Sunday, October 4

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் - என் பார்வை

சாரு நிவேதிதா ஒரு விசித்திரமான எழுத்தாளர். தன் படைப்புகளை விட, அதைச் சார்ந்த கருத்துக்களாலும், விமர்சனங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமாகவே இருக்கிறது அவர் ஆளுமை. சாருவை பற்றி, இணையத்தில், மிக முற்போக்கான, பின் நவீனத்துவ transgressive எழுத்தாளர் என்று இருப்பதாலேயே, பலருக்கு அவர் படைப்புகளின் மேல் இயல்பான ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இப்போதும் ஏதாவது ஒரு நூலகத்திலோ, இல்லை புத்தகக் கடையிலோ, சாருவின் நாவலை எதேச்சையாக புரட்டிப் பார்த்தோமேயானால், அதில் வித்தியாசமான பல அம்சங்கள் இருப்பதை காண முடியும். அவரின் எழுத்தை ஏற்கனவே வாசித்தவர்களுக்கு அதில் அபாரமான வேகமும், அழகான மொழி நடையும் இருக்கக் கூடும் என்பதை ஊகிக்க முடியும். இது சாரு என்ற எழுத்தாளரின் மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த வெற்றியின் மூலம் இலக்கியவுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவி, தன் படைப்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். சாருவின் படைப்புகளில் அந்த படைப்பைத் தாண்டி சாருவே அதிகமாகத் தெரிவதுண்டு. எக்ஸைல் அது போன்ற ஒரு படைப்பே.இந்நாவல் பயணிக்கின்ற தளம், சாருவின் பிற நாவல்கள் வாசித்தவருக்கு மிகப் பரிச்சயப்பட்ட ஒன்றே. பல்வேறு பெயர்களைக் கொண்ட கதாப்பாத்திரங்கள், எழுத்தாளன் - கதை சொல்லி இருவேறு ஆட்களாக இருப்பது, பின்னர் அவர்களுக்குள் இருக்கும் பாகுபாடு மெல்ல மெல்ல கரைவது, சோகமே உருவான ஒரு பெண், எப்போதும் ஓவர்டோசில் இருக்கும் francophilia (இந்த நாவலின் முதல் பக்கத்திலேயே செர்ஜ் துப்ராவ்ஸ்கியின் ஆட்டோஃபிக்ஷன் பற்றிய ஒரு மேற்கோள் ஃபிரெஞ்ச் மொழியிலேயே முன் வைக்கப் படுகிறது), பல உலக இலக்கியங்களைப் பற்றிய குறிப்புகள் என்று தெரிந்த ஒரு பாதையிலேயே நம்மை வழி நடத்துகிறது.

சாரு என்றாலே "செக்ஸ்" கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு, அதை மட்டுமே எழுதுபவர் அல்ல என்று இப்படைப்பு உணர்த்தக் கூடும். எக்ஸைலில் பெரிதாகத் தெரிவது கலவி என்று நாம் புரிந்துகொள்ளும் செக்ஸ் அல்ல, பால் என்று பொருள்கொள்ளப் பட வேண்டிய செக்ஸ். ஆணுக்குள் இருக்கும் பெண், பெண்ணுக்குள் இருக்கும் ஆண் என்ற அகமுரண்களைப் பற்றிய சித்தரிப்பு இந்நாவலின் முக்கியப் பங்காக உள்ளது. இந்நாவல் தொடங்குவதே செக்ஸில் தான். மணமான ஒரு ஆணும், மணமான ஒரு பெண்ணும் உடலுறவு கொள்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பமே இந்நாவலின் முதல் climax (climax என்பதை சிலேடையாகப் பொருள் கொள்க). இவ்விருவரும் தம்பதிகள் அல்ல என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் நீங்கள் சாருவின் எழுத்துக்களை வாசித்ததில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. செக்ஸ் என்பது இந்நாவலில் முக்கியமான அங்கமாக இருக்கிறதே அன்றி இதன் கரு தனக்கே நிர்ணயித்துக் கொள்ளும் பாதை சற்றே வித்தியாசமானது. மேற்கூறிய இரு கதாப்பத்திரங்களின் இயல்பு வாழ்கையும், காதல் வாழ்கையும் பின்னிப் பிணைவது தான் எக்ஸைலின் ஒரு பெரும் பங்கு. அதே சமயத்தில் முன்னுக்குப் பின் முரணான வாதங்களைக் கொண்ட அப்பெண்ணின் நம்பிக்கையில்லா கூற்றுகளை, இடைச்செருகலாக நுழைந்து, ஆங்காங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறது "கொக்கரக்கோ" என்ற கதாப்பாத்திரம்.

