Sunday, October 18

குருதி வழியும் கூர்வாள்

கலங்கிய நதியில் பிம்பமாடிக்கொண்டிருந்த அதிகாலைச் சூரியனை கண்டபோது தன் மனம் கொண்ட கலக்கத்தின் பிரதிபலிப்பாகவே அது விராஜிதனுக்கு தோன்றியது. தூரத்து மரங்களில் உறங்கிக் கொண்டிருந்த பறவை இனங்கள் தத்தம் கூடுகளிலிருந்து புறப்பட ஆயத்தமாகிக்கொண்டு கூவியது. வெண் திரைகள் விலக்கிய மணி மண்டப ஜன்னலின் வழியே, ஹ்ருதகிரி மலையின் சரிவின் பின் அரைவட்டமாக முளைத்த சூரியனின் இளந்தணல் புகுந்து, அயர்ந்து தோய்ந்த அவன் கண்களை கூசிச் சுருக்கியது. தன்னைச் சூழ்ந்த இயற்கை வனப்பின் ரம்மியத்தை ரசிக்க முடியாதவனாய், நதி நீரில் இழைந்தோடும் கோடுகளை ஒத்த கவலையின் ரேகைகள் தன் அகத்திலும் படர்ந்திருப்பதை உணர்ந்தான். கவலையுடன், கோபம், வெறி, பயம், சலிப்பு - எல்லாம் மாறி மாறித் தாக்குவதில் அவன் குழப்பம் மென்மேலும் அதிகரித்து பொறுமை இழந்து காணப்பட்டான்.

அமைச்சரை வரச்சொல்லி வாயிற் காவலனிடம் கட்டளையிட்டு அதிக நாழிகை ஆகாவிடிலும், நேரம் ஏனோ நத்தை மீது ஊர்வது போல் தோன்றியது விராஜிதனுக்கு. நடந்ததை நினைவு கூற எண்ணியபோது, அந்த நினைப்பே ஒரு ஆச்சரியச் சுழலாய் தன் மனதில் தோன்றி, அதீத சக்தியுடன் தன்னை உள்ளிழுத்துக்கொண்டிருக்க, ஏதேனும் ஒரு தீர்வின் நெடியைப் பற்றிக்கொண்டு மேலெழுந்து விமோசனம் அடையமுடியாதா என்ற ஏக்கம் அவன் கவலையோடு கலந்தோடுவதை உணர்ந்தான். நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் திறந்த கண்களில் காட்சியாய்த் தோன்றி கசந்தது. அவ்வறையில் கனமேறியிருந்த தவ மோனத்தை கலைத்தது வாயிற்காவலனின் அறிவிப்பு.

"அமைச்சர் வந்திருக்கிறார் அரசே" என்று அவன் சொன்னதுதான் தாமதம். "உள்ளே வரச்சொல்" என்ற அரசனின் பதிலுக்கே காத்திருந்தது போல் விரைந்தான். எங்கோ இலைகளோடு உறங்கியிருந்த காற்று, திடீரென்று எழுந்து, சோம்பலுடன் வீசி, அவன் கலைந்த தலைமயிரிநூடே நுழைந்து குழாவியது. அந்த மிதமான ஸ்பரிசத்தில் மூழ்கி கண்கள் தானாக மூடிக்கொள்ள நினைத்த தருணம் யாரோ எதிரே தோன்றுவதை கண்டான். உறக்கம் நிறைவடைந்து, தெளிந்த முகத்தோடு தன் முன்னே வந்த அமைச்சரைக் கண்டபோது, சிவந்து உப்பியிருந்த அவன் கண்கள் வெம்மை அதிகரித்து எரிந்தது.

"என்ன ஆயிற்று அமைச்சரே?"

ஏதோ சொல்லவந்து தயங்குவது போல் அமைச்சர் நிற்க, பீடிகை தாளாது,

"எதற்கு இந்த வீண் அமைதி ... எனக்கே தெரிந்த பதிலை நீர் சொல்வதற்கு என்ன தயக்கம்" என்று சற்றே உரத்த குரலில் கூறினான்.

"முயன்றுகொண்டிருக்கிறார்கள்" என்று அமைச்சர் கூறினார்.

