Sunday, August 16

காதல் - தினம் - கோபால் (சிறுகதை) - 1


"நான் எல்லாத்தையும் இன்னிக்கு சொல்லிர்றேண்டா"

சைக்கிள் ஸ்டாண்டில் பதட்டத்துடன் கோபால் சொன்னதாக ராஜு சொன்னான். அவன் சொல்லப்போகிற விஷயத்தை கேட்பதற்காகவே - பள்ளியிலிருந்து வேகமாக வீடு வந்து, முகம் கை கால் சரியாக அலம்பாமல், பேகையும், டிஃபன் பாக்சையும் போட்டது போட்டபடி, "வரேம்மா!!" என்று ஒரு அரை கூவல் விடுத்து, திமு திமு வென்று படிகளில் ஒன்று தாண்டி ஒன்றாக குறி வைத்து குதித்து, "எங்கடா போற ... காபி குடிச்சிட்டு போயேண்டா?" என்ற அம்மாவின் கேள்விக்கு "சுந்தர் ஆத்துக்கு ... அங்கேயே குடிச்சிக்கறேன்" என்று சொல்லி, அவள் வசைச்சொற்கள் என் செவிகளை வந்தடையும் முன், சைக்கிளை கிளப்பி, அவள் திட்டுவது காற்றோடு காற்றாக என் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கரைந்து போய், என் குதிகால்களின் மிதியை தாங்கிக்கொண்டு "குயிக் குயிக்" என்று மூச்சுவாங்கிக்கொண்டு முன்னே செல்கின்ற சைக்கிளின் கொஞ்ச நஞ்ச ஜீவனையும் பிசைந்து பிதுக்கி வெளியேற்றி, இரங்கல் சங்காக அதன் கொண்டையில் உள்ள மணியையும் அடித்து - ஓட்டமும் நடையுமாய் சுந்தரின் அபார்ட்மெண்ட்டிர்க்கு வந்து சேர்ந்தேன்.


பெரிய தங்கமல ரகசியம் ... அதுதானே உங்கள் கேள்வி?

ச ச. அதையும் தாண்டியது.

என் சைக்களில் கழண்ட "செயினை" கவனிக்காமல் ஓடி வந்து, தண்ணீர் மோட்டாரின் அருகே சைக்கிளை "மெயின் ஸ்டாண்டு" போட்டு நிறுத்துகிறேன். இது என்ன சாதாரண விஷயமா? புஸ்தகம், நோட்டு வாங்குகிற காரியமென்றால் "சைடு ஸ்டாண்டு" போதும். ஆனால் இன்று எத்தனை நேரம் ஆகும் என்பதே தெரியவில்லையே.

"டேய்!! சைக்கிளை தள்ளி நிப்பாட்டுடா"

"சரி மாமா"

மோட்டாருக்கு பக்கத்தில் இருக்கும் அந்த ஸ்தலம் அவர் மகனுக்கானதாம். அதற்காகவே காவலாளன் போல் மேலிருந்து எப்போதும் நோட்டம் விடுவார் அந்த மாமா. வீ.ஆர்.எஸ் பார்ட்டி. யாரும் அவருக்கு அந்த இடத்தை எழுதி வைக்கவில்லை. எல்லாம் பொது இடம்தான். இருந்தாலும் வயசான காலத்தில் இவர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு எங்களை போன்றோரை அதட்டுவது, கத்துவது என்பது சகஜம். கிட்ட தட்ட ஒரு பொழுது போக்கு. சாதாரண நாளில் கிழவரோடு ஏதாவது வாக்குவாதம் செய்து சைக்கிளை அதே இடத்தில் நிறுத்தி விடுவேன். அவரும் "பொடிப்பயலுக்கு திமிர பாரு ... நில்றா வரேன்" என்ற ஒரு பயனில்லாத, இருந்தாலும் தன் இறுமாப்பு குறையாமலிருக்க, மிரட்டலை விடுவார். ஊசிக்கண்ணில் நுழைந்த நூலாய் - இந்த காதிலிருந்து அந்த காதின் வழி வெளியேறிவிடும். இது ஒரு வாடிக்கையாக இருந்தது. பல சமயங்களில் வேடிக்கையாக கூட.