சாரு நிவேதிதா

பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் இருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு, அதன் மொத்த இயக்கத்தையும் கணிக்கும் விஞ்ஞானிகள் போல் வாழ்க்கை என்ற பிரபஞ்சத்தில் செக்ஸ் என்ற ஒரு புள்ளியைக் கொண்டு அந்த வாழ்கையின் போக்கை நமக்கு எடுத்துரைக்கும் முயற்சியே சாருவின் படைப்புகள். எக்ஸைல், அந்தப் புள்ளியை மட்டும் மையப்படுத்தாமல் அதை தாண்டி வாழ்கை என்னும் பிரபஞ்சத்தின் அங்கமாக விளங்கும் வேறு சில கோள்களையும் கூர்ந்து நோக்குகிறது. ஒரு பெரிய நூலை படித்தபின் அதனுள் நமக்கு தேவையான விஷயங்களை கோடிட்டு குறிப்பெடுத்துக் கொள்வது போல், வாழ்வியல் சார்ந்த அத்தனை நூல்களையும் படித்துக் குறிப்பெடுத்துத் தொகுத்தால் அதுதான் எக்ஸைல். மேற்கூறிய மையக் கதாப்பாத்திரங்கள் அந்தப் புள்ளியை நோக்கிக் குவிந்து கிடக்க, அதை தாண்டிய வாழ்வியல் நோக்குகளை நமக்கு சிவா (எ) அம்பா (எ) கருவூரார் மூலம் சாரு காண்பிக்கிறார். யார் இந்த சிவா? இவன் மன நிலை எப்படிப்பட்டது? இவன் செயல்களுக்கு அர்த்தம் என்ன? இவன் மேல் உதயாவிற்கு ஏன் இப்படி ஒரு பிடிப்பு? என்று பல கேள்விகளை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கிறது இப்பாத்திரம். குறிப்பாக சிவா அம்பாவாக மாறுவதும் (ஆணினுள் இருக்கும் பெண் போன்ற அக முரண்களைப் பற்றி எழுதியதை நினைவு கூர்க) பின் கருவூரார் என்ற அவதார புருஷன் ஆவதும், அந்த ஒவ்வொரு நிலையிலும் அப்பாத்திரம் முன் வைக்கும் வாழ்கையை, மனிதர்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய அவதானங்களும் ஒரு உளவியல் ஊஞ்சலாட்டத்தை உண்டாக்குகிறது.எனக்குத் தெரிந்தவரை இதுவரை நான் படித்த சாருவின் கதைகளில் இதைவிட சிறந்த பாத்திரப் படைப்பு இருந்ததாகத் தோன்றவில்லை.

எக்ஸைலில் சாரு தனக்கே உரிய அதி தீவிர வீரியத்தோடு தோன்றாமல் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். தன் பொதுவான புலம்பல்களைத் தாண்டி இதில் ஆன்மீகம், அரசியல், சிட்டுக் குருவி லேகியம், சிந்தனைத் தேடல் போன்ற பல விஷயங்களைத் தொடுகிறார். இந்த நாவலைப் பற்றி "Life: A User's Manual" என்று அவர் கூறியதை இங்கே நினைவு கூறுகிறேன். நாவலுக்குள் இது எல்லாமே அனாவசியமானவையாகவே எனக்கு தோன்றியது. கிட்டத் தட்ட கோணல் பக்கங்களை படித்த உணர்வு. ஆனால் இந்த அமைதி ஒரு புதிய சாருவை எனக்குக் காட்டியது. அது எனக்குப் பிடித்திருந்தது.


