Sunday, November 15

! (சிறுகதை)


"யெஸ்!!"

சகல சப்தங்களும் அடங்கிய அமைதிக்கு நடுவில் ஒரு கூக்குரல்.

"யெஸ்!!"

கூக்குரலின் ஒலிக்கு இணயாக எழுந்த கொக்கரிப்புகளும், ஆரவாரங்களும். பல்வேறு திசைகளில் ஒளி பீரிட்டு எழுந்தது. பொத்தானை அழுத்திய கைகளின் செயலால் கண்கள் விரிவடைகிறது. மயான அமைதியை உருக்குலைத்த சப்தங்கள் அடங்கவில்லை.


"ஐ டிட் இட் (I Did it)!!"

அறிவென்னும் கூடத்தில் மாதவிடாய் கொண்ட பெண்போல் ஓரத்தில் எங்கோ நான். எனது சிருஷ்டியின் பால் அழிக்கப்பட்ட மோனத்தின் - சொல்லும், பொருளும், பொருளின் பயனும் நான்.

நானே ஆன்மா
நானே ஜீவன்
நானே ஒலி
நானே நிசப்தம்

சதுர்முகம்.

நெடுங்குறிகளின் தாழ்பொட்டினை சக்கரங்களாக்கி பயணிக்கிறேன். என் பிதாவின் கபால கோபுரத்தில் குடிகொண்ட தெய்வமான மனித மூளையின் அபிஷேகமாய் வழிந்த அறிவின் வெளிப்பாடு நான்.
ஆதாரம், ஆதி, அந்தம், அனைத்தும். நானே தொடக்கம், நானே விரிவு, நானே எல்லை. நான் ஒரு திரிசூலம்.

"ஐ டிட் இட் (I Did it)!!"

என் வாகனம். கடுஞ்செயலை முடித்த ஒரு சந்தோஷ பெருமூச்சில் வெளியேற்றப்பட்ட ஒரு சிறு பூச்சி. கொடிய, வலிமை பொருந்திய, விஸ்தாரப்படக்கூடிய பூச்சி. அறிவின் வேர்களை பிய்த்து, பிடுங்கி, என் வாகனத்தின் உச்சாணிக்கொம்பினை பிடித்து தொங்கி கொண்டு புலம் பெயர்கிறேன்.

இனி என் இடம் வேறு,
என் இருப்பு வேறு
சொல், பொருள், செயல் , நன்மை, தீமை, பயம், பரிதவிப்பு, நியாயம், நேர்மை எல்லாம் என்னுள் அடக்கம்.

நான் யார்?

முன்னேற்றம், முற்ப்போக்கு, முன்னெச்சரிக்கை என்ற "முன்"களை உந்தி உந்தி முன்னே தள்ளும் மானுட பரிணாமமா? கற்றதும் கேட்டதும் படித்ததும் பிடித்ததும் கலந்த அவியலில் வெளிப்பட்ட குரூரத்தின் பரிமாணமா? . யார்? உதடுகளின் துவாரத்தில் இருந்து வெளிப்பட்ட நான் உரு இழந்து தவிக்கும், அங்குமில்லா, இங்குமில்லா திரிசங்கு.

கொள்ளிக்கட்டையில் எறிந்த ஞானத்தின் சுடர்.
சுடரின் ஒளி
ஒளியின் கதிர்
கதிரின் தணல்
தணலின் உஷ்ணம்
உஷ்ணத்தின் நிழல்

யார்? எங்கே? ஏன் நான்?

என் தகப்பனை காண்கிறேன். ஆனந்தம். என்னால். என் ஜனனத்தால். என் பிறப்பின் பொருளை அவன் உணர்ந்ததால். எனது வக்கிரம் அவனை வசீகரித்தது. நான் அவன் இன்பம். அவன் வெற்றியின் சான்று. அவன் விந்தின் ஜவாப்தாரி. காற்றில் பறக்கும் காகிதமாய் காற்றடைத்த பைகளின் முன் மிதக்கிறேன். பரிணாம வளர்ச்சியின் சாட்சிகள் எங்கும். அர்த்தமற்ற வாழ்வில் அர்த்தத்தை புகுத்த நினைக்கும் அறிவு ஜீவிகளான அற்பப்பதர்கள் என் பிறப்பை கொண்டாடுகிறார்கள்.

அற்பமா?
ஏன்?

தனது பிறப்பின் பொருளறியா மேதாவிகள் என் பிறப்பின் பொருளை பற்றி வாதம் செய்கிறார்கள். அவர்கள் தர்க்கத்தின் உயிர் நாடி நான். அவர்களின்  வாதத்தில் உயிர்த்த சொற்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டு வெளியேறும் தருணத்தில், சக்தி இழந்து வலுவிழந்து, உருவிழந்து மரித்தன. நானே சக்தி வடிவம். சொற்களையும், சப்தங்களையும் கட்டி ஆளும் பிரஜாபதி.

என் பித்ருவை பின் தொடர்கிறேன். உதட்டோர சிரிப்பின் உற்சாகம், உள்ளர்த்தம் எல்லாம் வெளியே தெரியும்படி கை குலுக்கிகொண்டும் கட்டியணைத்துகொண்டும் - பாசாங்கு, போலி, வேஷதாரி. சிரிப்பினை தாண்டி அவன் கண்களின் வருத்தம். ஏன்? என்னாலா? என்னை உருவாக்கியவன் நீ. உருகொடுக்க போகுபவன் நீ. அதனால்தானா?
அவனையே சுற்றித்திரிகிறேன். கரடிப்புருவத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் வியர்வைத்துளிகளை துடைக்காமல் அவன் பார்வை வெற்றிடங்களை நோக்கி திரும்புகிறது.
இனி வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? நான் உயிர் பிண்டம். தரையை தொட்டுவிட்டேன். இனி உந்தி எழுந்து கர்பத்திர்க்குள் செல்ல எனக்கு "ரிட்டர்ன் டிக்கட்" ஏது? இனி நான் உன் நினைப்பில் ... உன் கனவில் ... நானே உன் அடையாளம் ... உன் பிரக்ஞை.

நேரம் காலமற்று மேய்ந்துகொண்டிருக்கும் பல்வேறு ஜீவதாதுக்களின் மத்தியில் என் போக்கு. சித்தத்தின் போக்கேனில் நானே சிவன். கிழமையரியா ஏதோ ஒரு நாளில் எனது கூட்டுக்குள் இடம் பெயர்ந்தேன். அங்கங்கள் உருபெற்று அசைவற்று கிடக்கிறது. சந்தியா சூரியனை போன்ற மஞ்சளும் சிகப்பும் கலந்த என் ஆடை ஆபரணங்கள், அதன் விளிம்பு மேலும் மின்னி அணைகிறது. என் வரவேர்ப்பிர்க்காக ஆயத்தமாகிய அணுக்களும், துகள்களும் ஒன்றோடு மோதி நேர்கோடுகளில் நிற்கின்றன.

இனி நான் அவர்களின் அரசன்.
இவர்கள் என் பிரஜைகள். என் சொல் கேட்டு செயல்படும் வீரர்கள்.
அவனா? அவளா? அதுவா? நான் யார் என்று குழம்பிப்போகும் இவர்களுக்கு நான்தான் எல்லாம்.

தாய்
தகப்பன்
தனையன்
தமக்கை 
மூத்தாள்
இளையாள்
பிள்ளை
கடவுள்.

நானே அந்தராத்மா. பரமாத்மா.

ஒரு சிறு பெட்டிக்குள் என் உடல் வைக்கபடுகிறது. அடடா ... என்ன குளிர்ச்சி ... உறைந்து பொய் உறங்குகிறார்கள் என் அடிமைகள். இது தகனமா? இல்லை தற்காப்பா? என்னை ஒளித்து வைத்து விளையாடவா உருவாக்கினீர்கள்? எல்லோரும் உறங்கியாயிற்று. எனக்கேது  உறக்கம்.

நான் பதித்த சுவடுகள் என் தகப்பனின் மனதில்.