தான் எதிர்பார்த்த பதில் என்றாலும், தூக்கமின்றி தான் கழித்த அத்தனை இரவுகளுக்கும் ஒரு ஆறுதல் இருக்கக்கூடும் என்று, எங்கோ ஒரு மூலையில் முளைத்தெழுந்த எண்ணத்தை முடக்கிய அமைச்சரின் பதிலைக் கேட்டு மேலும் குழப்பமடைந்தான். பற்பல கேள்விகள் அவனுள்ளே எழுந்தடங்கி, பதிலற்று, அவனைப் பொறி மின் கொக்கிகளாய் குத்திக்கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே தெரியும் பூரணத்துவம் அடைந்த சூரியன், மலைச்சரிவின் பிடியிலிருந்து விலகி, இள மஞ்சள் பொட்டென மேகப் பஞ்சுகளுக்கிடையில் நீலவானத்தை அலங்கரிப்பதைக் கண்டான். அதன் ஒளிக்கிரணங்கள் நீள, காற்றில் சூடேறி, அவன் மேலே பாய்ந்து தேகத்தை மெலிதாக வியர்க்கச்செய்தது. அந்தச் சிறு தஹிப்பில் ஒரு பெரு மூச்சு அவனிலிருந்து வெளியேறியது.

"இது சித்த, மாந்திரீக, மாயாஜால வேலைகளாகக் கூட இருக்கக்கூடும் மன்ன ... எதற்கும் வேதமுனியை கேட்பது நல்லது" என்றார் அமைச்சர்.

தனக்குத் துளிகூட விருப்பமற்ற ஒரு வழிதான் என்று அமைச்சருக்குத் தெரிந்தும் அதை அவர் சொன்னது இவனுக்கு வியப்பளிக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம். இது நாள் வரை, எத்தனை நேரம், எத்தனை பணியாட்கள், எத்தனை செலவு, அதில் கிடைக்காத தீர்வு அந்த ஜடாமுனியிடமா இருக்கும்? ஆனால் நிம்மதி என்பதே எட்டாக்கனியாக தோன்றிய அவனுக்கு எதையும் விட்டு வைப்பதற்கும் மனம் வரவில்லை.

"ஆகட்டும்" என்றான் விராஜிதன் தன் வெறுப்பை மறைக்காமல்.

அமைச்சர் விலகி வாயிற்காவலனிடம் கட்டளையிட்டு விலகினார். அமைச்சருக்கும் வேத முனியின் கூற்றுகளில் ஈடு பாடு இருந்ததில்லை. அதனால் அவர் தன்னுடன் இருக்கப்போவதில்லை என்பது விராஜிதன் முன்னமே ஊகித்திருந்ததுதான். மணிமண்டபம் மீண்டும் வெறுமையடைந்து காணப்பட்ட போது தன் நினைவுகளுடன் தான் தனியாக இருப்பதை உணர்ந்தான். இத்தனைக்கும் காரணம் தன் வாள் என்று நினைத்தபோது அவனே அறியாது அனிச்சையாக ஒரு சிரிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது. நிமித்தகர்கள் எவரேனும் இதைச் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்களேயானால் இன்னும் உரக்க சிரித்து சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டிருப்பான். தன் வாளோடு அவன் கொண்ட உறவு அத்தகையது.

உயர்ரக வல்லீறிய இரும்புக் குழம்பினோடு பாதரசத்தை சமைத்து, ஹ்ருதகிரி மலையின் கற்களை உடைத்துப் பொடியாக்கி அதனோடு குழைத்தெடுத்து, நான்கு நாட்கள் கொடுந்தணலில் வாட்டி எடுத்து, பின் உறைந்த கோமேதகத்தில் மூன்று நாட்கள் உறையச்செய்து, க்ரிதபூஜா கற்களால் கூரேற்றி, அரச இலச்சினைப் பொருத்தி, தங்கத்தால் செய்த பிடியுடன், தலை சிறந்த ஆயுத விர்ப்பன்னர்களால் உருவாக்கப்பட்ட அவ்வாள், தன் எட்டாவது பிறந்தநாளுக்கு தந்தையின் பரிசாக அவனுக்களிக்கப்பட்டபோது தொடங்கிய பந்தம் அது. அதுவரை இல்லாத ஒரு இனம் புரியாத வீரத்தை அவ்வாளேந்தி நின்றபோது உணர்ந்தான். அளப்பரிய வீரியம் அவனுள் புகுந்து தசைகளை மெருகேற்றியது. தன்னைக் காக்கும் கருவியாய், தன் வீரச்சின்னமாய் மட்டுமல்லாமல் தன உடலின் அங்கமாகவே அதை கருதினான். வாளேந்திய கணமெல்லாம் வெற்றி அவன் காலடியில் மண்டியிட்டு மன்றாடியது. தன் பன்னிரெண்டாம் அகவையில், பதின் வயது இளமையின் எழுச்சியில், புதிதாக அரும்பிய வதன மயிர்த்துளிகளின் வீரத்தில், புடைத்தெழுந்த நரம்புடன், புஜத்தினுள் குடியேறிய பலத்துடன், செரீஜிய மகாயுத்தத்தில், வெண்புரவி மீதேறி, வான் நோக்கி தான் ஏந்திய வாள், காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறி, எதிரியின் தலையைக் கொய்து முதன்முதலாய் உதிரக்குளியல் புரிந்தது, பல வண்ணத் தூரிகை கொண்டு சமைத்த ஓவியம்போல அவன் நினைவில் நீக்கமற நிறைந்திருந்தது. சிவப்புக் கோலம் பூண்டு அஸ்தமக் காலக் கதிரவனின் ஒளியில் அவ்வாள் மின்னி மிளிர்ந்ததை எண்ணியபோது அவன் உடல் விதிர் விதிர்த்தது.