அடுத்த கட்டமாக இந்நாவலின் போக்கிற்குத் துளி கூட சம்பந்தமில்லாத பல உபரி கதாப்பாத்திரங்கள் தத்தம் வாழ்கையை நம்முன் வைத்துவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் நகர்கிறது. இதன் பங்கு என்ன என்று சந்தேகிக்கும் முன்னரே நம்மை அறியாது அந்த கதை போகும் திசையில் பயணித்துக் கொண்டிருப்போம். இது எழுத்தாளர் சாருவின் தனித்திறமை. இந்த பத்திகள் அனைத்தும் தேவையா என்றால் இல்லை என்பதே என் பதில். ஒரு புறநிலை நோக்கோடு பார்க்கும்போது இது அவசியமில்லாத, பக்கங்களை நிரப்ப பயன்படுத்தப்படும் உத்தியாக தோன்றும். ஒரு வகையில் அது உண்மையே. ஆனால் இது சாருவின், சமூகத்தின் மீதான பார்வையை, உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கிறது. சாருவின் பல (எல்லா?) படைப்புகளிலும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் இருப்பது இயல்பே. பெரும்பாலும் கோணல் பக்கங்கள் போன்ற பத்தி எழுத்துக்களில் கூட இது போன்ற மனிதர்களை நாம் காண முடியும். ஆனால் ஒரு நாவலில் இவர்களின் பங்கு என்ன? இவர்களின் இருப்பு இந்நாவலின் புனைவுலகை எவ்வாறு பாதிக்கிறது? இதைப் பற்றிய எனது புரிதலை விளக்க சில விஷயங்களை நான் கூற வேண்டியிருக்கிறது.

லூயி பூனுவேல்

முதலாம் உலகப் போரின் முடிவில் கலை இலக்கியங்களில் மிகப்பெரிய புரட்சிகள் பிறந்தன. பல கலை-இலக்கிய இயக்கங்கள் மேலோங்கத் தொடங்கின. இதில் குறிப்பிடத் தக்க இயக்கங்களாக "தாதாயிசம்" அதன் கிளைப்பிரிவான "சரீயலிசம்" என்பனவற்றை கூறலாம். உலகப் போரின் கொடூரங்களால் நிலை குலைந்து, சமநிலை இழந்து, ஆழ்ந்த மனப் பிறழ்வுடன், பைத்தியம் போல பல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். போரின் வக்கிரத்தை உணர்ந்த எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு மன நிலை இது. இச்சமயத்தில் இருத்தலியல் எண்ணங்களைத் தாண்டி, வாழ்கையின் ஒரு அபத்தப் போக்கை இவர்கள் உணரத் தொடங்கினர். பெரும்பாலும் இவர்கள் நடுத்தர, விளிம்பு நிலை மக்களாக இருந்தனர். வசதியுடன் இருந்த மேற்குடியினர் மீது இயல்பாக காழ்ப்பும், கோபமும் அவர்களுக்கு இருந்தது. உயர் கலாச்சாரம் என்று அறியப்பட்ட இந்த பூர்ஜுவா வாழ்கை முறையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பல கலைப் படைப்புகள் வெளியேறின. அதில் முக்கியமாக "உன் சீன் அன்டொலு" (அண்டலுசிய நாய்) என்ற பூனுவேல்லின் குறும் படத்தை நாம் காணலாம்.


