Sunday, October 11

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் - என் பார்வை

கற்பனை உலகங்களை சிருஷ்டிப்பது எளிதல்ல. மாயாஜால, மந்திரங்களல்லாது, உண்மையின் பிரதிபலிப்பாக உருவாக்கப்படும் உலகங்களில் இருக்கும் படிமங்கள் நிஜத்தின் நீட்சியாக இருக்கக் கடவது. அத்தகைய உருவாக்கத்தில் ஒரு எழுத்தாளனின் முனைப்பும் தீவிரமும் அத்தியாவசியத்தை தாண்டிய விகுதியுடன் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு உலகம்தான் ஸோமிட்ஸியா. யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் என்ற நாவலின் கருவும், களமும் அவ்விடத்திலிருந்தே விரிவடைகிறது. ஒரு வகையில் அது ஒரு முக்கிய கதாபாத்திரம்.யுவன் சந்திரசேகர்
கதை எளிமையானது. உலகத்தின் வெவ்வேறு மூலைகளில், வாழ்கையை தத்தம் வளர்ப்புச் சூழல்களின் மூலம் அனுபவித்து மெருகேறிய மனிதர்களின் அறச்சீற்ற மோதல்களே இக்கதை. இந்திய எல்லையை பகிர்ந்துகொண்டிருக்கும் ஸோமிட்ஸியா, திபெத்தின் நிழலாக நமக்கு தெரிகிறது. நவீனம் அண்டாத கலாச்சாரத்துடன், பூர்வ கிரந்தம் என்ற ஒரு தொன்மையான நூலை ஒத்து அரசியல் அமைப்பையும், வாழ்கை முறைகளையும் அமைத்துக்கொண்டிருக்கும் ஒரு சாம்ராஜ்யம் ஸோமிட்ஸியா. அதைச் சார்ந்து நாட்டை ஆள கடமைப் பட்டவன் ஸோமிட்ஸு. அந்த ஸோமிட்ஸுவை தேர்ந்துடுக்கும் கடமை ஈனோங்குடையது. கதை நடப்பது 17-வது ஈனோங், 26-ம் ஸோமிட்ஸுவின் காலத்தில்.

இதல்லாது ஆப்பிரிக்க நாட்டில் பிறந்து, பின் தேசாந்திரியான லுமும்பா, நாட்ஸி படைகளுடன் வாழ்ந்து போரிட்டு உயிருக்குப் பயந்து ஜெர்மனியிலிருந்து தப்பித்த வேய்ஸ்முல்லர், தென் தமிழகத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் மேஜர் கிருஷ், வெளிநாட்டில் படித்து ஈனோங்கின் பிற்போக்கு சிந்தனையில் துளி கூட பற்றில்லாத வாங் யே என்ற படைத் தளபதி, சிறு வயதில் தாய் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஒரு சாம்ராஜயத்தின் அரசன் என்ற பொறுப்பை தலையில் சுமக்கும் இளைஞனான ஸோமிட்ஸு, நிரூபா, இல் சுங் போன்ற பல கதாப்பாத்திரங்களின் பார்வைகளும் காண்பிக்கப் படுகின்றன. இவர்களையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பிணைத்து, அவர்களின் வாழ்கை பயணிக்கும் திசையை மாற்றி அமைக்கிறது ஸோமிட்ஸியா.

ஈனோங் கிரந்தத்தையே வேத வாக்காக எடுத்துக் கொண்டு நாட்டை நடத்த விழைபவர். அதன்படி கல்வி என்பது பொதுவுடைமையாக கருதப்படாமல் அது ஸோமிட்ஸுகளுக்கும் ஈனோங்குகளுக்கும் மட்டுமே உரிய ஆடம்பரமாக கருதப்படுகிறது. பிரஜைகளோ தங்களுக்கே அளிக்கப்பட்ட சிற்சிறிய வேலைகள் செய்துகொண்டு, மாலை நேரத்தில் கேளிக்கைகளிலும், கலவியிலும் ஈடுபடுவது வாடிக்கை. இதற்கு அப்பாற்பட்டு வெளிநாட்டில் படித்த வாங் யே, ஈனோங்கிடம் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கோருகின்ற பொது, கல்வி பொதுவுடைமையானால் மக்கள் அறிவு பெற்று விடுவார்கள், அது நாட்டிற்கே ஆபத்து என்கிறார். இக்காலத்தில் இது போன்ற சிந்தனை பிற்போக்காக தோன்றினாலும், ஏதோ ஒரு நூலைக்கொண்டுதான் எல்லா ஆட்சியையும் நடைபெறுகிறது என்பதை ஈனோங் மேஜர் கிருஷிடம் சொல்கிறார். சரி இவ்விருவரும் எப்படி சந்தித்தார்கள்? அதற்கு நீங்கள் கதையை படிக்க வேண்டும்.

யுவன் முடிவுரையில் கூறுவது படி, இந்த நாவலின் களம் அமைந்தது பல்வேறு கட்டுரைகளின் சேர்க்கையை கொண்டு. ஸோமிட்ஸியா என்பது திபெத்தின் சாயலேன்பது முன்னமே நாம் கூறியதுதான். வேய்ஸ்முல்லர், லுமும்பா போன்றவர்களும் நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பே. இவ்விருவரின் நட்பு இந்த நாவலின் மிக அற்புதமான அம்சம். தங்களுக்குள் பொதிந்திருக்கும் குற்ற உணர்வை ஆழத்தில் புதைக்க உதவும் கருவியாக அவர்களிடையே நட்பு மலர்கிறது. கசந்த விஷயங்களால் ரணம் அடைந்த அவர்கள் உள்ளுணர்விற்கு அது மயில் பீலியின் வருடல் போல இதமளிக்கிறது. இருவேறு நபர்களின் வாழ்கையை நேர்த்தியாக சேர்த்து புனைந்த இந்த உபகதை மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தகைய அற்புதமான களமிருந்தும், ஏனோ ஒரு நிறைவை இந்நாவல் அளிக்கவில்லை. விட்டு விட்டு வரையப்பட்ட ஓவியத்தில் திட்டு திட்டாக இருக்கும் வண்ணம் போல் எல்லா களங்களும் தனித் தனியாக காட்சியளிக்கிறது. பல்வேறு வாழ்க்கைகளையும், சிந்தனைகளையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும், அறங்களையும், அரசியல் வழி முறைகளையும், முன் வைத்தாலும், இவை அத்தனையும் நமக்குள் கேள்விகளை எழுப்பத் தவறுகிறது. அதற்கு முக்கிய காரணம் - இந்த கதைக்குள் நாம் ஊறி உருகுவதற்கான சந்தர்ப்பம் அமையாததுதான்.

யுவன் தன் முடிவுரையில் இதற்கான காரணத்தை கூறுகிறார். பெரும்பாலும் பல கதைகள் அவருக்கு சிறு கதைகளாக மட்டுமே தோன்றுகிறது. நண்பர்களின் உந்துதலால் இவற்றில் சில நாவல் வடிவம் பெறுகிறது என்கிறார். இக்கதையில் அது மிகத் தெளிவாக நமக்கு தெரிகிறது. அது இப்படைப்பின் வீழ்ச்சியாகத் தோன்றுகிறது. ஆனாலும் யுவனின் கவிதை பொருந்திய நடையும், மொழி ஆளுமையும் பிரமிக்கும்படி இருப்பதை நாம் மறுக்க முடியாது. பூர்வ கிரந்த மொழி பெயர்ப்புகளையும், அதைப் பற்றிய வெளிநாட்டு பத்திரிகை ஆய்வுக் கட்டுரையையும் இடையில் புகுத்தி, சுவாரசியமான கட்டமைப்பை உருவாக்குகிறார்.

ஸோமிட்ஸு, ஈனோங், வாங் யே, வேய்ஸ்முல்லர், லுமும்பா போன்றோரின் வாழ்கைத்தளங்களும், இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதங்களும் இன்னும் விரிவாக எடுத்து சொல்லப்படவில்லை என்ற வருத்தம் நிரம்பியிருக்கிறது. இவர்களின் பின்புலம் சுவாரசியமாக மட்டும் அல்லாமல், பற்பல சிந்தனைகளை தூண்டக்கூடியது. உலகமே நவீனத்தின் திக்கை நோக்கி பயணிக்கும்போது, ஈனோங்கின் மனம் ஏன் மாற மறுக்கிறது? இந்த ஈனோங்கின் வாழ்கை என்ன? அவன் சிந்தனை எப்படி பண்பட்டது? வாங் யே எப்படி வெளிநாட்டில் படிக்க முடிந்தது? மேஜர் கிருஷ் ஏன் வேலையை விட்டு விலக வேண்டும்? எல்லா கேள்விகளுக்கும் பதில் ஊகிக்கக்கூட முடியாத அளவில் இக்கதை ஒரு அரைவட்டமாகவே இருக்கிறது.

நாம் வாழும் இவ்வுலகின் படிம உருவாக, நமக்குள் கேள்விகளை எழுப்ப வேண்டிய இப்படைப்பு, அக்ரஹாரத்தில் அழுகையுடன் முடிவுறுகிறது. என் பார்வையில் பகடையாட்டம் ஒரு தவிர்க்கப் பட்ட சந்தர்ப்பமே.