Sunday, September 20

நானும் லா.ச.ரா வும் - 2


புத்ர.
லா.ச.ரா என்ற எழுத்தாளரின் மொழி வளமைக்கு முக்கியமான சான்று. புத்ர வின் முதல் மூன்று பக்கங்களின் வார்த்தைக் கோர்வைகள், ஆவளியாய், ஒன்றன் பின் ஒன்று நின்று, நாம் படிக்க படிக்க கண்கள் மேல் தெறித்து கலங்கடிக்கும். அதுவரை நாவல் என்ற தளத்தில் அது போன்ற ஒரு விசித்திரமான அமைப்பும் நடையும் நான் கண்டதில்லை. ஒரு சிறு தருணத்தின் மாபெரும் தாக்கத்தை வெளிப்படுத்தும் அப்பகுதி, அரூபத்தின் பிரக்ஞையை நமக்கு அப்பட்டமாய் காட்டுவதோடு நில்லாமல், சொற்கள் கூர்மையடைந்து ஆழ்மனதில் முள் தைக்கும். அனுபவத்தின் ஒரு உன்னத பரிமாணம் அது.
ஒரு கதாபாத்திரத்துக்கு நிகழ வேண்டிய எல்லா உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் நம்முள் நிகழும்போது, அதனுள் ஒன்றாகி, அக்கதையின் வாயிலிலே நம் கேள்விகளுக்கு விடை தேடுவோம். லா.ச.ரா வின் மிக பெரிய திறன் - நம்முள் இருக்கும் உணர்சிகளை அம்மணமாக்கி வெளிக்கொணர்வது. அந்த நிர்வாண நிலையில் ஒரு தூய்மையும் பூரணத்துவத்தையும் உணர முடியும்.

ஒரு தாய், தன் மகனைப்பார்த்து சாபமிடுகிறாள். ஏன்? எதற்கு? என்ன நடந்தது? என்று கேட்பதற்கு முன்னர் அந்த சாபம், சொல் வடிவில் வெளியேறுகிறது. அரூபமான அது தன் நிச்சயத்தை தானே உணர்ந்துகொள்ளும் தருணம் அதன் வலிமை நமக்கு புலப்படுகிறது.

"அடே!!! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது. பிறந்தாலும் தக்காது"

புத்ர வின் முதல் பாதியில் இதுதான் நம்மோடு பேசுகிறது. 'இது' என்றால்? சொல்லா? வரியா? இல்லை அதனால் வெளிப்பட்ட சாபமா? விளக்கக்கூடிய விஷயங்களுக்கு அப்பாற்பட்டது அது. ஒரு தாயின் வயிற்றெரிச்சலா? இல்லை மகனின் விதியா? இதற்கு இடையில் வாக்கப்பட்டவளின் கதி என்ன?

ஒரு தருணத்தில், ஏதோ ஒரு உணர்ச்சி பேராட்டத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறோம். அது ஏதாவது செய்துவிடுமா? அதுவும் நமக்கு பிரியப்பட்டவர்களிடம் அது சென்றடையும்போது அது என்ன செய்யக் கூடும்? என்று பல கேள்விகள் நமக்குள் பல முறை எழுந்திருக்கக் கூடும். அது போன்ற கேள்விகளுக்கு ஒரு பதில் தான் புத்ர. இது நம் மூளைக்கு எட்டுவதற்கு முன், அதன் தாக்கம் நம் உள்ளுணர்வை கிள்ளுகிறது. பல்வேறு தருணங்களில் இந்நாவலை படிக்கும்போது உணர்ச்சியும், ஆச்சரியமும், வருத்தமும், விவரிக்க முடியா இன்பமும், ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அதனிஷ்டத்திற்கு வந்து போகிறது.

