Sunday, August 23

நானும் லா.ச.ரா வும் - 1


சில நேரங்களில், ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகளை விஸ்தரிக்க எண்ணி, எதையேனும் எழுத தொடங்கும் போது நம்மை அறியாமல், நம்மை சூழ்ந்துள்ள மோனம் ஓங்கி இனம் புரியாத நிறைவு ஏற்படுத்தி எழுத்துக்கள் வளர்வதை தடை செய்யும். நம் எண்ணங்களின் வீரியத்தை கைகளும் விரல்களும் தாங்கமுடியாது செயலற்று நின்று, மூளையில் புதைந்துள்ள நினைவுகளை அசைபோடும். இங்கே இச்சமயத்தில் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் தருவாயில் அது போல பல இடங்களில் நேரலாம் என்ற நிதர்சனத்தை எதிர்கொண்டவாறு எழுதுகிறேன். லா.ச.ரா வின் எழுத்தில் ஜலசமாதி அடைந்தபின் இது போன்ற உணர்வுகள் சர்வ சாதாரணமாக எழக்கூடியதே.

6-7 வருடங்களுக்கு முன், புத்தகம் என்ற வாயிலை நிரந்தரமாக அடைத்து வெறுத்து ஒதுக்கியவன் நான். படித்தவர்கள் ... மன்னிக்கவும் ... படிப்பவர்கள் பெரும்பாலும் தங்களை மேதாவிகளைப்போல் காட்டிக்கொண்டதால் எழுந்த ஒரு அற்ப ஈகோயிசம் தான். புத்தக வாசிப்பிலும், எழுத்திலும் எள்ளளவும் ஈடுபாடு இருந்ததில்லை. 4 பக்கங்களில், ஒரு வீடு, தோப்பு, மலை, மரம் என்று ஒரு சூழலை விவரிக்கும் புத்தகங்களை கண்டு எனக்கு வெறுப்பு அதிகமாயிற்று. "விஷயத்துக்கு வாங்கடா" என்று பல முறை கதறியிருக்கிறேன். பொழுது போக்கு அம்சத்திர்க்காகவே புத்தகங்களை படித்த எனக்கு அதையும் விஞ்சிய ஒரு உணர்வை தந்தது லா.ச.ரா வின் படைப்புகள்.

நான் இலக்கியவாதியோ, விமர்சகனோ, தேர்ந்த எழுத்தாளனோ அல்ல. அப்படி சொல்லிக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. அவர் எழுத்தின் வாயிலாக தெரிக்கப்பட்ட ஜீவ தாதுக்களில் ஒன்றை உட்கொண்ட ஒரு அற்ப ரசிகன் நான். என் உள் புதைக்கப்பட்ட உணர்வுகளை அசைபோடுதலே இந்த பதிவின் உயிர்நாடி. என் நினைவு அதை மீட்ட மீட்ட, அதன் துடிப்பிலும், விதிர் விதிர்ப்பிலும் நான் இதை எழுதுகிறேன். இதில் மற்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிடுவதை நான் வெகுவாக தவிர்க்க எண்ணுகிறேன். அதற்கு முக்கிய காரணம் - என் வாசிப்பு எண்ணிக்கையின் குறைவே. உலக இலக்கியங்களோ, இந்திய இலக்கியங்களோ, தமிழ் இலக்கியங்களோ படித்து இலக்கிய கடலை தாண்டி கரை எரியவன் அல்ல நான். என்னுள்ளே படர்ந்து நிறைந்துள்ள லா.ச.ரா வின் எழுத்துக்களின் பிரதிபலிப்பாகவே இப்பதிவை எண்ணுகிறேன்.

லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம். இன்று கூட இணையத்தில் இப்பெயரை ஆங்கிலத்தில் எவ்வாறு தேடுவது என்ற ஒரு குழப்பம் என் மனதில் இருக்கிறது. Ramamrutham என்றும் Ramamirtham என்றும் இருவேறு அவதாரங்கள் எடுத்துள்ளார். இருவரும் ஒருவரே ஆயினும் இரு பெயரின் தேடல் முடிவுகள் சற்றே வேறுபட்டிருக்கிறது. இதை இங்கே கூறுவதற்கான முக்கியத்துவத்தை கூடிய விரைவில் காண்போம்.

அம்மா:

பெரும்பாலும் லா.ச.ரா வின் படைப்புலக பரிஜ்யம் உள்ளவர்கள், அவ்வுலகில் இழைந்தோடும் தாயுணர்வை கவனிக்காது இருக்க முடியாது. அம்மா என்பது வெவ்வேறு பரிமாணங்களில் உருபெற்று அவர் எழுத்துலகை வியாபித்திருக்கிறது.

"அம்மாதான் என் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை எனக்கு அவள்தான் கற்றுக் கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். நான், பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்தவன்தானே. அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள், அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை"
- நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்.

