Sunday, September 27

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி - என் பார்வை


நாவல் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? அது நமக்குள் என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்? எது இலக்கியம் ஆகிறது? இலக்கியப்படைப்பாக ஒரு புதினத்தை கருதுவோமாயின் அதன் தன்மைகள் என்ன? குணங்கள் என்ன? வரம்புகள் என்ன? வரையறைகள் என்ன? கருத்துகள் என்ன? கோட்பாடுகள் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு நம்மால் பதில் அளிக்க முடியும். ஆனால் அப்பதிலும் ஒரு கருத்தாகவே இருக்கக் கடவது. தேர்ந்த எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் சொல்லும் பதில்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் அது வாசிபனுபவத்தை திரிக்க வல்லது. தூய்மையான வாசிப்பு என்பது, எவ்வித முகப்பொ முன்னறிமுகமோ இல்லாமல் வாசிக்கும் போது எழுவதே ஆகும். அத்தகைய வாசிப்பினால் ஏற்படும் பாதிப்பும் சஞ்சலங்களும் அளப்பரியது. ஸீரோ டிகிரி அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஒரு சராசரி நாவலுக்கு உண்டான கட்டமைப்பையும் மொழிபையும் தகர்த்தெறியும் படைப்பே சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி.

ஸீரோ டிகிரி

ஒரு இடியாப்ப குழப்பத்தோடுதான் தொடங்குகிறது. நாவலை எழுதியவரும், அந்த கையெழுத்து பிரதியை திருத்துபவரும், திருத்தியதை சரிபார்க்க திருத்துபவரும் கதை சொல்லிகளாக உருக்கொண்டு தத்தம் கருத்துகளையும், கேள்விகளையும் ஆங்காங்கே செருகிவிட்டு கழண்டு கொள்கிறார்கள். அது மட்டும் அல்லாது கையெழுத்துப் பிரதி பிரசுரிக்கப்பட்ட போது பக்கங்கள் ஏடாகூடமாக கலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கதை சொல்லியின்மேல் நாம் பொதுவாக கொள்ளும் நம்பகத்தன்மையை உடைத்தெவறிதற்கே இத்தகைய முன்னறிவிப்புகள் பயன்படுகின்றன. பின் நவீனத்துவத்தின் முக்கிய கோட்பாடான "எழுத்தாளனின் இறப்பு" (Author is Dead) இங்கே நிர்வாணப் படுத்தப்படுகிறது.

நாவலின் பெரும்பாலான பகுதிகள், அது அமைந்த விதம் கொண்டும், அதிலிருக்கும் மொழி நடையின் மூலமும் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. ஆரம்பப் பக்கங்களில் வரும் "இந்த நாவலை படித்துக் கொண்டிருக்கும்போது நீ ..." என்று தொடங்கும் பந்தியாகட்டும், "இந்த நாவலை பற்றி என்ன நினைக்கிறாய்" என்ற பின்னூட்ட வினாக்களாகட்டும், ஆண்மை குறைக்கு குள்ளச் சித்தன் தரும் நிவாரணங்களை எடுத்துச் சொல்லும் இடங்களாகட்டும், "பாரடா பரதேசி, இது நீ இதுவரை வாசித்த கச்சடா கதை அல்ல" என்று (மிக உரக்க) சொல்லி சொல்கிறது. நம் கவனத்தை ஈர்க்க சத்தம்தான் சில நேரங்களில் உதவுகிறது.

கதையின் நாயகன் (இல்லை முக்கிய ஆண் கதாப்பாத்திரம் என்று வைத்துக்கொள்வோம், பின் நவீனத்துவத்தில் கதையே இல்லாத போது நாயகன் எங்கே) சமுதாயத்தின்பால் வெறுப்பு கொண்டுள்ள தன்மை பெற்ற Sociopath. தன் ஆணுறையின் முன் பகுதியை வெட்டி தான் புணரும் திருமணமான பெண்ணை கருவுறச் செய்வது, கடற்கரையில் ஒரு பெண்ணுடன் சல்லாபித்துவிட்டு அவளை கொல்வது, பரிச்சயம் இல்லாத பெண்களை விளித்து ஆபாச உரையாடல்கள் நிகழ்த்துவது என்பது போன்ற இடங்கள் நம் அக மரபுகளையும், புனிதங்களையும் சோதிக்கிறது. சோதிக்கிறது என்றால் ஹிட்லர் யூதர்களை சோதித்தது போல. இதையும் தாண்டி "120 days of sodom" என்ற படைப்பின் நகலாக (கிட்டத் தட்ட) வரும் இடங்கள் அருவருப்பு என்ற உணர்வையே கேள்விக்குறியாக்குகிறது. இதை அவர் முன்னுரையில் குறிப்பிட்டாலும் இது வரை அத்தகைய படைப்புலக பரிச்சயம் இல்லாதோருக்கு அவ்விடம் அதிர்ச்சி அளிக்ககூடும்.