வெறும் அக்ஷரக் குவியலாய் கருதி, அதனிடையில் கதை எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று பார்த்தால், அந்த வெறுமை நம்மை வெறுப்படையச்செய்யும். இந்த நாவலில் கதை என்பது மேலோங்கியிருக்கவில்லை. முதல் 15 பாகங்களில், இந்த நாவலின் போக்கை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால். உங்களுக்கு பதில் ஏற்கனவே கிடைத்து விட்டது.
"அடே!!! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது. பிறந்தாலும் தக்காது"

அதுதான் கதை.

கதையை தாண்டிய அம்சங்களை தேடுவோமாயின், இதில் அரூபமான அந்த சாபம்தான் நமக்கு கதை சொல்லியாக இருக்கிறது. "கதை சொல்லி" என்பதே இங்கே ஒரு முரணாகத்தான் தெரிகிறது. ஒரு கதாபாத்திரமோ அல்ல எழுத்தாளரோ கதை சொல்லியாக உரு கொண்டால் நாம் "இவர் இப்படித்தான்" என்ற ஊகத்தில் படிக்க தொடங்குவோம். ஆனால் ஒரு அரூபத்தை கதை சொல்லியாக காண்பிக்கும் லா.ச.ரா நம் எண்ணத்தோடு விளையாடுகிறார். இத்தனைக்கும் அது ஒரு நம்பத்தக்க கதை சொல்லியாக கருதப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலையும் நாமே பிறப்பித்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் எல்லாம் தெரிந்தது போல் அது பேசுகிறது. சில நேரங்களில் அது விவரிக்க தவறுகிறது. சில நேரங்களில் சுயப்ரகடனம் மட்டும் செய்து கொள்கிறது. சில நேரங்களில் தன் பிறப்பை தானே அறிந்து கொள்ள முயல்கிறது. சில நேரங்களில் பிறப்பின் பயனறியாமல் தவிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு அருவத்தின் இருத்தலியல் எண்ணங்களாக நாவலின் முதல் பாதி வெளிப்படுகிறது.

தாயின் சாபம் பலிக்கிறது. அவன் மனைவி கருவுற்று நிறை மாதமாய் இருக்கும் பொழுது, அவள் எதேச்சையாக கீழே விழுந்ததால் குழந்தை இறக்கிறது ( "அடே!!! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது"). அதன் பின் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்து சில காலம் வளருகிறது. ஒரு நாள், அவன் வாங்கிவந்த பெப்பர்மின்ட் மிட்டாயை சாப்பிட்டு உயிர் விடுகிறது ("பிறந்தாலும் தக்காது"). இந்த இடத்தில் லா.ச.ரா வின் வார்த்தை பிரயோகத்தை நான் கூற வேண்டும். அவன் தாய் அவனை சபித்த பின், பின் வருமாறு கூறுகிறாள்: "பாம்பு தன் முட்டையை தானே நக்கிவிடறாமாதிரி நக்கிவிடுவாய்". அந்த வரிகளில் பதிந்திருக்கும் விஷம்தான் அந்த பெப்பர்மின்டிலும் இருந்து அந்த குழந்தையை கொன்றது என்று எனக்கு தோன்றுகிறது. அந்த ஒரு வரியே அவன் செயலையும் விரிவு படுத்துகிறது. "பிறந்தாலும் தக்காது" என்பதோடு நிற்கவில்லை அவள் சாபம். "நீதான் அதை செய்வாய்" என்று ஒரு குட்டி சாபத்தையும் அதனோடு சேர்த்துக்கொள்கிறது. வித்தியாசமான நடை அமைப்பை கொண்ட இந்த நாவலில், ஒரு எண்ண ஓட்டம்தான் பதிவாகியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, இது போன்ற ஒரு தொடர்ச்சி தலை நீட்டி "நான் இருக்கிறேன்" என்று காட்டிக்கொள்கிறது. அதன் மூலம் தான் எழுதிய ஒவ்வொரு வரியும் பம்மாத்துகளல்ல என்பதை நிரூபிக்கிறார் லா.ச.ரா.


