம் அவ்வளவு எழையாகவா இருக்கிறது? தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து எப்போதும் நாம் பார்க்கக்கூடிய கதாப்பதிரங்களில் கணக்குப்பிள்ளை மிக முக்கியமானவர். அவர் பெயரில் மட்டும்தான் கணக்கு இருக்குமே தவிர இதுவரை அவர் கணக்கு போட்டிருக்கவே மாட்டார். இத்தனைக்கும் படிப்பு ஏழாம் கிளாசோ எட்டாம் கிளாசோ. ஆனால் அவரை நம்பாத ஜமீன்தார்களும், எஜமானர்களும் இருக்க முடியாது. அப்படியாப்பட்ட ஒரு கணக்கு பிள்ளை கூடவா நமது நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை? ஒரு தேர்ந்த ஆங்கில கவிதையின் சொற்களில் : "அசிங்கம் அசிங்கம் நாய்க்குட்டி அசிங்கம்".

இந்த பிழையை கண்டெடுத்த மகான்களை என்னென்று கூறுவது. கணித மேதை ராமானுஜனே கண்டு அஞ்சும் அதி மேதாவிகள் அல்லவா அவர்கள். ராமனுஜன் 1729 வரை தன்னை நிறுத்திக்கொண்டார். அதை கண்டுபிடித்தபோதே பக்கத்தாத்து மாமி "வத்தல் காய போடறச்சே வெயில்ல ரொம்ப நேரம் நின்னுட்டியாடா கண்ணா?" என்று கேட்டிருப்பார்.

கணித மேதை ராமானுஜன்
ஆனால் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும் பிழையை கண்டெடுத்திருக்கிறார்கள். பேப்பரில் கண்டாலே பேயறைந்ததுபோல் வாயை பிளக்கவைக்கும் அந்த எண்களில் எத்தனை கமாக்கள், சைபர்கள் என்று நாடி ஜோசியம் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கொடுமை போறாதென்று, நூடுல்ஸ் மேல் விழுந்த இடியாப்பமாய் "decimal point" வேறு. "மச்சான்!! என்னடா இவ்ளோ பெரிய படிப்பெல்லாம் படிசிர்க்க?" என்று என் நண்பர்கள் கதறுவது, அசரீரியாய் ஒலிக்கிறது. நாளை விஜய் அவார்ட்ஸ்-இல் "சிறந்த கணக்கு பிள்ளை அவார்டு" என்று ஒன்று தந்தார்களானால் (அவர்கள் நினைத்தால் முடியாததா என்ன?) அதற்க்கு தகுந்த வேட்பாளர்கள் இவர்களே.

இத்தகைய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நம் நீதித்துறையை காப்பாற்ற எங்கிருந்தாவது, அக்குளிடுக்கில் குமாஸ்தா பையை வைத்துக்கொண்டு, மனோபாலா உருவத்தில் ஒரு கணக்குபிள்ளை வருவான். அதுவரை உங்கள் குழந்தைகள் "நான் கணக்கு நல்லா படிச்சா, உன்ன ஜெயில்ல போட்டுடுவேன் பாத்துக்க" என்று மிரட்டுவது நிச்சயம். உஷார் பெற்றோர்களே.


இதையும் படிக்கலாம்: