Saturday, June 20

கோழி செய்திகள் : சூர்யாவின் அடுத்த பட அவதாரம்

ஒவ்வொரு படத்திலும் தான் பூணும் அவதாரம் எத்தகையது என்பதில் மெனக்கெடும் வெகு சில திரைப்பட கலைஞர்களில் முக்கியமானவர் சூர்யா. தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம் ஏற்க வேண்டும் என்பதற்காக வெகுவாக ஆராய்ச்சி செய்பவர் அவர்.
ஆரம்பத்தில் பேரழகன், நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு நடித்த சூர்யா, சமீப காலங்களில் பிறரையும் வருத்திக்கொண்டிருக்கிறார் தன் கதாப்பாத்திரங்களின் வாயிலாக. "ஒரு கலைஞன் ஒரே கட்டத்தில் இருக்க கூடாது ... அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக்கொன்டே இருக்க வேண்டும்" என்று சூர்யா கூறுகிறார்.

தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே வெளிவருதற்கு முன்பு நூறு நாட்கள் ஓடிய படம் "அஞ்சான்". அதில் சூர்யாவின் தோற்றம் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் கதாநாயகி சமந்தாவை விட அதிக காட்சிகளில் தோன்றி அபாரமாக நடித்த, அந்த "பல் குத்தும் குச்சி" மிகவும் பிரசித்தி பெற்றது. "புகை பிடிப்பதற்கு எதிராக கதாநாயகன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதை செய்தோம்" என்று அக்குச்சியை அறிமுகப்படுத்தி "ட்யூன்" செய்த இயக்குனர் லிங்குசாமி கூறினார். புகை பிடித்தலுக்கு எதிராக காட்டப்படும் "நான் தான் முகேஷ்" காணொளியை விஞ்சிய ஒரு அருவருப்பை தந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது அஞ்சான் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் தன் அடுத்த படமான "மாசு (எ) மாசு கட்டுப்பாட்டு வாரிய"த்தில் காதில் "safety pin" குத்திக்கொண்டு, கலையுலகில் புரட்சியை ஏற்படுத்தினார். இதை பார்த்து பல சூர்யா ரசிகர்கள் காதில் "safety pin" குத்திக்கொண்டு சீபிடித்து அழுகிப்போன காதுடன் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இதை பற்றி சூர்யாவிடம் கேட்டபோது "ஜோ நடித்த 36 வயதினிலே படத்திற்கு பிறகு தாய்மார்கள் வெகுவாக பயன்படுத்தும் பொருட்களை என் படத்தில் காண்பிக்க முயற்சி செய்யவுள்ளேன். இனி வரும் படங்களிலும் சம்கி, டப்சி கம்மல், ரவிக்கை ஊக்கு, ஹேர் பின் போன்ற பல சாதனங்களை என் உடலில் பொருத்தி நடிக்கவுள்ளேன்" என்று கூறினார். இதனால் ஏற்படும் வலிகளை பொறுக்க தன் 6-பேக்கை 8-பேக்காக மாற்றவுள்ளார். "கலைக்காக தன்னையே அற்பணிக்கும் என் குருநாதர் கமல்ஹாசன் தான் எனக்கு முன்னோடி" என்றும் கூறினார்.

இது பற்றி அவர் குருநாதர் கமல்ஹாசனிடம் வினவியபோது " என் உதிரத்தெளிப்பில் விதைத்து எழுந்து உயிர்விட்ட சதையின் திசுக்களில் அதிரும் ரத்த நாணங்கள் ..." என்று ஏதேதோ பேசிக்கொண்டு போக "ஒன்னுமே புரில சார்" என்று நாங்கள் சொன்னோம். கோபத்தில் "என் கலையுணர்வை மதிக்க தெரியாத ஊரில் நான் ஏன் இருக்க வேண்டும். என்னை பாராட்டும் இடத்திற்கு நான் செல்லப்போகிறேன். அமெரிக்காவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்" என்று எழுந்து சென்றுவிட்டார். மாபெரும் கலைஞரை அவமதித்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அருகிலிருந்த, கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான, கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் "என்ன சொன்னார்" என்று கேட்டோம். தனக்கு இருக்கும் இலக்கிய பரிச்சயத்தையும், மொழி ஆளுமையையும், இலக்கண அறிவையும் பயன்படுத்தி "எனக்கும் புரிலீங்க" என்று கூறினார்.

சரி இங்கே தான் ஒன்றும் கிடைக்கவில்லை என்று சூர்யாவின் தந்தையான சிவகுமாரிடம் சென்று இதை பற்றி விசாரித்தோம். "இது போன்ற விஷயங்கள் பிசிராந்தையார் காலத்திலிருந்தே இருந்து வருகிறது" என்று கூறி சங்கத்தமிழ் பாடல்களை கூறத் தொடங்கினார். தமிழ் கலைக்கும் அதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாததால் அதை நாங்கள் கவனிக்கவில்லை.

என்ன இருந்தாலும் சூர்யாவின் கலைதாகத்தையும், கலைதியாகத்தையும் அதற்காக அவர் வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் அர்பணித்துக் கொள்வதையும் நாம் வெகுவாக பாராட்ட வேண்டும். இனி வரும் படங்களில் தாய்மார்களை கவரும் பல்வேறு பொருட்களையும் வெளிக்கொணர்ந்து ஒரு புதிய சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள் சூர்யா.

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒரு அபத்தமான பதிவு என்று இன்னும் உங்களுக்கு புரியவில்லை எனில் இதை நீங்கள் படிக்க வேண்டாம் :P