Sunday, September 13

கதாநாயகி (சிறுகதை)


என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

கால்களுக்கு தனி மூளை வளர்ந்துவிட்டது. அதன் போக்கில் எங்கோ என்னை இழுத்துக்கொண்டு போகிறது. எங்கே போகிறேன் என்பதை பற்றி எனக்கு அக்கறையில்லை. இருக்கும் பட்சத்தில் இது ஒரு பயணமாகியிருக்கும். பயணத்தின் அனுபவங்கள் அளப்பரியது. அனுபவத்தின் அவதரிப்பிற்கு எழுத்தே கர்ப்பம். ஜனித்து ஜீவிக்குமேயானால் அதுவே கருவும் கதையும். ஆனால் இது வெறும் ரோந்துதான். பாதையின்றி மேய்கிறேன். காலின் உந்தல் நினைவலைகளை எழுப்பி அடிக்கிறது. குவிக்கரங்களுக்குள் மடங்கிய காற்றின் சப்தம் அலையை சூழ்ந்த மோனமாய் மனதில் படர்கிறது.


மின்மினிகள் காற்றில் வரைந்த ஒளிக்கீற்றுகள் போல் பறந்து செல்லும் வாகனங்களின் வெளிச்சம், இரவின் இருளில் வியாபித்து மிளிர்கிறது. மனித நடமாட்டங்கள் நிறைந்திருப்பினும் ஓவியப்பலகையின் விளிம்பில் வரைந்த சித்திரம்போல் மங்கல்.

சாளேஸ்வரம்?

ச இன்னும் வயது இருக்கிறது. அதை பிடுங்க ஒரு கண் கொத்தியோ, காட்டு வீரியனோ வரும். அதற்கு பால் வார்க்க எனக்கு துணிவு இருக்குமா? தெரியவில்லை.

எதற்கு இந்த போராட்டம்? சுற்றமும் சூழலும் என் வர்ணனையில் மூழ்கினால் வேலை தீர்ந்ததா? இல்லை அதுதான் என் வேலையா?

கரு, கதை, களம் எதுவும் இல்லை. ஆனால் நான் மட்டும்

விசுவகர்பத்தில் விதையாய் முளைத்து
அந்தரத்தின் கொடி வழியே குருதியுண்டு
உறுப்புகள் உப்பி வெடித்து
பருத்தி நூல் தலை மயிரை கோதி
அழுதுகொண்டே வெளியேறும்

போதும் நிறுத்து உன் சொல் விளையாட்டை. இயலாமையை மறைக்க இந்த பம்மாத்துகளா? கேடிப்பயலே ..

கதையை தேடி கதைக்குள்ளே அலைகிறேன். சொற்களின் இடையில் எறும்பு போல் புகுந்து தேடுகிறேன். வார்த்தைகளுக்கிடையில் மறைந்திருக்கும் அர்த்தங்களுடன் வாதிடுகிறேன். அவை அர்த்தங்களா? இல்லை அர்த்தத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் அபத்தங்களா? தேடத்தேட ... ம்ஹூம் ... ஒன்றும் இல்லை. வெற்றிடம்.

அசதி. தேடுவதில் ஒரு சோம்பேறித்தனம். அடுத்த சொல்லின் உருவமே அறியாத நிலையில் அர்த்தத்தை எங்கே தேடுவடது? புகுத்துவது? கால் போக்கிற்கு மூளை உண்டாகும்போது சொற்களுக்கு உண்டானால் வசதிதான். ஏதேது நோகாமால் நொங்கா? யமகாதகன் நீ. செய்தாலும் செய்வாய்.

????

என்ன இது? உண்மையாகவே கண் மங்கிவிட்டதா?

எதிரே ஒரு பெண். அதுவும் முழு நிர்வாணமாய். முழு? இல்லை. கை கால்களில் கருப்பு நிற stockings. அது சரி. மறைக்கப்பட வேண்டிய பொருள் எல்லாம் அப்பட்டமாய் தெரிகிறதே. நடுத்தெருவில் என்ன இது?