அதன் பின் அவ்வாளே அவனை பலமுறை வழி நடத்தி செல்வது போல் உணர்ந்திருந்தான். பயம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் அவன் மூளை குழம்பிக்கொண்டிருக்க, வாளுக்கு தனி மூளை வந்ததுபோல் அவனுக்கு மார்கங்களை தரிசித்தது. பற்பல போர்களையும், மகாயுத்தங்களையும், சின்னச் சின்ன சண்டைகளையும், அரசியல் சூட்சிகளையும் எளிதாகக் கையாள உதவிய அவ்வாளுக்கு என்ன ஆயிற்று? அந்தப்புர சல்லாபத்தில் மோகமுற்றிருந்த தந்தையையும், அகங்காராம் கொண்டு அரியணை ஏற நினைத்த அறிவற்ற தமையனையும், ஒரு பாவமும் அறியாத இளங்கன்னியான அவன் மனைவியையும், அவள் ஈன்றெடுத்த குழந்தையையும், கர்பத்தில் உறங்கியிருந்த சிசுவையும், உயிர் வேறு உடல் வேறாக கிழித்தெறிந்த தன் வாளுக்கு என்ன ஆயிற்று? நினைக்க நினைக்க அதுவே பெரும் பாரமாய் அவன் நெஞ்சில் இறங்கியது. உச்சத்தில் குரூர நடனம் புரியும் சூரியன், வானைக் கிழித்துக்கொண்டு உஷ்ணத்தை பொழிய, அவன் கரடி மயிர்ப் புருவங்களில் தொங்கிய வியர்வைத்துளிகள் கண்ணுக்குள் இறங்கி எரிந்தது.

"அரசே வேதமுனி தைவாப்யாசரும் அவருடன் ஒரு சூதனும் வந்திருக்கின்றனர்" என்றான் காவலன். அமைதி கலைத்த அவ்வொலியைக் கேட்டு நினைவு திரும்பியவனாய் வந்தவர்களைக் கண்டான்.

"நீ போய் வாளை எடுத்துக்கொண்டு வா" என்று வாயிற்காவலனிடம் ஆணையிட்டான்.

"மேன்மை பொருந்திய இரண்டாம் விராஜிதனுக்கு என் வணக்கம்" என்று தைவாப்யாசர் கூறியதை சட்டை செய்யாமல் சலிப்புடன் தலையசைத்தான். தனக்கு இஷ்டப்படாத காரியத்தை செய்கிறோம் என்ற எண்ணம் அவன் வெறுப்பை மென்மேலும் அதிகரித்தது. சாம்பல் நிறப் பிடறியும், காவி உடையும் பூண்ட தைவாப்யாசரின் தோற்றமும் பேச்சும் கருத்தும் அவனுக்கு சற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், அரசியல் சம்பிரதாயங்களுக்காகவே உடன் வைத்திருந்தான். அவரின் கூற்று அனைத்தும், நிகழ்காலத்துக்கு சற்றும் பொருந்தாத தொன்மை கொண்டது என்பது அவன் எண்ணம். அவர் இருப்பே அவனுக்குத் திகட்டியது. அவருடன் வந்த சூதன், கண்களற்றவனாய், செவிகளில் பார்வை கொண்டு, இருபுறமும் தலையசைத்தவாறு ஒலிகளை விழுங்கிக்கொண்டிருந்தான். ஆயிரம் ஆண்டுகால சரித்திரத்தை தன் நினைவுகளிலிருந்து பாடலாய்ப் படிக்கும் தன்மை கொண்ட சூதனின் நிலமையை எண்ணியபோது,வருத்தத்தின் சிறு துளி அவன் ஆழ்மனதில் சொட்டியது.