மேற்கண்ட நேர்காணலில் அவர் சொல்கின்ற சொற்களுக்கு இடையில் நுழைந்து வெளிப்படுகின்ற கவித்துவத்திற்கு வித்தாக அமைந்ததே அவர் தாயிடம் கொண்ட அந்த உறவுதான் என்பது என் கருத்து.

"அன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்து கூப்பி, 'ஒம்மாச்சி' சொல்லித்தந்தாள்.
இன்னமும் அம்மா மடி கிடைக்குமா? நானும் ஆசைப் படலாமா?"

- சூடிக்கொண்டவள், சிந்தா நதிஅவர் படைப்புலகத்தின் தேடலாகவும், வாழ்கையின் தேடலாகவும் விளங்கிய அவர் தாய், அவர் எழுத்தில், எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வழியில், விவரிக்க முடியாத ரூபத்தில் குடிகொண்டு, தம்புரா நரம்புகளில் மீட்டப்படும் ஆதார ஸ்ருதியாக ஒலித்துக்கொண்டிருப்பார். அவருள்ளே நிறைந்திருக்கும் அவள், சில சமயங்களில் அவளாகவே வெளிப்பட்டு, அவர் சொல்லை மெருகேற்றி, செப்பனிட்டு, 'ஒம்மாச்சி' போட வைக்கிறாளோ என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.

"கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால் கசக்கவில்லை அவள்"

அன்றாட வாழ்கையின் ஒவ்வொரு பக்கங்களையும் திருப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் அடுத்தது என்ன என்ற சிந்தனையில் ஆழ்ந்து, நிகழ்காலத்தின் கசப்பினை ருசிப்பதிலேயே நம் நேரமும் அடங்கி விடுகிறது. வாழ்கையின் கசப்பு என்பது விளிம்பு நிலை மக்களின் சம்பத்து அல்ல. எல்லோரும் அனுபவிப்பதே. ஒரு பார்ப்பன எழுத்தாளர் என்ற வரம்புக்குள் அடைக்கப்பட்ட லா.ச.ரா, சமூக பிரச்சனையை பற்றியும், அவலங்களை பற்றியும், வரம்பு மீறுகிற விஷயங்களை பற்றியும் எழுதாமல், பிராமண சூழலை சார்ந்து சின்ன சின்ன விஷயங்களில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு எழுதியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஒரு மேலோட்ட பார்வையில் அவ்வாறே தோன்றும். ஆனால் அவர் எழுத்தில் ஒரு தீரா சோகம் நிறைந்திருக்கும். சில நேரங்களில் இவ்வளவு pessimisstic எண்ணங்களை கொண்டவரா இவர் என்று கூட தோன்றும். அந்த பெசிமிசத்தில் குவிந்துள்ள ஒரு உண்மை நிலை - பாவம், தோஷம், பிரதோஷம், பிராயச்சித்தம் - என்பதை தாண்டிய நிலை, அவர் எழுத்தில் வெளிப்படும் போது நம் நாபித்தண்டை வெட்டி அதனுள் குழி தோண்டி, அடியில்லாத பாதாளத்தை வெளிக்காட்டும். அந்த காரிருளில் நம் பிம்பத்தை நாமே கண்டு அழுது கொண்டிருப்போம். அதை எவ்வகை சோகத்தோடும் ஒப்பிட முடியாது. அப்பட்டமான சொற்களில் அந்த சோகம் வெளிப்படாது. அதன் தூய்மை அவ்வாறு இருக்குமாயின், அதை தாண்ட அவர் சமூக அவலங்கள் பற்றி போதிக்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இருந்ததாக தெரியவில்லை.

"அணுவுக்கு அணுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருக்கிறாள்"

- ஜனனி சிறுகதைமேற்கூறிய ஜனனி என்ற சிறுகதையின் முதல்வரி ஏதோ கதாகாலக்ஷேபத்தில் கேட்கக்கூடிய ஒன்றுபோல் தோன்றும். ஆனால் இதன் வேர் பதிந்த பூமியில் ஓடும் அர்த்தங்கள் அளப்பரியது. இக்கதையின் மூலாதனம் அவ்வரிகள். ஜனனி என்று நாம் அழைப்பது இவ்வுலகத்திற்கு தாயாய் விளங்குபவளை (இங்கும் அவர் அம்மா தென்படுகிறார்). அவளுக்கு மானுடப்பிறப்பாய் பிறந்து வளர வேண்டும் என்ற இச்சை தொற்றிக்கொள்கிறது. அவள் அங்ஙனமே பிறந்து, வாழ்ந்து உயிர் நீக்கிறாள். இது சாரம்சமே. இக்கதையை படிக்கும் போதும், படித்து முடித்த பிறகும், ஜனனி ஒரு சோகச்சித்திரமாய் தோன்றி நெஞ்சில் இறங்கி கனக்கிறாள். உலகமே முலையுண்ட லோகமாதாவாயினும் மானுடப் பிறப்பின் அவலங்களை தவிர்க்க முடியாது என்பதே இதன் இறுதியில் நமக்கு விளங்குகிறது.