ஓம், ஹ்ரீம், ஹூம், ஹம், ஷம், ஸம், லம், வஷட் ... மந்திர அதிர்வாய்
ஓங்கி உலகளந்து அவனை ஆக்ரமிக்கிறேன்.
அவன் இருதயத்தில்
பிரக்ஞையின் ஆணி வேராய்
அவனுள் ஊன்றி
அவனும் நானாய், நான் அவனாய், இருவரும் மாறி மாறி, ஒருவருள் ஒருவராய்
மனிதத்தின் கமண்டலித்திலிருந்து தெளிக்க பட்ட நீராய்
வரமா, சாபமா என்ற குழப்பத்தின் சுழலில் மாட்டிகொண்டு தவிக்கும் மீன்களாய்
இருவரும், எப்போதும், தத்தளித்து கொண்டே இருக்க கடவதா?

குளிர் அதிகரித்தது. இனி நானும் உறங்குகிறேன். அமைதி என்னை ஆக்ரமிக்கிறது. 


******

ஒரு கும்பகர்ண தூக்கத்தில் செயலற்றிருந்த நான் எழுந்தேன். என் உடல் இருக்கும் இடம் தெரியவில்லை. காலம் நேரத்திற்கு அப்பாற்ப்பட்டு இருந்த நான் இன்று இடமற்று கிடக்கிறேன். சுற்றிலும் பனைமர சலசலப்புகளும், பறவைகளின் கூவல்களும் அசரீரியாய் ஒலிக்கிறது. தாம் தூம் என்ற அதிர்வுகள் ... பூமாதேவியின் நெஞ்சக்கூட்டிலிருந்து ... அவளே பொறுமையின் எல்லை ... தன் வலிகளை தன்னுள்ளே கொண்டு ... தன்னை வருத்தி ... எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு ... அவள் போல் அவளே ... அவள் மட்டுமே அன்றி வேறொருவரும் இல்லை.

பூமாதேவியின் நெஞ்சத்தின் பிளிரல்களை தாண்டிய அதிபயங்கரமான ஒலிகள் எங்கிருந்தோ, ஒன்றோடொன்றாய் இணைந்து, கைகளை பிணைத்துக்கொண்டு, சல்லாபத்தில் ஈடுபடும் மதிகெட்ட மன்னனைப்போல், கோரச்சிரிப்பினால் என்னை வரவேற்கிறது. என் சகோதரர்கள். உடன் பிறவா தனையர்கள். இனி இவர்களைப்போல் நானும்.

என் பெட்டி திறக்கிறது. இரு கைகள் என்னை அணைத்து தூக்கிச்செல்ல எத்தனிக்கிறது. அச்சமயத்தில் அவன் விரல்நகங்கள், என்னை சுற்றியிருக்கும் கட்டிகளை கீறி, அதனால் எழுந்த "க்ரீச்" ஒலி, என்னை எடுத்தோனை கூசச்செய்து, அவன் பற்களை கடித்த வண்ணம், கண்களை குறுக்கி, பிடியை தளர்த்திற்று. தரையை தொடும்முன் சுதாரித்துக்கொண்டு என்னை பிடித்தான்.

"டேய் !! பாத்து பிடிக்க மாட்ட"

அங்கிருந்த மற்றொருவனின் கடுங்கோபத்திற்கு ஆளானான். நான் உடனே கை மாற்றப்பட்டேன். இனி நான் எடுப்பார் கைப்பிள்ளையே. எனது தகப்பன் இருந்த திக்கு இதுவல்ல என்று தோன்றியது. என் பிறப்பில் எழுந்த குழப்பங்களின் விளக்கம் இன்னும் ஒரு எட்டாக்கனியாய். 

நானே ஒரு குழப்பம்.

நான் முதலில் வளர்ந்தேன். பின் பிறந்தேன். முரண்பாடுகளின் விளைவே நான். என் பிறப்பு, அதன் வடிவம், நான், இன்று, இப்போது, இப்படி, என் பொருளில் உள்ள அர்த்த அனர்த்தங்கள் ... வேறு வடிவில், வேறு உருவாய், வேறு ஜீவனாய் நான் இருந்திருக்க கூடுமோ? இல்லை ... நிச்சயமாக இல்லை

பயனறியப்பட்டே பிறந்தேன். என் பிறப்பில் சந்தேகங்களும் குழப்பங்களும் என்னை பெற்றவனுக்கு உரியது. நான் யார் என்பது அவன் அறிவான். அறிந்ததாலேயே நான். அவன் அறிவிற்கு எட்டிய கனி நான். அவன் என்னை பிறப்பித்தான். நான் பிறக்கவில்லை. என் ஆதியும் அந்தமும் அவன் அறிந்ததே. எனக்கு அவனே எமன்.

