Sunday, August 9

கோழி செய்திகள்: "என் அடுத்த படத்தில் பிரேம்ஜி இல்லை"- வெங்கட் பிரபு அதிர்ச்சித் தகவல்


சென்னையில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். "உங்கள் அடுத்த படம் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா" என்று கேட்டதற்கு "ஒன்றுதான் சொல்ல முடியும். அதில் பிரேம்ஜி இல்லை" என்று திட்டவட்டமாக கூறினார். மேலே கேள்வி கேட்கும் முன்னர் காரில் ஏறி சென்று விட்டார். பிரமிப்பில் ஆழ்ந்த பத்திரிக்கயாளர்கள் அனைவரும், என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த செய்தி வந்தது. "சாப்பாடு ரெடி". உடனே எல்லோரும் சாப்பிட போனோம்.

இதில் என்ன பின்னணி இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்ள வெங்கட் பிரபுவின் நெருங்கிய வட்டாரத்தை கேட்டோம். "அது ஒண்ணுமில்லீங்க ... ஒரு நாளு வெங்கட் சாரு பிரேம்ஜி அண்ணன்கிட்ட அடுத்த படம் பத்தி பேசப் போயிருக்காரு. அப்போதான் அது நடந்தது" என்று உச் கொட்டி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவரிடம், பீடிகைகளை தாங்க முடியாமல் " மேலே சொல்லுங்க" என்றோம். "என்னத்த சொல்றது ... தம்பியா பொறந்துட்டு இப்டியா அண்ணன் கிட்ட பேசறது ... வெங்கட் சாரு கிட்ட 'கதை என்னனு' கேட்டிருக்காரு பிரேம்ஜி ... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல" என்று வருத்தப்பட்டுகொண்டார்.

இயக்குனர் வெங்கட் பிரபு

இதை பற்றி பிரேம்ஜியிடம் கேட்டபோது - "நானும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஹீரோவுக்கு பக்க வாத்தியம் வாசித்து கொண்டிருப்பது. எனக்கும் கதையுள்ள படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?" என்று கூறினார். அப்போ நீங்கள் ஏன் மற்ற இயக்குனர்களின் கதையுள்ள படங்களில் நடிக்க கூடாது என்பதை கேட்டபோது "கூப்டாதானே போறதுக்கு. அதுவும் இல்லாம அவங்க டைலாக் மனப்பாடம் பண்ணணும்னு சொல்றாங்க. பாட்டுக்கு வாயசைக்கணும்னு சொல்றாங்க. டான்ஸ் ஆடணும்னு சொல்றாங்க. நடிக்கணும்னு சொல்றாங்க. இதெல்லாம் ஓவர்-ஆ இல்ல" என்று கூறினார். ஆனால் இது எல்லாம் அவசியம்தானே என்று நாங்கள் கேட்டதற்கு "என்னங்க ஒளர்ரீங்க. இது எதுவுமே இல்லாம இன்னிக்கி ஹன்சிகா எவ்வளவு பெரிய ஹீரோயின் ஆயிருக்காங்க. அவங்கள மாறி என்னால ஆகா முடியாதா? எவ்வளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?" என்ற விரலை ஆட்டி எங்கள் கண்களை குத்திய பின் அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

பிரேம்ஜி அமரன்

வெங்கட் பிரபுவிடம் இதற்கு எதிர்வினை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நினைத்து அவரை அணுகியபோது - "என்ன வேணும்னாலும் சொல்லட்டும். எனக்கு இந்த துறைல ஒரு மரியாத இருக்கு. இத்தன படம் எடுத்துட்டேன். எதுவுமே சொந்த கதையில்ல. பாதி படத்துல கதையே இல்ல. அதுல நடிக்கும்போது அவருக்கு தெரிலியா? இன்னிக்கி திடீர்னு கதையோட படம் எடுனா, நான் சம்பாதிச்ச பேர் கேட்டுப் போகாதா? இதெல்லாம் சின்ன பிரச்சன. எனக்கு இதவிட தல போற பிரச்சனைகள் இருக்கு" என்று கூறினார். அப்படி என்ன தல போற பிரச்சன, ஒரு வேளை அடுத்த படத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருக்கிறாரா?, அதுதான் "தல" போற பிரச்சனையா என்று நாங்கள் ஆவலோடு கேட்டபோது - "ச ச ... என் புது படத்துக்கு என்ன சப்-டைட்டில் வைக்கலாம்னு யோசிக்கிறேன். போன படம் ஆறாவது. அதனால வெங்கட் பிரபு சிக்ஸர்னு வெச்சேன். இது ஏழாவது. அதனால வெங்கட் பிரபு ஏழரைன்னு வெக்கலாம்னு யோசிக்கிறேன். அந்த எக்ஸ்ட்ரா 'அரை'தான் இந்த படத்தோட ஹைலைட் " என்று கூறினார்.

அப்போ படத்துக்கு தலைப்பு என்ன என்று கேட்டபோது - "அது முக்கியமில்ல சார். இப்போ அத பத்தி யோசிக்க நேரமில்ல. சப் டைட்டில் கெடச்சுருச்சு. அது போதும். படம் எடுக்க போறேன்னு தெரிஞ்சதும், எல்லார் கிட்டயும் சொல்லிட்டேன். இனிமேல் பார்ட்டி தான். அது இல்லாத நேரத்துல ஷூட்டிங். ஹீரோ கூட முடிவாயிடுச்சு" என்று சொன்னவரிடம் அது யார் என்று கேட்டபோது "நம்ம சீயான் விக்ரம்தான்" என்று கூறினார். இந்த படத்திற்காக விக்ரம் தன் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார் என்ற துணுக்கு செய்தியையும் கூறினார். "கதைக்கு தேவைப்பட்ட எதையும் செய்வேன்னு சொன்னார். நான் கதையே இல்லியே சார்னு சொன்னேன். அதுனால என்ன 'கந்தசாமி', 'ராஜபாட்டை', 'ஐ', இதுல எல்லாம் கதையா இருந்தது. அதுல எடைய குறைச்சு ஏத்தி நான் நடிக்கலியா, அப்டின்னு சொன்னார். அப்படியே அழுக வந்துடுச்சி. அவர்தாங்க உண்மையான கலைஞன்" என்று வெங்கட் பிரபு சிலாகித்துக்கொண்டார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடங்கும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அதி பயங்கர எதிர்பார்ப்பை வளர்த்திருக்கிறது ரசிகர்கள் மத்தியில். வெங்கட் பிரபுவின் படத்தில் பிரேம்ஜி இல்லை என்பதை ஜீரணிக்க அவதிப்படும் ரசிகர்கள், இனி பிரேம்ஜி கதையுள்ள படங்களில் நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். ரசிகர்களை வெங்கட் பிரபு காப்பாற்றுவாரா? பிரேம்ஜி அண்ணன் படத்தில் நடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒரு அபத்தமான பதிவு என்று இன்னும் உங்களுக்கு புரியவில்லை எனில் இதை நீங்கள் படிக்க வேண்டாம் :P


கோழி செய்திகள் மேலும்

சூர்யாவின் அடுத்த பட அவதாரம்