Sunday, July 5

ஒரு சொல் போதும் - குறுங்கதை

"ஆம்"

அந்த ஒரு சொல் போதும். இன்று, இந்த க்ஷணம், அந்த ஒரு சொல்லுக்கு இருக்கும் சக்தி அதீதமானது.

விசுவமே வில்லில் செருகிய அம்பாய், எய்யப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் இந்நேரம் நொடிகள் மாமாங்கமாய் அவதாரம் எடுக்கிறது. அவன் தேகத்தில் இதுவரை அடை காக்கப்பட்ட உயிர் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த பலத்தை எல்லாம் திரட்டிக்கொண்டிருக்கிறது. சொல்லாக வெளிப்பட்டு சொர்கத்தை அடைய எத்தனிக்கிறது. அவ்வொரு சொல்லே அதன் வாகனம். அவன் வாழ்கையின் சாராம்சம்.

அவன் கண்கள் காண்பது எதிரே உள்ள இரண்டு மனிதர்களை. விதியை செயலாக்கும் காலன். தட்சணையாய் உயிர் நீக்கப்போகும் ஒரு கடா. இருவரையும் பிணைக்கிறது ஒரு கருவி. இல்லை ஆயுதம். பழுதடைந்த அரிவாள். நீர் படாத மேனியுடன் குருதியை புசித்து நரைத்த அரிவாள். அலை நனைத்த கரை போல் அதன் உடலெங்கும் ஆங்காங்கே வெண்மை படர்ந்திருக்கிறது. கைகளிலும் மனதிலும் இருக்கும் சக்தி அனைத்தும் அரிவாளில் தற்காலிகமாக குடி பெயர்ந்திருக்கிறது. வீரியம் அதிகரித்த அரிவாளுக்கு அகங்காரமும் கூடியது.

"டேய்!! இன்று நீ ... நாளை எத்தனை பேரோ? எனக்கு நல்ல வேட்டை". சிரிப்போடு சேர்ந்த ஒரு இறுமாப்புடன் அரிவாள் நினைத்து கொண்டது. அஃறிணைகளுக்கு ஏது நியாய தர்மம்? பிரயோகத்தை ஒத்து பலன் தரும் அவை மானுட அறிவின் அடிமைகள்.

அரிவாள் முத்தமிடும் கழுத்தின் மேல் படர்ந்த ரோமங்கள் வியர்வையில் நனைந்திருந்தது. அச்சத்தின் வெளிப்பாடு. உயிருக்கு பயந்த இவன் ... இந்த கடா ... வீரனல்ல. மனிதன். வீரம் என்ற போர்வையில் குரூரத்தை நியாயப்படுத்தும் மனிதனே ஆயுதத்தை ஏந்துகிறான். அரிவாளை ஏந்தும் இந்த காலனும் அதுபோல் ஒரு வீரனே. இன்று இந்த கழுத்தை உடலிலிருந்து பிரிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு தேவை அந்த ஒரு சொல்.

நாபிக்கிளைகள் உதிர்க்கும் ஒரு இலையாய்,
நாசி மயிர்கள் வருடும் கடைசி மூச்சாய்,
உடல் திசுக்களின் இறுதி அசைவாய்,
உயிரின் வெளியேற்றத்தை அறிவிக்கும் இரங்கல்  சங்காய்

அவன் ஒரு சொல், ஒரே சொல் போதும் அந்த கடாவை பலி கொடுக்க. அந்த ஒரு சொல்லே காலனின் ஆணை. கட்டிலில் படுத்துக்கொண்டே இமைகள் மறைக்கும் அரை வட்ட கருவிழிகளால், பீதி கொண்ட அந்த கடாவை காண்கிறான். கண்ணீர் ததும்பும் கண்கள் தாட்சண்யத்தை வேண்டுகிறது. அதே கண்கள் வெறுப்பை கக்கி உயிர்களை விழுங்கியதை அவன் அறிவான். அவன் ஒரு சொல் அதற்கு பழிதீர்க்கும். அதுதான் நிறைவா? தன் வாழ்கையின் பொருளா?

உள்ளத்தின் உணர்ச்சிப்பெருக்கு தாளாது அவன்  பார்வை வேறொரு திக்கை நோக்கி திரும்பி அங்கே குத்திட்டு பிம்பமாடாது நிற்கிறது. உதடு மலர்ந்து சிரிக்கிறது. மோனம். அதன் வலிமையால்

அச்சொல் அழிந்தது.
வாளேந்திய கையின் பிடி தளர்ந்தது.
கண்கள் நீர் சுரந்தது.
பல உயிர் காத்த அவன் உயிர் பிரிந்தது.

திகைப்பில் ஆழ்ந்த இருவரும் இறந்தவன் பார்வை பதிந்த திசை நோக்கி திரும்பினர். சுவற்றில் காந்தி சிரித்துக்கொண்டிருக்கிறார்.