கதைக்குள் கதை தேடுகிறேன் என்று கனவுக்குள் புகுந்து விட்டாயா?
கனவுக்குள் நினைப்பு புகுந்தபின்னும் அது கனவாக இருக்குமோ?
விழிக்க வேண்டுமா? இல்லை இந்த கனவின் நிறைவை அடைய வேண்டுமா? என்ன கேள்வி? கேள்வியும் பதிலும் நீயேதான். பதிலாக நீ இருந்தால் கேள்வி ஏது? கேள்வியரியாமல் பதில் ஏது? ஒரு பதிலுக்கு ஆயிரம் கேள்விகள்.

கற்பனைக்குள் மேய ஆரம்பித்துவிட்டாயா? இதோ உன்னருகில் வருகிறாள். என்ன கூச்சமா? டேய் நீ இக்கால மனிதன் ... இதுவரை இக்கோலத்தை பார்த்ததில்லையோ?

ஆனாலும் பொது இடத்தில் என்ன இது? ச ச ....

சுவர்களில்லையேல் எவ்விடமும் பொதுவே. நீ வரம்புக்குள் அடைந்துக்கொள்ள ஒரு சாக்கு வேண்டும். நடிக்காதே. இதோ உன்னருகில் வந்துவிட்டாள். உன்னைத்தான் பார்க்கிறாள்.

"ஹாய்"

மடையா ... முழிக்காதே ஏதாவது பதில் சொல்

"ஹ ..." - கண்ணை பார்த்து சொல் - "லோ .."

"என்ன பார்க்கிறீர்கள்?"

"ஆங்? என்னது?"

"இல்லை அப்படி என்ன பார்க்கிறீர்கள் என்று வினவினேன்"

"அப்டிலாம் .." - யார் இவள்? - "ஒண்ணும் இல்லீங்க ... சும்மாதான் ... அப்டியே" - டேய் என்ன உளறல் இது - "உங்கள நான் பாக்கலீங்க" - ஐயோ முட்டாள், நீயே விழுகிறாயே - "இல்ல சும்மா வாக்கிங் போலாம்னு வந்தேன்"

"வாக்கிங்?"

"அதாங்க ... நடக்கறது" - நடைபயிற்சி - "ஆங் ... நடைபயிற்சி ... அது செய்யறதுக்குதான் அப்டியே சும்மா காத்தாட ..." - ஐயோ அசடு அருவியாய் வழிகிறது - "சரி நீங்க யாரு? இங்க என்ன நீங்க ... இப்டி ... ஒண்ணுமே இல்லாம ... அம்மண " - நாக்கை கடிக்காதே , நிர்வாணம் - "... அது ... நிர்வாணமா சுத்திக்கிட்டு இருக்கீங்க?"

"என்னை தெரியவில்லை?"

"???" - முழிக்காதே, எதையாவது சொல்லி சமாளிப்போம் - "எங்கேயோ பாத்தா மாறி" - எதற்கு இந்த அண்டப்புளுகு, அவளிடமே கேள் - "... இல்லங்க ... தெர்ல ... உங்கள எனக்கு தெரிஞ்சிருக்கணமா?" - சபாஷ்!! அருமையான கேள்வி

"நிச்சயமாக ... நான்தானே உங்கள் கதாநாயகி"

"???" - எனக்கும் புரியவில்லை - "கதாநாயகியா??"

"ஆம்"

"நீங்க எந்த படத்துல நடிக்கிறீங்க?"

"படமா? நான் உங்கள் கதையின் நாயகி"

"?????????" - மீண்டும் மீண்டும் என்னையே நோண்டாதே, நானும் நீதான். எனக்கும் விளங்கவில்லை - "எந்த கதைய சொல்றீங்க?"

"நீங்கள் வாக்கிங் என்ற பெயரில் தேடிக்கொண்டிருக்கும் அந்த சிறுகதையின் நாயிகியே நான்"

தெத்துப்பல் தெரிய என் உதடுகள் பிரிகிறது. காற்றில் காய்ந்த எச்சில், விரிந்த உதடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கிறது. ஆச்சரியம்.

ம்ம் ... கவனம் சிதற வேண்டாம்...