இந்த நாவலில் என்னை வெகுவாக கவர்ந்த ஒரு இடம். தாய்க்கும் மகனுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடையன், இடைச்சி கதை.

"இடையனுக்கு இடைச்சி மேல் ஆசை. இடைச்சிக்கு ஆசை ஆட்டுக் கடாமேல். துரைக்கண்ணி நீயோ கடல் கண்டதில்லை. ஆயினும் உன் கண்ணில் எப்படி கடல் நீலம்? வெள்ளை விழியில், முழுநீலச் சுடர்சுழியுள் கரி கரை வழி"
- புத்ர

அவர்கள் ஒரு ஆடை தன் மகனாக பாவிக்கின்றனர். ஒரு நாள் அந்த ஆடு, தன்னை கட்டிய கையிற்றை அறுத்துக்கொண்டு எங்கோ செல்கிறது. ஆடு சென்ற வழி நம் அரூபக் கதை சொல்லியும் செல்கிறது. ஆடு ஒரு பூவரச செடியை மேய்கிறது. தனக்கு தேவையானவற்றை மேய்ந்த பின் ஒரு மேட்டில் உள்ள கிடாரியை காண்கிறது.

"கடாவின் நாபி நாக்கு சிவந்து சீறி எட்டிப் பார்த்துத் துடித்தது. மூன்றே தாவில் கடா உச்சி வந்து சேர்ந்தது. அதன் தொண்டையிலிருந்து ஆசை குமுறல்கள் கிளம்பின. கிடாரியிடம் இடம் தேடி அதை சுற்றி சுற்றி வந்தது. ஆனால், கிடாரி அதன் மோகத்தை ஏற்கும் நிலையில் இல்லை. ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்துத் தவித்தது.
தன் பன்முயற்சிகளுக்கும் இடம் கொடாதது கண்டு கடா வெகுண்டது. நாலடி பின்வாங்கி வேகமாய் ஓடி வந்து தாக்கி முட்டி, கிடாரியை கீழே வீழ்த்தி ஓடிவிட்டது. கிடாரி எழ முயன்று முடியாது முனகிற்று. அதன் வயிறு நெகிழ்ந்தது. கண்கள் செருகின. நாக்கு வெளித்தள்ளி உதடுகள் துடித்தன. அது வீழ்ந்த நிலையில் தன் பின்னின்று உயிர் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதை அதனால் காண முடியவில்லை. வலியின் அலறல்கள் தனித்தனிக் கிறுக்குகள் வகுத்துக்கொண்டு அதன் வாயினின்று புறப்பட்டன.
குட்டி கீழே விழுந்ததும் தாய் தன் முன் கால்களை மடித்து ஊன்றி எழ முயன்றது. ஆனால் சூல் மறுபடியும் அதைக் கீழே தள்ளிற்று. இன்னொரு குட்டி. ஈன்ற அசதியில் தாய் விழுந்த படியே கிடந்தது. மடியிலிருந்து ஓடிய பாலை மண் உறிஞ்சிற்று."
- புத்ர

இரண்டு குட்டிகள் பிறந்தாலும் அதற்கு பின் ஒரு குட்டியை பற்றி மட்டுமே சொல்லப்படுகிறது. நம்பத்தக்க கதை சொல்லி அல்லவே. அந்த குட்டி எழ முயன்று, தோற்று, நிலை பிசைகி வாய்காலில் குளித்துக்கொண்டிருந்த பாட்டி (அவன் அம்மா) இடம் போய் விழுகிறது.

அவள் கரையில் கிடத்தியதும் அது இறந்து போகிறது. கரையுச்சியினின்று அதன் தாய் அலறுகிறது. பாட்டிக்கு வயிறு சுரீலென்கிறது.