மேற்கூறிய எல்லா விஷயங்களுமே நாவலின் வலிமையையும், வித்தியாசத்தையும் எடுத்துரைத்தாலும், அந்த வலிமை தன்னை தானே அழுத்தி சுருங்கி வீழ்சியாகிறது. முக்கியமாக அவந்திகாவின் பகுதி. அதை ஒரு வருத்தத்தின் ஆபாசக் கூற்றாக மட்டுமே பார்க்க முடிகிறது. களம் அமைந்த விதத்தின் படி அவள் மேல் நாம் கொள்ளும் வருத்தம் மிதமிஞ்சியதாகவே இருக்க வேண்டும். அது நாயகனை வீழ்த்தும் ஒரு உக்தி. அவன் இதுவரை செய்த எல்லா செயல்களுக்கும் அவன் உயிரை உலுக்கும் எதிர்வினையாகதான் அவந்திகா இருக்கிறாள். ஆனால் இதை மேம்போக்காக சொல்லாமல் "அழுகிறாயா ... இரு ... உன் கண்களைக்கிள்ளி, நாசியை அறுத்து, வாயை கிழித்து, ரத்தத்தை உறிஞ்சி ... இத்யாதி இத்யாதி" என்று நம்மை பிழிந்து கொண்டே இருக்கிறார் சாரு. "நம்மைச் சுற்றி நடக்காததை நான் கூறவில்லை" என்று அவர் கூறினாலும், நடந்ததை அப்படியே கூறுவதில் எங்கே ஆளுமையும் நுண்ணுணர்வும் இருக்கிறது என்ற கேள்வி நம்முள் எழுகிறது. காரண காரியங்களைத் தாண்டி ஒரு கதாப்பாத்திரத்தை சித்தரிப்பதில் பின் நவீனத்துவம் அழிகிறதா என்றும் கேட்க தோன்றுகிறது.

சாரு என்ற எழுத்தாளரின் அறிமுகத்தோடு நாம் அவர் புத்தகங்களை வாசித்தோமேயானால் பின் நவீனத்துவம் என்ற பிம்பம் மட்டுமே நமக்கு தெரிகிறது. பின் நவீனத்துவ கோட்பாடுகளைக் கொண்டு சமைத்த இப்படைப்பில் கோட்பாடுகள் தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் அது ஒன்றோடொன்று சேர மறுக்கிறது. இதற்கு பெரும்பாலும் சாருவே காரணம் என்று தோன்றுகிறது. பின் நவீனத்துவ கையேடுகளில் இருக்கும் எல்லா புள்ளியையும் ஒன்று சேற்பதாகவே அவர் எழுத்து அமைந்திருக்கிறது. நாவல் என்ற தளத்தைத் தாண்டி ஒரு ஆசிரியன் மாணவனுக்கு எடுத்துக்காட்டாக கூற எழுதப்பட்ட படைப்பு போலவே தோற்றம் அளிக்கிறது. ஆனால் அது இலக்கியமா என்ற சந்தேகம் மீண்டும் எழுகிறது.சாரு நிவேதிதா

ஸீரோ டிகிரியின் தனிச் சிறப்பு - இது அமைக்கப்பட்ட விதத்தாலும், இதனுள் மேற்கோளிட்டு காட்டப்படும் உலக இலக்கிய படைப்புகளின் வாயிலாகவும், சாரு ஒரு மிகப் பெரிய நிழல் பிம்பத்தை உருவாக்கி தன்னை ஒரு ஆளுமையாக நிறுவுகிறார். தமிழ் நாவல்கள் என்றால் பத்தாம் பசிலித்தனமான படைப்புகளும், கிராமச் சூழலில் உம்முணா மூஞ்சியாகத் திரியும் பெண்களின் கதையும், அக்ரஹாரத்தில் இருக்கும் மாமிகளின் அஜால் குஜால் மரபு மீறல்கள் மட்டுமே என்று இன்றும் நினைக்கும் பலருக்கு ஸீரோ டிகிரி என்பதுதான் சரியான பதில். தமிழ் இலக்கியத்தில் இதை விட ஆகச் சிறந்த படைப்புகள் இருப்பினும், தன் வித்தியாசமான அமைப்பாலும், சுவாரசியமான நடையாலும் உலக இலக்கிய மேடையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடிய ஒரு சிறந்த படைப்பாக ஸீரோ டிகிரி நிச்சயம் இருக்கும்.

பி.கு: நான் இன்னும் ராஸ லீலா படிக்கவில்லை.

பி.பி.கு: ஸீரோ டிகிரியின் கடைசி பக்கங்கள் மிக அற்புதம். இது போல் வேறு படைப்புகளில் சாரு எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.