"அந்த சிறுகதை என்னனு கொஞ்சம் சொல்றீங்களா"

"ஹ ஹ ஹ ஹ ஹா "

என்ன சிரிக்கிறாள்? நீ கேட்டது விளையாட்டு என்று நினைத்தாளோ? நேரங்கெட்ட நேரத்தில் இது உனக்கு தேவைதானா?

"இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?"

"இல்லை ... கதையே இல்லாமல் நாயகியை உருவாக்கி இருக்கிறீர்களே, அதை நினைத்து சிரித்தேன்"

"சரி ... நான்தான் உங்கள உருவாக்கினேன்னு யார் சொன்னா? என்ன உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இது உங்களிடம் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி அல்லவோ?"

"????" - இத்தனை கேள்வி குறிகளை முகத்தில் குத்திக்கொண்டு விழிக்காதே, நமக்கு தேவை எதுவோ அதை பெறுவோம்- "அந்த கதை...."

"உங்கள் வீடு அருகாமையில் தானே உள்ளது? அங்கே செல்வோமா?"

"ஆங்..." - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையேனும் உளறிவிடாதே. ஆற அமர யோசித்து - "போலாமே" - உன்னை திருத்த முடியாது.

நடக்கும் ஒவ்வொரு அடியிலும் நடந்ததை பற்றியே யோசனை. கதையையே தொலைத்துவிட்ட எனக்கு நாயகி மட்டும் கிடைத்திருக்கிறாள். இனி இவளை சுற்றி கதை பின்ன வேண்டுமோ? ஆடைக்கு ஏற்றபடி உடலை செதுக்கு.

டேய் ... என்ன ஆயிற்று உனக்கு? ஓட்டுத்துணியில்லாமல் உடம்பை பார்த்தால் மூளை மங்கி விடுமோ? இவர் நாயகியை உருவாக்கினாராம் அந்த நாயகியே இவரிடம் வந்து "என்னை தெரியவில்லையா" என்று கேட்கிறாளாம். அவளிடம் இவன் கதை கேட்கிறானாம். தனியாக பேசுகிறாயா என்று ஒருமுறை சோதித்துக்கொள். அது ஒரு புறம் இருக்கட்டும். அவளிடம் ஏன் வந்தாய் என்று கேட்க தோன்றியதா உனக்கு?

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க" - என்னடா கேட்க போகிறாய் - "நீ ..." - என்ன பேச்சு ஒருமைக்கு மாறி விட்டது? - "இல்ல ... நீங்க இப்போ ஏன் இங்க வந்துருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா"

"என் முடிவை தெரிந்துகொள்ள"

"முடிவா?" - அப்படி போடு அரிவாள - "அப்டினா?"

"இதற்கு நான் என்ன விளக்கம் கூறுவது? நான் இங்கு இப்போது நிலையற்று இருக்கிறேன். சிருஷ்டிக்கப்பட்ட எந்த படைப்பிற்கும் முற்றுப்புள்ளி வைக்கத்தானே வேண்டும். முற்றுப்புள்ளிகள் ஒன்றன் பின் ஒன்று ஒட்டிக்கொண்டு ஆவளியாய் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எனக்கு தேவை நிறைவு"

சுத்தம். ஒன்றுமே புரியவில்லை.நிச்சயமாக இவள் உன் படைப்புதான்.

ஆம். இவள் யதார்த்த பேச்சிலேயே கவித்துவம் நிரம்பி இருக்கிறது. இவள் என் படைப்பெனில் எனக்கு அதில் பெருமையே. பேச்சை போல் அவளின் வாழ்கையும் கவிதை என

சிறு சிறு வார்த்தை கோர்வைகளாய்
அதன் குஞ்சுகளாய்
வரி
வரியாய்
அழகாக

சுய பிரஸ்தாபத்தில் உன் புட்டத்தை நீயே முத்தமிட்டுக்கொண்டு பக்கத்தை நிரப்பாதே. ம் ... மேலே ...

"இல்ல ... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"

"என்னை பிறப்பித்த கர்த்தா நீங்கள். உங்களிடமே என் முடிவு இருக்கிறது. அது அறியவே நான் இங்கு வந்திருக்கிறேன்"

அவள் சொல்லி முடிக்க என் வீட்டை அடைந்தோம். தெருவில் யாரேனும் பார்க்கும் முன் உள்ளே செல்ல வேண்டும்.