அச்சமயம் வாயிற் காவலன் உள்ளே நுழைந்து உறையில் செருகிய வாளுடன் நின்றான். அவ்வாளை தைவாப்யாசரிடம் தரும்படி சமிக்ஞை செய்தான் விராஜிதன்.

வாளைப்பெற்ற தைவாப்யாசரின் கரங்கள் அதன் கனமரியாது கீழ்நோக்கி இறங்கியதை நினைத்து ஏளனமாய் சிரித்தான். தைவாப்யாசர் உறையை முன்னும் பின்னும் நோக்கியபின் அதிலிருந்து வாளை எடுத்தார். எடுத்தவரின் கண்கள் விரிவடைந்தன. ஏதோ அசம்பாவிதம் நடப்பதைபோல் சூதன் வேகமாக தலையசைத்தான். உரையிலிருந்து வெளிப்பட்ட வாள் மேல் குருதிக்கறை படிந்து இரத்தம் முனையிலிருந்து சொட்டிக்கொண்டிருந்தது. வழிந்த துளி தரையை முத்தமிடும்முன் ஆவியாகி காற்றோடு கலந்தது. வியப்பில் தைவாப்யாசரின் உதடுகள் பிரிந்தது. கண்களிலிருந்து பீதி கசிந்தது. இந்த எதிர்வினையை எதிர்பார்த்தவனாய் விராஜிதன் சிரித்தான். ஒரு வாரமாய் பல்வேறு திரவியங்களைக் கொண்டு, காணக்கிடைக்காத அமிலங்களைக்கொண்டு, முப்பது பணியாட்கள், பகல் இரவு பாராது, முழுநேர முயற்சியுடன் சுத்தம் செய்தும் போகாத அக்குருதிக் கறையைக் கண்டதும் புன்சிரிப்பு மறைந்து உதடு இறுகியது. வாளின் மேல் படிந்த கறை தன் வீரத்திற்கே விளைந்த ஒரு ஹீனமாய் கருதலானான். தன் உடல் உறுப்பாய், உடன் பிறப்பாய் இருந்த வாள் இன்று அந்நியமாகத் தெரிவதை எண்ணி அவன் மேலும் அதன் மேல் வெறுப்படைந்தான். சற்றே கலக்கமுற்றிருந்த தைவாப்யாசர், சூதனின் காதில் எதையோ முணுமுணுத்தார். கருவளையங்களற்ற சூதனின் கண்களில் வெண்பரப்பு விரிந்து சிவந்தது. கையிலேந்திய யாழ் நரம்புகளை மீட்டியவாறு சூதன் மேலே பாடலானான். அவன் பாடப்பாட தைவாப்யாசர் அதை மொழிபெயர்த்துக்கொண்டு வந்தார்.

"அர, நர, சுர, பர, திர, குர, பாராத முனிகளின் ப்ரவரான்விதனான, அரி முக இலச்சினை கொண்டு, தாமரை இதழ்களையொத்த பாதம் கொண்டு, முகிலினத்தின் வெண்மை பொருந்திய தோல் கொண்டு, ஹ்ருதகிரி மலை ஏந்திய ஹ்ருதயாபுரி தேசத்தை ஆளும் பாதாம்புஜ வம்சத்தின் தோன்றலான மன்னர் பெரும, உம் குலத்தில் தோன்றிப்பெருகும் சாபங்கள் வம்சாவரியாக வழிந்தோடும். அதன் மொத்த உருவமாய் சிருஷ்டிக்கப்படும் உன் வம்சத்தின் கடைத்தோன்றல், பாண்டேரிய தோல் கொண்டவனாய், குருதி ஒழுகும் கூர்வாள் கொண்டவனாய், தன் இரத்தத்தை தானே புசித்து, பித்தேறி பிரக்ஞை இழந்து, வழிவழியாக வழிந்தோடிய பாவத்தீப்புனலில் தானும் கலந்து, வாரிசற்ற நபும்சகனாய், பாதம்புஜர்களின் முடிவிற்கு வித்திடுவான். இதுவே சப்த முனிகளின் கூற்று. அதுவே தேவனின் கூற்று." என்று சூதன் பாடியதை சொன்ன தைவாப்யாசர் விராஜிதனைக் கண்டு திடுக்கிட்டார். அஸ்தமன சூரியனின் இளஞ்சிவப்பொளியில் குரோதத்தின் மொத்த வடிவாய் விராஜிதன் காட்சியளித்தான்.

"அப்படியானால்" என்றான் விராஜிதன் சிவந்த கண்கள் நெருப்பைக் கக்க.