"அவளுக்கு பிக்ஷையிட்ட வீடுகள் அனைத்தும் செழித்தன. அவள் கைநீட்டி வேண்டுமென்று கேட்டோ, அல்லது தானாக ஏதாவது சாமானை பெற்ற கடைகளுக்கு அன்றைய வியாபாரம் வெகு மும்மரமாக நடக்கும். ஆகையால் அவளுக்கு அன்னமிடவும், கேட்டதையும் கேளாததையும் கொடுக்கவும் "நான், நான்" என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டனர். அவள் கையால் ஒருமுறை தடவினால் போதும்; தீராத நோய்கள், அவ்வுடலிலிருந்து பொட்டென உதிர்ந்து போகும்.

இருந்தாலும் பைத்தியம்-!"

- ஜனனி சிறுகதை

தன்னை அழித்துக்கொண்டு, தான் ஏங்கிக்கொண்டிருந்த தாய்ப்பாசம் கிட்டாது, "அம்மா" என்று கூப்பிட்ட குரலுக்கு கூட சொந்தம் கொண்டாட ஒரு நாதியில்லாது, பைத்தியமான பின்பும் தன் குழைந்தகளுக்கு அள்ளித் தருவதை நிறுத்தவில்லை லோகமாதா ஜனனி. அங்ஙனமே இறந்து போகிறாள். அவள்தான் அம்மா. "கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால் கசக்கவில்லை அவள்" என்ற வரிகள் மீண்டும் ரீங்கரிக்கிறது.

இதே கதையை ஒரு சமூக வர்ணனையாக பார்த்தோமேயானால், வாழ்கையின் நிச்சயமின்மையையும், அர்த்தமற்ற பாகுபாடுகளையும், பிறப்பால் உண்டாகும் சமூக அடையாளங்களும், பிற உயிரை மதிக்காது தனக்கு வேண்டியதை அதனிடமிருந்து பிடுங்கி தின்னும் சமுதாயத்தின் சுயநலத்தையும், நாம் காணலாம். லா.ச.ரா வின் சொல் வீச்சில் கட்டுண்டபின் இதை உணர சற்று நேரம் பிடிக்கத்தான் செய்யும். இக்கருத்துகள் லா.ச.ரா வுக்கே தோன்றியிருக்குமா என்ற கேள்வி அர்த்தமற்றது. கர்த்தாவின் வேலை சிருஷ்டிப்பதே. அதை புரிந்துகொள்வதும், அர்த்தப்படுத்துவதும் வாசகனின் முயற்சியே. சோகத்தின் அழுகுணர்ச்சியை வெளிப்படுத்தி, அந்த அழகில் மயக்கவைத்து, கண்ணயரும் நேரத்தில் இமையை கிள்ளி, எங்கோ சென்று மறைகிறார் லா.ச.ரா. மயக்கத்தின் வலிமை இறங்க இறங்க ஒரு வெறுமை சூழ்ந்துகொள்கிறது.

அம்மா என்ற சொல்லை திரித்து அதன் அர்த்தத்தை மாற்றி அதிலும் தாயை புகுத்துகிறார்.

"அந்த மாமரத்தில்தான் எத்தனை கிளைகள், எத்தனை இலைகள், எத்தனை காய்கள்! அம்'மா' பெரிய 'அம்மா'தான்."

- மஹாபலி சிறுகதை

மாமரத்தை அம்மாவோடு ஒப்பிட்டு காட்டும் அந்த ஒரே வரியில் இந்த கதையின் போக்கு நமக்கு புலப்படுகிறது. தன்னை அழித்துக்கொண்டு பிறருக்காக வாழ்கின்ற ஒரு "masochistic" தன்மை கொண்டவளாகவே அவரின் "அம்மா" வெளிப்படுகிறார். ஜனனிக்கும் இந்த மாமரத்திர்க்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை. தன்னுள்ளிருந்து பிரிந்து, ஒரு தனி ஜீவனாய் வெளிப்பட்டு, விவரிக்க இயலாத உணர்வுகளை, சொல்லாக, சொற்றொடராக, வாக்கியமாக, பதமாக வெளிக்கொணர்ந்து, அதனுள் தான் இறங்கி உயிர்த்து நிற்கிறாள் அம்மா.

அம்மாவின் மற்றொரு பிரதிபலிப்பாய், அவளின் மகோன்னதத்தை உணர வைக்க லா.ச.ரா எடுத்த கொண்ட ஒரு உன்னதமான தளம் - நாவல். அதுவும் அவரின் முதல் நாவலாகிய புத்ர.

(தொடரும் ...​)