ஆனால் இன்று அதற்கு நேரமில்லை. சைக்கிளை நன்றாக நகர்த்தி சற்று தொலைவில் இருந்த துளசி மாடத்தின் அருகே நிறுத்துகிறேன். கீழ் வீட்டு மாமி பார்த்தாளோ நான் செத்தேன். "எந்த கட்டால போறவன் இங்க நிருத்திர்கான்? சாயந்தரம் நாங்கல்லாம் பூஜ பண்ண வேணாமா? என்ன மாமா, சும்மாதான உக்காந்துண்டு இருக்கேள்? நீங்க ரெண்டு வார்த்த அதட்டி சொல்லி மொட்டரண்ட நிறுத்த சொல்லலாமோல்யோ?" என்று "சும்மா மாமா" மேல் ஒரு திடீர் குற்றச்சாட்டை வைப்பாள். "அது இல்ல மாமி ..." என்று கிழவர் வழிந்துகொண்டே ஏதாவது பதில் கூறுவார். அந்த காட்சியை பார்ப்பதற்கு நேரம் இல்லை. மாமி மாடத்தின் அருகே வருவதற்கு இன்னும் 1 மணி நேரம் தான் உள்ளது. அதற்குள் வந்த வேலை முடியவேண்டும். எல்லாம் கோபால் கையில்.

கோபால் ஒன்றும் சாதரணப்பட்டவன் அல்ல. எங்கள் வகுப்பறையில் எல்லோரும் பொறாமை படக்கூடிய ஒரு ஆசனம் இருந்தது. அது பெண்கள் உட்காரும் வரிசையில் அமைந்த கடைசி பெஞ்சு. அந்த பெஞ்சில் உட்காருவதற்கு "பிரத்யேக" குணங்கள் (அதாவது பெற்றோர்கள் பரிந்துரைக்கமுடியாத பழக்கங்கள். உதாரணம் - படிக்காமல் இருப்பது, நெற்றியில் மதக்குறிகளை இடாமல் இருப்பது, கடைசி பெஞ்ச்சில் உட்காருவது, மார்க்கு வாங்காமல் இருப்பது, திரிகால சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பது போன்றவை. இங்கே குறிப்பிட்ட இந்த ஐந்துமே என்னிடம் இருந்தது. மற்றவை யான் அறியேன்) எதுவும் இருக்க கூடாது. இருந்தாலும் இல்லாததுபோல் நடிக்க வேண்டும். அதையும் மீறிய ஒரு தகுதி, வகுப்பு மாணவிகளின் சம்மதம். தேர்தல் ஒன்றும் நடக்காவிடினும், தேர்வு என்னவோ இந்த தகுதியை பொருத்துதான்.

அப்படி என்ன சிறப்பு அந்த பெஞ்ச்சில்?

வேறென்ன கடலைதான். ஆசிரியர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள். உதாசீனப்படுத்த மாட்டார்கள். மார்க்கு அதிகம் கிடைக்கும். அதையும் தாண்டிய சிறப்பு, உணவு இடைவேளையில் கிடைக்கும் உபசரிப்பு. குறிப்பாக பெண்கள். "எங்க அம்மா பருப்புசிலி பண்ணிர்க்காடா" "இன்னிக்கி எங்காத்துல திருக்கண்ணமுது" "நீ என்ன கொண்டு வந்துர்க்க?" இது போன்ற அளவலாவல்களை கேட்டாலே எரிச்சல் வரும் எங்களுக்கு. அதனாலேயே அவர்களோடு எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்திருந்தோம். எச்சை எலும்பை கண்ட நாய்போல் "கிடைக்கிறவரைக்கும் கிடைக்கட்டுமே" என்று அங்கே சிலர் மீண்டும் செல்லலானார்கள். ஈனப்பிறவிகள். இத்தனைக்கும் இதை முதலில் செய்தது அடியேன் தான் எனினும் அது இங்கே ஒரு தேவையில்லாத இடைச்செருகலாக இருப்பதால் நாம் விஷயத்திற்கு போவோம்.