இந்த ஒரு சம்பவத்திற்குள் ஒளிந்திருக்கும் உருவகத்தை உணரும் போது இந்த நாவலின் சிறப்பை நம்மால் முழுதாக உணர முடிகிறது. துரைக்கண்ணிதான் அந்த பாட்டி. அவள் சாபம்தான் அந்த கடா. இல்லை அதை ஏந்திக்கொண்டு சென்ற அவள் மகன். அந்த கிடாரிதான் அவள் மருமகள். வாக்கப்பட்டவள். பிறந்த குழந்தைகளில் ஒன்றை பற்றி தகவலே இல்லை. அது இறந்தே பிறந்தது என்று நினைத்துக்கொள்ளலாம். மற்றொன்று பிறந்து உயிர் வாழ்ந்து காலூன்றுவதற்கு முன் இறக்கிறது.

"அடே!!! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது. பிறந்தாலும் தக்காது"

நாவலின் சில பகுதியில் பாட்டி அந்த கடாவை தேடுகிறாள். தேடிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் அது அகப்படாமல் தப்பி சென்று கொண்டே இருக்கிறது. இந்த சின்ன விஷயத்தின் மூலம், கிழவியின் உள்ளுணர்வுகளை எடுத்து சொல்கிறார் லா.ச.ரா. அவள் சபித்து விட்டாள். அது கை மீறி போகிறது. இனி தேடினாலும் அகப்படாது. ஆனால் அது மேய்ந்துகொண்டிருப்பது மட்டும் அவளால் உணர முடிகிறது. அந்த அரூபமும் அவளை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கிறது.

ஒரு நாள். கிழவி பாம்பு தீண்ட இறந்துகொண்டிருக்கிறாள். 'உன் சாபத்தின் வெளியேற்றத்தில் தோன்றிய நஞ்சு பதிந்த சொற்களை உயிர்ப்பிக்க நான் தான் கிடைத்தேனா' என்று பாம்பு நினைத்ததா? அதனால் தீண்டியதா? "பாம்பு தன் முட்டையை தானே நக்கிவிடறாமாதிரி நக்கிவிடுவாய்". கிழவி தன் தவறை வாய்க்காலடியில் உணர்ந்தாள். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறாள். விஷத்தின் நீலத்தில் அவள் விழிகள் நிறையும்போது அவளும் ஒரு துரைக்கண்ணி என்று நமக்கு புலப்படுகிறது.

இதிலிருந்து இந்த நாவலின் அற்புதத்தை நாம் உணரலாம். ஒரு வரி, ஒரு சொல், ஒரு எழுத்து கூட வீணாக இதில் இடம்பெறவில்லை. இன்னும் தெளிவாக பார்த்தோமேயானால் இந்த சாபம் தோன்றுவதற்கான காரணமும் தோன்றுகிறது. அந்த கடாவை அவள் மகனோடு ஒப்பிட்டு பார்த்தால், அது அறுத்துக்கொண்டு சென்றதுபோல் அவனும் உறவை அறுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். அந்த கோபத்தின் மிகுதியில்தான் அச்சாபம் பிறக்கிறது. இதை அப்பட்டமாக எடுத்து சொல்லவில்லை என்றாலும், ஒரு அழகுணர்ச்சியுடன் சொல்லியிருக்கிறார் லா.ச.ரா.அன்றாடம் நாம் காணும் மனிதர்களை பற்றி எழுதும்போது அதை விவரிக்க நம் நினைப்பு என்ற அலமாரியில் தோண்டினால் பல்லாயிரம் முகங்களும், உடல்களும் கிடைக்கும். ஆனால் தனக்குள் அலையடித்து வீசும் எண்ணங்களை, அதை தாண்டிய அமானுஷ்ய உணர்வுகளை, உருகொடுத்து உயிர்ப்பிக்கும் லா.ச.ரா. ஒரு வகையில் ஒரு "அம்மா" தான்..

(தொடரும் ...)

No comments:

Post a Comment

vaandhi page.....