"ஹ ஹ ஹ ஹ ஹா ... எதற்கு இந்த பயம். யார் கண்ணுக்கும் நான் தெரியவில்லையே"

"!!!!????"- !!!!???? - "அப்ப"- நாம் பேசுவது அனைத்தும் அவளுக்கு - "கேக்குதா?"

"உங்கள் படைப்புலகில் மேயும் அத்தனை உயிர்களில் நானும் ஒருத்தி. நாங்கள் எல்லோரும் நரம்புகளாய் பின்னி பிணைந்திருக்கிறோம். எத்திக்கில் எவ்வுயிர் அதிர்ந்தாலும் எல்லோருக்கும் அது தெரியும்"

காற்றை எதிர்கொள்ளும் தீபச்சுடர் போல் ஆடியது பிரக்ஞை. குழப்பத்தில் குழப்பம். சேமியா காட்டுக்குள் நுழைந்த புழு. அன்ன பட்சி அல்ல நான். புழுதானே. பாம்பு அல்லவே. இரத்தம் அசைவம். அது பாலாய் உருகொண்டால் சைவம். எல்லாம் ஒன்றன்றோ. அசைவத்திலும் ருசி உண்டு. சேமியா பாயசத்தில் இரத்தம் கலக்கட்டும். புது flavour.

வீட்டுக்குள் வந்துவிட்டாய் என்ற ஞாபகம் இருக்கிறதா? நினைவில் இடரும் அனைத்தயும் கொட்டி தீர்க்க இது என்ன சாக்கடையா? சீர் படுத்த வேண்டும். சொற்கள் கிடைத்ததென்று மொண்டு தெளிக்காதே. செப்பனிடு. உருவம் குலையாது ஒழுங்குபடுத்து.

"ஏன் நீங்க ட்ரெஸ் போடாம இருக்கீங்க"

மீண்டும் சிரிக்கிறாள்.

அடேய் மட சாம்பிராணி. நீ அப்படித்தான் படைத்து விட்டிருக்கிறாய். உன் செருப்பாலேயே உனக்கு அடி.

"சரி ஏதோ காரணம் இருக்குனு நெனைச்சுக்கறேன் ... திஸ் இஸ் ப்ளடி கன்ஃப்யுசிங்"

"யு டோன்ட் ஸே"

"உனக்கு" - ???? - "இங்கிலீஷ் தெரியுமா?"

"அஃப்கோர்ஸ் ... ஏன்? எனக்கு தெரிந்திருக்க கூடாது என்று நினைக்கிறீர்களா?"

"இல்ல ... நீ சாதா தமிழ்ல பேசாம சுத்தத்தமிழ்லையே பேசறியே அதனாலதான்"

"ஆம் அதேதான் நானும் கேட்கவிருந்தேன் ... என்னால் ஏன் உங்களைப்போல் எளிய தமிழில் பேச முடியவில்லை"

டேய் அது உன் கையில் தானே இருக்கிறது. அதை மறந்துவிட்டாயா? நீ நினைத்தால் அவளை பேச வைக்க முடியுமே.

எதற்கு? எனக்கு அவள் இப்படி பேசுவதுதான் பிடித்திருக்கிறது.

"ஹ ஹ ஹா ... யோர் விஷ்"

சொல்லிக்கொண்டே எதிரிலிருந்த சுவற்றிற்கு முன் அவள் நின்றபோது ... எனக்கு புரிந்தது. சுவற்றிலிருந்த கருமை அவள் கை கால்களை விழுங்கியபோது ... அவள் தலை சாய்ந்துகொண்டே என்னை கண்டபோது .... புரிகிறது

வீனஸ் தே மிலோ

அனாவசிய அங்கங்கள் மறைகிறது. தொங்கும் முலைகளில் கருவட்டம் பதித்த காம்புகள் கூர்மை அடைகிறது. பட்டு நூல் போன்ற இள மயிர்கள் கதிரவனை சூழ்ந்த ஒளிக்கிரணங்கள் போல் அதனை சுற்றியிருக்கிறது. அடிவயிற்றின் கீழ் ரோம அடர்த்தியின் மிகுதியில் அவள் பெண்குறி மறைந்திருக்கிறது. அடிவயிறும் சற்றே உப்பியவாரு ... என்ன? இவள் கர்பமா? இதுவரை நான் காணவில்லையே.