அந்த பெஞ்ச்சில் காலம் காலமாக குடி கொண்டிருப்பவன் கோபால் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். "அவ்ளோ நல்ல பையனா??" என்று வியக்கும் அளவிற்கு இருந்த இந்த கோபால்தான் எங்களுக்கு பலான விஷயங்களின் குரு. ஆண்குறிக்கும் பெண்குறிக்கும் உள்ள அந்த விச்சித்திரமான தொடர்பினால்தான் பிள்ளைப்பேறு என்பதே உண்டாகிறது என்று அவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். எதேச்சையாக தொடங்கிய இந்த பேச்சு, பின் வழக்கமானது. அவன் சொல்லும் கதைகளும், சம்பவங்களும், ஜோக்குகளும் கிளுகிளுப்பு ரகம்தான். அதற்கான மவுசு அதிகம். அதை கேட்பதற்காகவே எங்கள் வரிசையில் அவனுக்கு இடம் ஒதுக்கி வைத்திருப்போம். அந்த நேரங்களில் மட்டும் அவனை மன்னிக்க தோன்றும் எங்களுக்கு. "உனக்கு எப்டி மச்சான் இவ்ளோ தெரியுது?" என்று கேட்டால் "அப்பா சொன்னா டா" என்று சொல்லுவான். எனக்கும் வியப்பாக இருக்கும். என் தந்தையிடம் இது போன்ற சமாச்சாரங்களை பற்றி பேச எனக்கு துணிவு இருந்ததில்லை. டி.வி பார்க்கும்போது ஏதாவது "கச முசா" காட்சிகள் வந்தாலே, சேனலை மாற்றிவிடுவார். அவருக்கு அதை பார்ப்பதில் ஒரு ஈர்ப்பு உண்டு எனினும், ஏனோ பிள்ளையின் முன் தன்னை குணவானாக காட்டி கொள்வதில் அவருக்கு ஒரு பெருமிதம். அதனால் கோபால்தான் இதில் எனக்கு காட்ஃபாதர் (godfather). அவன் சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் நம்பினோம். அதன் விளைவாக அவன் அராஜகங்களை கூட பொறுத்துக்கொண்டோம். கோபால் முக்கால் மணிநேரம் மட்டுமே புலம் பெயரும் அந்த பெஞ்ச் எங்களுக்கு போதிமரமானது.

அப்பாவாவது, ஆட்டுக்குட்டியாவது. இப்போது எல்லாம் தெரிந்துவிட்டதே. "மாட்டினியாடா" என்று எனக்குள் நினைத்துக்கொண்டே படிகளுக்கருகில் வருகிறேன். சும்மா மாமா இன்னும் கத்திக்கொண்டிருக்கிறார். ஏறுவதற்கு முன் சற்றே பின் வந்து கணபதி சிலைக்கருகே ஒரு நோட்டம். பச்சை நிற "டாப் கியர்" சைக்கிள் அங்கே நிற்கிறது.

"அப்பாடா. ராஜு வந்துட்டான்". ஒரு நிறைவுடன் படிகளில் ஏறுகிறேன்.

ராஜு இல்லையென்றால், இன்று, இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சாத்தியமே அல்ல. ராஜு, வகுப்பில், கோபாலுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருப்பவன். அவன் தகுதிகளை இங்கு பிரஸ்தாபிப்பதற்கான அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. ராஜு ஒரு புத்திமான். நெற்றியில் கத்தி கீறி ரத்தம் கசிவதுபோல், செங்குருதி நிறத்தில் ஸ்ரீ சரணம் இட்டுக்கொண்டு வருகின்ற அவனை கண்டாலே எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். இத்தனைக்கும் எங்களுடன் ஊர் சுற்றுவது, கோபால் கதைகளை கேட்பது போன்ற செயல்களில் அவன் பங்களிப்பு இருக்கும். ஆனால் இவை அவனுக்கு ஒரு இத்யாதி. தன்னை விட அதிக திறமை படைத்தவனாக இருப்பதாலேயே கோபால், அவனுடன் நட்பு பாராட்டி, அவனுக்கு நெருங்கிய நண்பனானான். ராஜு சொன்னது அவனுக்கு வேத வாக்கு. சொன்னதை கேட்பான். கேட்டதை செய்வான். அதனால்தான் இந்த விஷயத்தை ராஜுவிடம் சொல்லி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினோம். "சரி நான் பேசறேன்" என்று ராஜு சொன்னதும் எங்களுக்கு ஒரே குஷி. காத்திருந்து காத்திருந்து இன்று, ஒரு வழியாக, அந்த நாள் வந்தது.

ஒரு படி விட்டு ஒன்றாய்
காலுக்கும் தரைக்கும் இடையில் சிக்கிய ஹவாய் செருப்பின் பட் பட்
சுவற்றில் அறையப்படும் ஆணியின் டண் டண்
தூரத்தில் பாய்ந்து ஓடும் ரயிலின் கட கடா பட படா
ஏற்றத்தை தாங்க முடியாத தடித்த என் உடலின் தஸ் புஸ்
ஓடு ஓடு ஓடு
தாவு தாவு தாவு
மூச்சிரைந்துகொண்டே மூன்றாவது மாடி வந்துவிட்டேன்.
(ஐயோ முடியவில்லை. எடை குறைக்க வேண்டும்)
சுந்தர் வீட்டு கதவை தட்டுகிறேன். கதவை திறந்தான் ... சுந்தர்.

"நீ என்ன பண்ற இங்க?"