கரு கதை திரைக்கதை என்ற அத்தியாவசிய சினிமா விழுமியங்களுக்கு உட்படாத, வெறும் காட்சிக் குவியல்களாகவே இப்படத்தைப் பற்றிக் கூற முடியும். எந்த காட்சியும் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப் படக்கூடாது என்ற கொள்கையுடனேயே எடுக்கப்பட்ட ஒரு படம். அதற்கு ஏற்றவாறு நம் இயல்பான மானுடப் பகுத்தறிவிற்கு எட்டாததாகவே முழு படமும் அமைந்திருக்கும். இது ஒரு வகையான தூய்மை என்று நாம் கருதலாம். படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் ஒரு பெண்ணின் கண்ணை கத்தியால் ஒருவன் கீறுவான். வெட்டப்பட்ட அந்த கண்களிலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கும். அதோடு காட்சி முடிவுறும். வெளிவந்த காலத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய, அதிகம் பேசப்பட்ட காட்சியாக இது அமைந்தது. இன்றும் பலருக்கு இது ஒரு வன்மையான சித்தரிப்பாகத் தோன்றும். ஏனென்றால் இது முழுக்க முழுக்க, பார்பவனின் மனதில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட காட்சி. பூனுவேல்லின் கனவில் "நிலவினைக் கீறும் முகிலை" கண்டதும் இந்த காட்சி அவருக்குத் தோன்றியாதாக கூறுகிறார். அந்த உணர்வை திரையில் காட்சியாக மாற்றியமைத்தபோது உக்கிரத் தோற்றம் பெறுகிறது. நிலவினைக் கீறும் முகில் என்பதில் இருக்கும் ஒரு கவித்துவமான மேன்மை, கண்களைக் கீறும் கத்தியில் இல்லை. ஒரு வகையில் இரண்டும் ஒன்றே எனினும் இரண்டவாது வாக்கியத்தில் இருக்கும் வக்கிரத்தை ஏற்பதற்கு நம்முடைய மனம் ஒப்புக் கொள்வதில்லை. அந்த ஒவ்வாமையினாலேயே நாம் தர்க்கப்பூர்வமாக இவற்றை அணுக முயன்று இதன் முக்கியத்துவத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி அதை முடக்க விழைகிறோம். ஏனெனில் நம் மனதில் அத்தகைய வக்கிரச் சித்தரிப்புகளுக்கு என்றுமே இடமிருப்பதில்லை. நம் அக உணர்வுகளை பாதுகாக்க நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு தற்காப்பு முறையே இவை. வன்மம் பொதிந்த நிதர்சன வாழ்கையின் உண்மைகளை உணர்வதிலிருந்து தப்பிக்க நாமே பிறப்பித்துக் கொண்ட ஒரு வழி. பூனுவேல்லின் படம் அத்தகைய உண்மையை புலப்படுத்தி, மேற்குடியினரின் ஆழ் மனதில் கிளர்ச்சியை தூண்ட எத்தனித்தது. மாறாக அது எல்லோராலும் பாராட்டப்பட்டு அவர் முயற்சியை தோற்கடித்தது. (இந்த விஷயத்தில் சாரு இன்னும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்)

மார்ஸேல் டூஷாம்ப்

இன்னொரு மிகச் சிறந்த உதாரணமாக டூஷாம்ப்பின் படைப்புகளை எடுத்துக் கொள்வோம். டூஷாம்ப்பின் fountain என்பது தாதாயிசத்தின் ஒரு உச்சக் கட்ட வெளிப்பாடாகவும், 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைப் படைப்பாகவும் கருதப் படுகிறது. பொது அறிவு சிறிதேனும் உள்ளவன் இது ஒரு மேற்கத்திய கக்கூஸ் என்பதை அறிவான். சாதரணமாக நாம் காணும் நிலையிலிருந்து சற்றே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இதில் வேறேதும் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். கக்கூஸ் எப்படி கலை படைப்பானது? மல ஜலங்களை அன்றாடம் விழுங்கும் ஒரு அஃறிணைப் பொருள் எப்படி கலைப் பரிணாமத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது? இந்த கேள்விகளையே தான் அந்த படைப்பும் நம்மைக் கேட்கிறது. கலையைப் பற்றிய புறநோக்குப் பார்வையை சந்தேகிக்க வைக்கிறது. இந்த படைப்பின் அர்த்தத்தை உணர அந்தப் படைப்பு மட்டும் போதாது. அதை உருவாக்கியவரையும், உருவாக்கப்பட்ட காலத்தையும், அக்காலத்தை சூழ்ந்த அரசியலையும் நாம் கருத்தில் கொண்டால் மட்டுமே அப்படைப்பின் உன்னதம் நமக்குப் புரியும். இந்த படைப்பின் முழுமை அந்த படைப்பில் மட்டும் அல்ல. அதைச் சுற்றி இருக்கும் சமூக அமைப்பையும் சார்ந்து இருக்கிறது.

Fountain (ஃபவுண்டென்)

சாருவின் எழுத்தில் இருக்கும் பெரும்பாலான அர்த்தமற்ற, தொடர்பில்லாத பகுதிகள் இதைத்தான் செய்கிறது. இந்த பகுதிகளில் கவித்துவமோ, நுண்ணுணர்வோ அறவே கிடையாது. இதற்கும் கதையின் போக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை.இப்பகுதிகளைத் தவிர்த்து வாசித்தோமேயானால் கதை சார்ந்த புரிதலில் எந்தவித பாதிப்பும் இருக்கப் போவதில்லை. ஆனால் இதை மேற்கூறிய காட்சியோடு மட்டுமே நம்மால் ஒப்பிட முடியும். இது உணர்வுகளைத் தூண்டி உளவியல் ரீதியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. இதன் அவசியம் நம்முள் அதிர்வை ஏற்படுத்துவதிலும், நம் அக மரபுகளையும், புனிதங்களையும் தகர்ப்பதில் மட்டுமே உள்ளது. அங்கதமாகச் செய்யாமல் அப்பட்டமாக செய்வதால்தான் இதன் தாக்கம் மிக வலிமையாக இருக்கிறது. இத்தகைய அதிர்ச்சியின் மூலமாகவே சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். பள்ளியில் சில சமயம் ஆசிரியர் கடிந்து கொண்டு உரக்க கூறினால் மட்டுமே நாம் அமைதி காப்போம். அது போன்ற அவசியங்களை கருத்தில் கொண்டே இத்தகைய பகுதிகள் இந்நாவலிலும் இடம்பெறுகின்றன.