"ஆம். நான் கருவுற்றிருக்கிறேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்"

சிலை உருபெற்று என்னருகில் வருகிறது. இவள் வீனஸ் அல்ல. அவளைப்போல் வழித்தேடுக்கப்பட்ட மேனி கொண்டவள் அல்லள். அத்தகைய பூரணத்துவம் கொண்ட உடலில் உண்மையில்லை. சிற்சிறிய ஹீனங்களில் இருக்கும் உன்னதம், அது தரும் நிறைவு, அபரிமிதமானது. என் முன்னிருந்த மேஜையில் அவள் ஏறி, புட்டம் குதிகால்களை முத்தமிட்டவாறு, மோவாயை குறுக்கி, உதடுகளை கூப்பி, அதன் மேல் உள்ள மயிர்த்துளிகள் கூட, என் முன் மண்டியிட்டு பிரசவிக்கிறாள். யோனியிலிருந்து மின்னிக்கொண்டே, வழ வழ வென்று வெளிப்பட்டது ஒரு ... துப்பாக்கி.

"என்னது இது?"

என் கேள்வியை ஊகித்ததுபோல் நான் முடிக்கும் முன்னரே அவள் "என்னுள்ளிருந்த கரு" என்றாள். இதுதான் எனது கருவும். ஆனால் இதை வைத்து நான் என்ன செய்வது?

கருவை தேடிக்கொண்டிருந்த உனக்கு அது கிடைத்துவிட்டதே. வேறென்ன வேண்டும்? இதை வைத்து எதையாவது எழுது. அதை வர்ணி. உவமைகளில் தோய்த்து எடு. உருவகங்களில் வதக்கு. சரக்கு இல்லாமல் சமாளிப்பதை உனக்கு சொல்லித்தர வேண்டுமா?

இதை வைத்து நான் என்ன செய்வது?

"என்னை சுடுங்கள்"

மீண்டும் சுவற்றின் அருகில் இருந்த அவள் - அவள் ஃபிலோடமைட்டோ(thalodamite)? - என்னை பார்த்து சொல்கிறாள். பளிங்கு சிற்பமாய் காட்சி அளிக்கிறாள். கை நழுவ துடிக்கும் துப்பாக்கியை எடுக்கிறேன். அவளை சுடத்தான் வேண்டுமோ? கருவைக்கொண்டு கதாநாயகியை அழிப்பதா? அவளினின்று பிறந்தது அவளை அழிக்குமாயின் என்னிலிருந்து பிறந்த அவள் என்னை அழித்தாலோ? துப்பாக்கியின் நெடுங்குழாயை பற்கள் நற நறக்க கடிக்கிறேன். அவளிடம் ஒரு கலவரம். விருப்பமில்லை போலும். ஆனால் எனக்கு புரிந்தது. எங்கோ தூரத்தில் தெரிந்த கதையின் நிறைவை இதோ அடைந்துவிடுவேன்.

என்ன சொல்கிறாய்?

ஆள்காட்டி விரல் ஆளை தீர்க்கும் வேளை வந்துவிட்டது.

அப்படி என்றால்?

வீனஸ். உனக்கு என் நன்றி. வருகிறேன்.

டமால்!!!

எழுத்துக்கோர்வையே சப்தத்தின் பிரதிநிதி
காம்பிலிருந்து கொய்ப்பட்ட மலர்
கண்ணயர்ந்த நித்திரையின் மோனம்
வெண் சுவற்றில் கரி எழுதிய கவிதை
தேனுரிந்த வண்ணத்துப்பூச்சியின் நிறைவு

எல்லாம் அடைந்தவனாய், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும், இந்த தருணத்தில், இதே சிறுகதையின் முதல் வரியை எழுத தொடங்குகிறேன். ஆனால் ...

என்ன எழுதுவது என்று தெரியவில்லை.