"ராஜுதான் வர சொன்னான்"

சுந்தர் ராஜுவின் பக்கம் திரும்பியவாறு அவன் சம்மதத்தை கேட்பது போல் நின்றுகொண்டிருந்தான். ராஜுவின் தலையசைப்பிற்கு காத்திருக்காமல் உள்ளே செல்கிறேன் நான். சுந்தருக்கும் எனக்கும் பொரி பொட்டலத்திலிருக்கும் பொட்டுகடலை உறவுதான். அவ்வளவு நெருக்கம் இல்லை. ஆனால் ராஜு எனக்கு நெருங்கிய நண்பன். சிறுவயது முதல் எங்கள் இரு குடும்பத்தாரும் ஏதோ ஒரு வகையில் நண்பர்களானார்கள். ராஜுவின் சிபாரிசு இல்லாவிடில் நான் இந்த பள்ளிக்கு வந்திருக்க முடியாது. இங்கே சுந்தர் வீட்டில் அழையா விருந்தாளியாக இருந்திருக்க முடியாது. சுந்தரே இங்கு தேவையில்லாதவன்தான். இருந்தாலும் அவன் வீடு எல்லோரும் எளிதில் வந்தடையும் தூரத்தில் இருப்பதால், சந்திப்பு அவன் வீட்டில்தான் நடக்கும். அதைவிட முக்கிய காரணம். அவன் அம்மா வருவதற்கு 8 மணி ஆகும். அப்பா மும்பையில்.

கணினியின் (சுந்தரிடமும், கோபாலிடமும் மட்டும்தான் கணிப்பொறி இருக்கிறது) முன்னிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, முன்னும் பின்னும் நான் சாய்ந்தாடிக்கொண்டிருக்க, எண்ணை இல்லாமல் வறண்டு போன இடுக்குகள் "க்றீச் க்றீச்" என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறது. விசைப்பலகையில் உள்ள பொத்தான்களை கைக்கு வந்தபடி தட்டிக்கொண்டிருக்கிறேன். ராஜு அருகாமையில் இருந்த சோபாவில் புதிதாக வெளியாகியிருந்த ஆங்கில நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். சுந்தர் எங்கே என்றே தெரியவில்லை. ஏதோ வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கிறான். அவன் வீட்டில் 5 மணியிலிருந்து 6 மணி வரை தண்ணீர் வராது. நானும் வெறும் திரையில் என்ன பார்த்துக்கொண்டிருப்பது. எனக்குள் இருக்கும் ஆவல், அடுப்பில் கொதிக்கும் பாலாய், கிண்ணத்தின் விளிம்பில் முட்டை முட்டையாய் வெடித்துக்கொண்டு, வெண்நுரைகள் சூழ, தன ஆடையை களைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

சுந்தரும், பிரசவித்த பூனையாய், இங்கும் அங்கும் ஒரே ஓட்டம். ஆனால் ராஜு மட்டும் தீவிரமாக படித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஆவல் இல்லையா? முழுப்பிரயத்தனத்துடன் தன் உணர்சிகளை மறைக்கிரானா? ச .. அவன் அப்படி செய்யமாட்டான். அவனால் பின்னப்பட்ட மதிப்பென்னும் வேலி என்னை அப்படி சிந்திக்க வைக்காது. மூன்று ஆடவர் இருக்கும் அந்த வீட்டில் "க்றீச்" ஒலிகள் மட்டும் ஓங்காரமாய் ரீங்கரித்துக்கொண்டிருந்தது. என் கண்கள் திரையின் வலது கீழ்ப்பக்கம் உள்ள நேரத்தை மட்டுமே பார்க்கிறது. மினுக் மினுக்கென்று எண்களின் இடையே உள்ள புள்ளிகள் தோன்றி மறையும் அந்த ஒரு மாத்திரைக்குள், ஒரு மாமாங்கம் ஒளிந்திருக்கிறதா?

"வந்துத்தொலையெண்டா கோபால்" - உள்ளத்தின் குமுறல். நேரம், யானையின் அம்பாரியில் ஜாம் ஜாம் என்று ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. வினாடிக்கு ஒரு முறை வாயிர்கதவும் கண்களும் காதலித்துக்கொள்கின்றன.

"ஒரு வேளை வராம போனா?"

சந்தேகத்தின் உஷ்ணம் தங்காது பால் பொங்குகிறது. தன் ஆடையை களைந்து மேலே தள்ளிக்கொண்டு வருகிறது. ஐயகோ!! இந்த துகிலுரிப்பை தடுக்கமாட்டாயா? குமுறலை அடக்க மாட்டாயா? பொங்கி வழியட்டும் என்று என்னுடன் ஒளிந்து களிக்கிறாயா?
கோபாலக்ருஷ்ணா!! ஹ்ருதயகமலவாசா!!
எங்கேயடா நீ? சீக்கிரம் வா.

"கிளிங் கிளாங்"
அழைப்பு மணி சிணுங்கியது. அடுப்பு அணைந்தது.

(தொடரும் ...)