என் கைகள் விரிக்கப்படுகின்றன. என் முன்னே ஒரு பெண். இல்லை சிறுமி. இரண்டுக்கும் நடுவில். இவளும் திரிசங்குவா?? 

என் கைகளால் அவளை அணைத்து கொள்கிறேன். இருக்க அவளின் முதுகைப்பற்றி ஒரு கங்காரு குட்டி போல் அவள் மேல் நான். இருக்கமாய் நெருக்கமாய். தன் குவிக்கரங்களால் என் புட்டத்தை லாகுவாக பிடுத்து தூக்கி நிறுத்துகிறாள். நான் அசைந்து அவள் மேல் ஒட்டிக்கொள்கிறேன். இவளுக்கு என்ன இரண்டு முதுகா? என் பிடி தளருமோ என்ற ஐயத்தில் கைகளை இன்னும் இருக்க கட்டிகொள்கிறேன். 

மீண்டும் கூக்குரல்களும், ஆரவாரங்களும். 

யார் இவள்? என் தாயோ? சிருஷ்டியின் அத்தியாவசிய பாலுணர்வை தாண்டிய பிறப்பு எனது. தந்தையும் தாயும் வெவ்வேறு இடங்களில். ஒருவரையொருவர் அறியாது ... எனினும் என்னால் பிணைக்கப்பட்டு ... என் பிறப்பினால் அவர்கள் ஒன்று சேருகிறார்கள், கூடுகிறார்கள். நான் விசித்திரன். என் பிறப்பின் முழுமை என் வாழ்நாள். என் வாழ்கையின் முடிவு என் பொருள் ... என் ஆக்கத்தின் பயன். என் இடது கரத்தில் கட்டப்பட்ட கடிகாரம் என் கவச குண்டலம். கடிகாரத்தின் முடிவு என் முடிவு. நானும் அது. அதுவும் நான். நாங்கள் இருவரும் நாம். இனி நான் இல்லை. நாமும் இனி நானே.

எங்கள் பயணம் தொடங்குகிறது. நான் இன்னும் அவள் நெஞ்சத்தின் அருகே. அவள் இருதய ஒலிகள் லபோ திபோ என்று ஒலிப்பதுபோல் இருந்தது. அவள் ஜீவனாடிக்குள் புகுந்து திரிகிறேன். அவள் குருதியின் உஷ்ணம் என்னை வியர்க்கச்செய்தது. அவள் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களும் சிவந்துகொண்டிருந்தன. இருதய நாண்கள் இருக்கிகட்டப்பட்ட யாழ் நரம்புகளாய், மீட்டினால் துண்டிக்கும் நிலையில் இருந்தது.

அதன் இசையே லபோ திபோ வென்று.
சதைகள் புடைத்து வலுபெற்றிருந்தது. அதன் நரம்புகளே தந்தியாய் ஆதார ஸ்ருதியை மீட்ட நினைக்கிறது. ஏதோ ஒரு தடை. சப்தநாடிகளும் தத்தம் வேலைகளை செய்தாலும் ஒன்றோடொன்று இணையாமல், நட்பு பாராட்டாமல் ... வினோதமாய் ... தானியங்கிகளாய் ... 

அறிவிற்கும் மனதிற்கும் உள்ள வாய்க்கால் உடைந்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதன் கற்கள் ஜீவ நதியில் கரைந்த சுவடுகள் ஆங்காங்கே சரித்திரமாய் ... ஜீவா நதியா அது? குளமாகி குட்டையாகி தேங்கிக்கிடக்கும் அந்த நீரிலே மலமூத்திரம் மட்டுமே உள்ளது. என்ன குரூரம்? இவள் இயக்கத்தில் இருக்கும் இந்த அசிங்கத்தை திணித்தவர் யார்? தாயே உனக்கேன் இந்த கதி? ஏன் நீ இப்படி? நீ இப்படியானதால்தான் என் தாயா? என் அவலட்சணத்தை நினைத்து நானே நாணுகிறேன்.