அதன் படி சாருவின் படைப்பை, படைப்பு சார் விமர்சனத்திற்கு உட்படுத்துவது அப்படைப்பிற்கு செய்யும் ஒரு அநீதி. படைப்பைப் பற்றிய புரிதல் மட்டும் அல்லாது அதைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும், அரசியலையும், மக்களையும் கூர்ந்து நோக்கவேண்டிய கட்டாயத்திற்கு அது நம்மை ஆட்படுத்துகிறது. டூஷாம்ப்பின் fountain போல சாருவின் படைப்புகள் மித மிஞ்சிய உணர்ச்சி வெளிப்பாடுகள் மட்டுமே. சமுதாயத்தில் ஊமைகளாய் இருக்கும் பல குரூர கதைகளுக்கு எழுத்து வடிவம் தந்து பேச வைக்கிறார் சாரு. அந்த உண்மையை உணராது "இது வெறும் கக்கூஸ்" என்று சொல்வதே அபத்தம் ஆகிறது. இதைப் பற்றிய விரிவான ஆய்வு செய்வது intellectual snobbery ஆகக்கூடும் எனினும் அதன் அவசியத்தை நாம் நிராகரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஆய்வுகளால் மட்டுமே கட்டவிழ்கப் படக்கூடிய பல்வேறு கதைகள் இதில் ஒளிந்திருக்கின்றன.

The discreet charm of the bourgeoisie

ஆனால் மேற்கூறிய ஒப்பீடுகளைக் கொண்டே நாவல்/சாரு வின் வீழ்ச்சியையும் நாம் அலச முடியும். பூனுவேல்லும், டூஷாம்ப்பும் அது போன்ற கிளர்ச்சியூட்டும் சர்ச்சைக்குரிய அபத்தப் படைப்புகளை மட்டுமே தருவித்தவர்கள் அல்ல. அவர்கள் உண்மையான கலை நுணுக்கங்களுடன் பல படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். El Angel Exterminador, The discreet charm of the bourgeoisie என்ற பூனுவேல்லின் படைப்புகளாகட்டும், Nude Descending on a Staircase என்ற டூஷாம்ப்பின் படைப்பாகட்டும் கலைஞர்களாக அவர்களின் வெவ்வேறு பரிமாணத்தைக் காட்டுகிறது. அவர்களுக்குள் இருக்கும் கருத்தியல் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாவிடினும் அப்படைப்புகளில் அழகும், நுண்ணுணர்வுகளும் மேலோங்கி இருப்பதை நாம் காணலாம். அவர்களின் படைப்பில் மையம் எப்போதுமே உயர் கலாச்சார மரபுகளைப் பற்றி கேள்வி எழுப்புவதிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் படைப்பில் கலை சார்ந்த அவர்களின் பன்முகத் தன்மையை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இந்தத் தன்மை இல்லாததே சாருவின்/எக்ஸைலின் மிகப் பெரிய குறைபாடு.

