Sunday, September 6

கோழி செய்திகள்: சரித்திரம் படைக்கும் மானாட மயிலாட


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சி சரித்திரம் படைக்க இருக்கிறது. இதுவரையில் யாரும் எதிர்பார்க்காத, முற்றிலும் புதிதான ஒரு நடன சுற்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது. "இது எங்கள் நெடு நாள் கனவு" என்று நிகழ்ச்சி தயாரிப்பாளரும், முக்கிய நீதிபதியுமான கலா ... மன்னிக்கவும் கலாக்கா கூறுகிறார்.கலா மாஸ்டர் (எ) கலாக்கா

மானாட மயிலாட என்பது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு உலக பிரசித்தி பெற்ற அற்புதமான நடன நிகழ்ச்சி என்று சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால் தமிழ் தொலைகாட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோசில் மானாட மயிலாட ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மக்களின் கற்பனைக்கெட்டாத, நடன சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டு, பல்வேறு புதிய சுற்றுகளை அறிமுகம் செய்து நடனத்தை தவிர மற்ற அனைத்தையும் வளர்க்கும் நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட, அடுத்து வரும் நிகழ்ச்சியில் புதுமையை புகுத்த போகிறது.

"எங்களுக்கே வியப்பாக இருக்கிறது ... நிச்சயமாக இது ஒரு புது முயற்சி" என்று கூறுகிறார் நடிகை மீனா. "உலக நடன வரலாற்றில் இது மிக உன்னதமான முயற்சி. போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொண்டுவர இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறிய ஸ்ரீ காந்த், சினிமாவில் தன் நடனுத்துக்கே பேர்போனவர் என்று சொல்ல நினைக்கிறோம். ஆனால் உண்மை விளம்பிகளான எங்களால் அதை செய்ய முடியவில்லை.

இந்த சுற்றின் சிறப்பு பற்றி கலாக்காவிடம் கேட்ட போது - " இதுவரை மானாட மயிலாட வின் சரித்திரத்தில் பல்வேறு ரவுண்டு இருந்திருக்கிறது. 'ஸ்லோ பாஸ்ட் ரவுண்ட்' 'பல்டி ரவுண்ட்' 'குப்புற படுத்து கும்மி அடிக்குற ரவுண்ட்' 'டாஸ்மாக் ரவுண்ட்' 'பாக்யராஜ் ரவுண்ட்' என்று நடனத்திற்கு மரியாதை செய்யும் பல ரவுண்டுகள் வந்திருந்தாலும் இதுதான் வெகு சிறப்பான ரவுண்ட் என்று எங்களுக்கு தோன்றுகிறது." அப்படி என்ன ரவுண்ட் என்று கேட்டதற்கு "ஸ்கொயர் ரவுண்ட்" என்று கூறினார் கலாக்கா. "என்னன்னு புரிலல்ல? அதான் மானாட மயிலாட" என்று கூறிக்கொண்டே சிரித்தார் கலாக்கா.

இந்த ரவுண்டிற்கு எப்படி பயிற்சி செய்கிறீர்கள் என்று ஒரு போட்டியாளரிடம் கேட்டபோது, அவர் மிக ஆழமாகவும், கோர்வையாகவும் பல விஷயங்களை எடுத்துச்சொல்ல சொல்ல நாங்கள் வாயடைத்துப்போய், பிரமிப்பில் அவரயே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ஒரு மிக முக்கியமான விஷயத்தை நாங்கள் உணர்ந்தோம். எங்களுக்கு ஹிந்தி தெரியாது என்று. அடுத்து நின்ற மற்றொரு போட்டியாளரிடம் கேட்டபோது "எனக்கு தமிழ் தெரியும் என்றார்". அதனால் அவரிடம் இந்த சுற்றை பற்றி கேட்டோம். "எனக்கும் பெருசா ஒண்ணும் புரிலீங்க. ஸ்கொயர் ரவுண்ட் அப்டிங்கறது என்னனு புரிஞ்சாதானே ஆடறதுக்கு. எங்க அம்மா சின்ன வயசுலயே கணக்கு படிடானு சொல்லிச்சி. ஆனா எனக்கு டான்ஸ் தான் முக்கியம்னு சொல்லிட்டேன். இப்போ நெனச்சா வருத்தமா இருக்கு" என்று சொன்ன அவரிடம் உங்களுக்கு பிடித்த ரவுண்ட் என்ன என்று கேட்டதற்கு "டாஸ்மாக் ரவுண்ட் தான்" என்று மிக தெளிவாக கூறினார்.

"கணித வடிவியல் ரீதியில்கூட இது சாத்தியமில்லை. ஆனால் இதை நாங்கள் சாதித்துக் காட்டப்போகிறோம். நிச்சயமாக தமிழகத்தின் பெயரை எங்கோ கொண்டு செல்லப் போகிறோம்" என்று பின்னாலிருந்து ஏதோ நடன பயிற்சியாளர் கூறிக்கொண்டிருந்தார். "அவர் அப்படித்தான். சரக்கு அடிச்சிட்டு ஒளருவாறு. அதெல்லாம் கண்டுக்காதீங்க" என்று நம் போட்டியாளர் நம்மிடம் கூறியவுடன் டாஸ்மாக் ரவுண்டின் தாக்கத்தை உணர்ந்தவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.

இதை பற்றி "விஜய் டிவி ஜோடி" நிகழ்ச்சியை சார்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டபோது - "இதெல்லாம் சும்மா பம்மாத்துங்க. எப்போதும் இந்த மாறி எதையாவது சொன்னாதான் ரேட்டிங் வரும். ஆனா உள்ள ஒண்ணுமே இருக்காது" என்று நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். "இந்த மாறி ரவுண்ட் ரவுண்டா வைக்குறத நாங்கதான் கண்டு பிடிச்சோம். இவங்கல்லாம் இப்ப அதா காபி அடிக்கிறாங்க. போனா போகட்டும். எத்தன ரவுண்ட் வேணாலும் வரட்டும். ஆனா அதவிட பெரிய ரவுண்ட் எங்கக்கிட்ட இருக்கு" என்று தன் கையில் வைத்துக்கொண்டிருந்த நடிகை ராதா படத்தை காட்டினார்.

ஜோடி நிகழ்ச்சியின் நீதிபதி - நடிகை ராதா

மேலும் பல கேள்விகள் கேட்கும் முன் "அவசரமா பீச் ரிசார்ட் போகணும்" என்று கூறினார். அடுத்த வாரம் ஜோடி பீச் ரிசார்ட்டில் நடைபெறவிருக்கிறது. ஏதாவது புதிதாக இருக்குமா என்று கேட்டதற்கு "நிச்சயமா ... டான்ஸ் தவிர எல்லாமே புதுசா இருக்கும்" என்று கூறினார்.

"முட்டி மூவ்மெண்ட்ஸ்" "ஜட்டி மூவ்மெண்ட்ஸ்" "குட்டி மூவ்மெண்ட்ஸ்" என்று பல்வேறு மூவ்மெண்ட்ஸிற்கு பெயர் போனா மானாட மயிலாட சரித்திரம் படைக்குமா? தனக்கு எதிராக சொல்லப்படும் கருத்துக்களை தகர்த்து எரிந்து சாதனை புரியுமா? Geometry தான் பதில் சொல்ல வேண்டும்.

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒரு அபத்தமான பதிவு என்று இன்னும் உங்களுக்கு புரியவில்லை எனில் இதை நீங்கள் படிக்க வேண்டாம் :P