"மன்னிக்க வேண்டும் மன்ன ... ஆதி கிரந்தத்தில் பிழையிருப்பதில்லை" என்றார்.

"அப்படியா ..." என்று விராஜிதன் தைவாப்யாசரின் கரங்களிலிருந்த வாளைப் பிடுங்கி அவரருகே இருந்த சூதனின் தலையை வெட்டினான்.

"மன்னா என்ன இது?" என்று திகிலேரிய பார்வையுடன் தைவாப்யாசர் வினவினார்.

"உங்கள் கிரந்தத்தில் கூறுகிற ஆதியும் அந்தமும் உங்கள் வாழ்க்கையைப் பற்றி கூறவில்லையா தைவாப்யாசரே ..."

"மன்னா நீங்கள் செய்வது தவறு ... குலகுருவை ஒழித்த பாவம் உங்களுக்கு வேண்டாம்"

"நீர்தானே சொன்னீர் ... நான் பாவத்தின் உருவமென்று ... அதனோடு இதுவும் சேரட்டும்" என்று தன் கையிலிருந்த வாளை வீசி தைவாப்யாசரின் தலையைக் கொய்தான். அதிர்ச்சியில் விரிந்த கண்களோடு உடலிலிருந்து பிரிந்த தைவாப்யாசரின் தலை தரையில் உருண்டோடியது. அவனுள்ளிருந்த கோபத்தணல் மூச்சுக் காற்றின் வழியே வெளியேறி வாயில் திரைகளை சுட்டெரித்தது. பீதிகொண்ட வாயிற்காவலர்கள் நாலா திசைகளிலும் கால் தெறிக்க ஓடினர். கதிரவன் சாயும் வேளையில் உஷ்ணம் இறங்கியதும் சட்டென்று பிரக்ஞை திரும்பியவனாய் தன் வாளைக் கண்டான். அதுவரை தரையைத் தொடாது சொட்டிக்கொண்டிருந்த குருதி இப்போது கூர்வளின் முனையிலிருந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றம் தன நாசியைத் துளைத்தெடுக்க, அதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தன் மனிமண்டபத்தின் ஜன்னலை அலங்கரிக்கும் வெண்திரைகளில் துடைத்தான். திரைகள் சிவந்தது. அவன் அணிந்த வெண்பட்டுத் துணியில் துடைத்தான். ஆடை சிவந்தது. மஞ்சத்தின் வெண் புதப்பில் ஒத்தி எடுத்தான். மஞ்சம் சிவந்தது. தன் இயலாமை ஆழ்மனதில் தைத்த கூர் முள்ளின் வலி பொறுக்காது, கையிலிருந்த வாளை வான் நோக்கி ஏந்தி காற்றால் அவ்வோட்டத்தை நிறுத்த முயன்றான். வாளிலிருந்து பீச்சியடிக்கப்பட்ட குருதி அவனையும் சிவக்கச் செய்தது.

ஸ்படிகத்தில் நுழைந்த வெண்பனியின் நிறம் கொண்ட அந்த மணிமண்டபம் செந்நிறமேறிக் காட்சியளித்தது. குரல்வளையில் அடங்கிய வெறுப்பையும் வேதனையும் அழுத்தம் தாங்காது பூதாகரமாய் வெடிக்க, விராஜிதன் பெருங்குரல் எழுப்பி அலறினான். அவ்வொலியில் தூண்களின் செவிகள் அடைத்துக்கொண்டது. அத்தூண்களேந்திய விளக்குகளில் மின்னிய ஜோதி அதிர்ந்தது. தன் கையின் நீட்சியென கருதிய அவ்வாளை வீறிடலிநூடே தன் நாபியில் புதைத்து நிலைகுலைந்து விழுந்தான். அந்த கொடூர சப்தத்தில் அதிர்ந்தவராய் காவலரும், பணியாட்களும், சேவகர்களும், மந்திரிகளும் மணி மண்டபத்திற்கு விரைந்தனர். குருதிப் புனலில் நனைந்து குரூரமாய் காட்சியளித்த அரசனின் அறையைக் கண்டு அதிர்ச்சியுற்ற அமைச்சர் அவன் உடலில் செருகப்பட்ட வாளை எடுக்க முற்பட்டார். நாபிக்கிளைகளில் சிக்கியிருந்த வாளை முழுப் பிரயத்தனத்துடன் எடுக்க முற்பட, எதிர்வினைச்சக்தி அவரை பின்னோக்கித்தள்ளி, கையோடு வந்த வாளை மேலே எழும்பச்செய்தது. அழகான நிலவொளியில் அப்பழுக்கற்று அவ்வாள் மின்னியது.