Nude Descending on a Staircase

சாருவின் நாவல்கள் பெரும்பாலும் ஒரே போன்ற மையக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஸீரோ டிகிரியில் இத்தகைய அணுகு முறையை நாம் மேற்கூறிய எடுத்துக்காட்டுகளோடு நியாயப்படுத்தலாம். ஏனெனில் அதன் நோக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவனத்தை ஈர்ப்பதே. ஆனால் அதற்குப் பின் வந்த காமரூபக் கதைகளும் சரி, எக்ஸைலும் சரி, ஸீரோ டிகிரியின் மேல் உருவாக்கப்பட்ட ஒரு ஃபஸாடாகவே உள்ளது. வெளிப்புற அலங்காரங்களோடு நமக்குத் தெரிந்த ஒன்றையே மீண்டும் தருகிறது. கொச்சையாக சொன்னால் ஒரே கக்கூஸ் தான் மீண்டும் மீண்டும் நமக்கு வழங்கப் படுகிறது. முக்கியமாக இந்நாவலில் எந்த ஒரு ஆழ்ந்த அகநோக்கோ தரிசனமோ இல்லை. ஸீரோ டிகிரியில் அவந்திகாவின் பகுதிகளையும், எக்ஸைலில் அந்த ஆவி நம்மோடு பேசும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டோமேயானால் அதில் இருப்பது ஒரு நயமற்ற விவரிப்பு மட்டுமே. வெறும் சொற்கள். அதில் காட்சிகள் இல்லை. அதாவது மேம்போக்கான உக்கிரமான உணர்வுகள் மட்டுமே உள்ளது. ஒரு செய்தியை வாசிக்கும்போது நமக்குள் ஏற்படும் தாக்கம் மட்டுமே இதை படிக்கும்போது ஏற்படுகிறது. ஏட்டில் மட்டும் சொற்களாக உயிர்பெற்று படித்தவுடன் அதுவும், அது ஏற்படுத்திய உணர்வும் அழிந்து போகிறது.

இதில் கதாப்பாத்திரங்கள் கதாப்பாத்திரங்களாகவே இருக்கிறார்களே ஒழிய யாரும் மனிதர்களாகத் தோன்றுவதில்லை. மனிதர்களுக்கு உண்டான அகநோக்கும், உளவியல் பார்வையும், இருத்தலியல் நெருக்கடிகளும் அவர்களுக்கு இல்லை. இவர்கள் மேம்போக்கான உணர்வுகளுக்கும், நிகழ்வுகளுக்கும், சாருவின் எண்ணங்களுக்கும் குரல் கொடுக்கும் கேலிச்சித்திரங்களாக மட்டுமே இருக்கிறார்கள். நம்மிடம் ஒருவர் "காசுக்கு ரொம்ப கஷ்டபடுறேன்" என்று சொல்வதை "அவன் காசுக்கு மிகவும் கஷ்டப்படுகிறான்" என்று எழுதுவது போன்றது. இதில் அந்த "அவன்" முக்கியத்துவம் பெறுவதில்லை. "காசும்" "கஷ்டமும்" தான் முக்கியத்துவம் பெறுகிறது. சிறிதேனும் மனிதனாகத் தோன்றுவது சிவாதான். நாவலில் வரும் உதயாவிற்கு மட்டுமல்லாது நமக்கும் அவன் மேல் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. சிவா பல்வேறு நிலையில் சொல்லும் கூற்றுகள் நமக்கு அவன் மேல் இருக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது. ஏனெனில் அவனே மனிதனாகத் தோன்றுகிறான். மனிதர்களுக்கே உண்டான பல மாற்றங்களை அகத்திலும், புறத்திலும் உணர்கிறான். ஊரே பைத்தியம் என்று அவனை சொன்னாலும் உதயாவிற்கு (நமக்கும் கூட) அவனை அப்படி நினைக்கத் தோன்றவில்லை. சிவா என்பவனை பற்றி ஒரு முழு நாவலே எழுதக்கூடிய அளவிற்கு அந்த பாத்திரச் சித்தரிப்பில் ஒரு கனம் இருக்கிறது. ஆனால் அவன் இந்நாவலின் மையக் கதாப்பாத்திரம் அல்ல. மீண்டும் நாம் அதே கேலிச்சித்திரங்களுடன் பயணிக்க நிர்பந்திக்கப் படுகிறோம்.

எழுத்துக்கள் மூலம் நுண்ணுணர்வோடு வனையப்படும் காட்சி என்றைக்குமே நம் நினைவில் இருக்கக் கூடியது. டூஷாம்ப்பின் Nude Descending on a Staircase நம் நினைவில் பதியக்கூடிய அளவுக்கு ஒரு தரிசனத்தை அளிக்கிறது. ஆனால் அதையே fountain - ஐ பற்றி கூற முடியாது. ஏனெனில் அதை நினைவு கூற வேண்டிய அவசியமில்லை. அது ஒரு கக்கூஸ். இவ்விரண்டுமே கலை படைப்புகள் தான் என்றாலும் அவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும், அதை சாத்தியப்படுத்திய அக்கலைஞனின் பன்முகத் தன்மையும் சாருவின் படைப்புகளில் மிகக் குறைவாக இருப்பதே ஏமாற்றம் அளிக்கிறது. சாருவின் படைப்பை முதலாவதாக வாசிக்கும்போது நம்முள்ளே புனிதங்களின் கன்னித்தன்மை அழிகிறது. அந்த முதல் அதிர்வை நாம் உணரும்போது அவர் மேல் மிகுந்த ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர் படைப்புகளைத் தாண்டி சாரு என்ற ஆளுமை நம்மை வசீகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அவர் வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்து பல பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இன்னும் அவர் அந்த ஆரம்ப கால நிலையை விட்டு நகரவில்லை என்பது என் எண்ணம்.

எக்ஸைல், ஒரு வாழ்க்கைக்கான கையேடு என்ற சுயப் பிரக்ஞையோடு எழுத்தப்பட்ட ஒரு நாவல். சமையல் குறிப்புகளிலிருந்து, கலவி நுணுக்கங்கள் வரை பல அறிய விஷயங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. அதுவே இந்நாவலை மீண்டும் வாசிக்கத் தூண்டும். ஆனால் இது உண்மையான மீள் வாசிப்பிற்கு உகந்ததல்ல. மற்ற சாருவின் நாவல்கள் போல இதுவும் ஒரு உன்னதமான அனுபவமாக இருக்க வல்லது. வாழ்க்கையைப் பற்றிய பாடம் ஏட்டில் நாம் படித்துத் தெரிந்து கொள்வதல்ல. நாம் சந்திக்கின்ற மனிதர்களின் எண்ணங்கள், அனுபவங்கள், நடத்தைகள், உணர்வுகள், செவி வழி ஞானங்கள் என்பனவற்றின் மூலம் அதைப் பற்றிய ஒரு புரிதலை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். இது ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக் கொண்டே இருப்பது. அத்தகைய முடிவில்லா மாற்றத்தில் சில மனிதர்களின் வாழ்க்கையும் சிந்தனைகளும் நம் வாழ்க்கையை வெகுவாக பாதித்து பண்படுத்திச் செப்பனிடும். அத்தகைய மனிதர்களே ஆசான்கள். அப்படிப்பட்ட ஒரு ஆசானாகவே நான் சாருவை கருதுகிறேன். அந்த ஆசானின் வாழ்க்கை பற்றிய ஒரு விளையாட்டுக் கையேடு தான் எக்ஸைல்.

பி.கு: சாருவின் எழுத்துக்கள் பின் நவீனத்துவத்தை சார்ந்தது என்பது நமக்குத் தெரிந்ததே. அப்படி இருக்கும்போது அதை நான் இங்கே இருபதுகளில் எழுந்த கலை இயக்கங்களோடு ஒப்பிடுவதன் காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் முந்தைய பத்திகளில் ஒப்பிட்டுப் பேசியது என் மனதில் நான் ஏற்படுத்திக்கொண்ட புரிதலைச் சார்ந்தே. நான் படித்த, கேட்ட விஷயங்களைக் கொண்டு நான் படிக்கும் விஷயங்களைப் பற்றி அவதானிக்கிறேன். இது பொதுவாக நாம் எல்லோரும் செய்வதே. இந்த ஒப்பீடுகளின் மூலம் சாருவின் எழுத்து "தாதாயிசத்தை" சார்ந்ததா என்று கேட்டீர்களானால் அதற்கு என்னிடம் பதில் கிடையாது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு மூல இயக்கம் உள்ளதை நாம் மறுக்க முடியாது. நவீனத்துவம் இருப்பதனால்தான் பின் நவீனத்துவம் சாத்தியமாகிறது. பின் நவீனத்துவம் பின்னாளில் வேறொரு இயக்கத்திற்கு வித்திடும். அதனால் தெரிந்ததைக் கொண்டு புதியதை புரிந்து கொள்வதை மட்டுமே இங்கே நான் செய்திருக்கிறேன். இப்பதிவை நாவலைப் பற்றிய என்னுடைய புரிதலாகவே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நாவலைப் பற்றிய மற்றொரு பார்வையாகவே இதை நான் எழுதியிருக்கிறேன். கருத்துக்களும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.