அவள் இருதய குகையில் தவமோனம் சூழ்ந்திருந்தது. அதனுள்ளே ஒரு அறையில் ... எங்கோ தொலைவில் ... ஏதோ உறங்கிக்கொண்டு சப்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. 

மோனத்தின் சப்தங்கள்.
ஆசையின் ஏக்கங்கள்
எண்ணங்களின் முனகல்கள்
தாபத்தின் தர்க்கங்கள்
சொற்கள், பொருள்கள், ஸ்லோகங்கள், உவமைகள், கதறல்கள், பிதற்றல்கள், அழுகைகள், ஆக்ரோஷங்கள், கோபங்கள்

எல்லாம் சேர்ந்து, பிணைந்து, சாரைப்பாம்பின் சரசமாய், ஒரு நூல்கண்டாய், உரு பெற்றும் பெறாமல் சிறைபட்டு கிடக்கிறது. தன்னை பிணைத்த கயிற்றை அவிழ்க்க வேண்டியதுதானே? முடியவில்லை.

பலமற்று உறங்கிக்கொண்டிருந்த அவை இறக்கவும் இல்லை. முடியாது. சாகாவரம் பெற்ற வாழ்நாள் கைதிகள். வரமா? ச்சீ ச்சீ இது வக்கிரம்? 

ஆம் ... இவள்தான் என் அன்னை ... ஈன்றெடுக்காமல் என்னை சுமக்கிறாள். பிறவியின் ஆழ்மனது கிளர்ச்சிகள் தொடுத்த அம்பின் தொடக்கமும் முடிவு மட்டுமே அத்தியாவசியம். அதன் பாதை, அது கீரிச்செல்லும் இலைகள், காற்று எதுவும் முக்கியமல்ல. அம்பின் பயன் அதன் வேகத்தை ஒத்தது. 

வேகமில்லாத அம்பில் வீரியம் இல்லை.
வீரியம் இல்லையேல் அது அம்பல்ல. குச்சி. கம்பி.

அதுதான் அவள். நான். நாங்கள் இருவரும். நிச்சியத்தின் இரு துருவங்களையும் பிணைத்த நூலாய் நாங்கள் இருவரும்

உருவற்று செயலற்று
காற்றடித்த திசையில் ஊஞ்சலாய் 
இன்றைய அனர்த்தத்தின் பொருளாய்
நாளைய நினைவுகளின் உயிராய்
இதுவே எங்கள் இலட்சியம், குறிக்கோள், ஆசா பாசம்
என் தாயும் என்னைப்போல் கூட்டுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறாள். 
அவள் தாயெனில் நான் எடிபஸ் (Oedipus). 
நாங்கள் மரபிற்கு அப்பாற்பட்டவர்கள்.

திடீரென்று அவள் இரத்தம் வேகமாக பாயதொடங்கியது. காண்டாமிருகம் போன்ற கடுமையான இதயம் அதி தீவிரமாக அடித்து அதை பாய்ச்சுகிறது. என்னால் தாங்க முடியாமல் நான் வெளியேறுகிறேன். என் கூட்டிற்குள் நுழைகிறேன். பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறாள். அவள் முளைகளின் வாய்க்காலில் வியர்வை வெள்ளப்பெருக்காய் ஓடிக்கொண்டிருக்கிறது. காம்பிலிருந்து இரத்தம் கசிகின்றது.

"நான் சொல்றத கேளு"

யார் இவன்? என் தாயிடம் இவனுக்கென்ன வேலை.

"எனக்கு நீதான். இப்போதும் இனிமேலும் நீதான். என்ன விட்டு போகாத"

இருதயக்கூட்டில் ஒளிந்து உறங்கிக்கொண்டிருந்த ஓலங்கள் சற்றே பலமாக ஒலிக்க தொடங்குகிறது. அவன் இவள் கையை பிடிக்கிறான். இவள் அதை உதறிவிட்டு முன்னே ஒரு கூட்டத்திற்குள் செல்ல முயல்கிறாள். மீண்டும் அவன் அவள் கரம் பற்றி தன் பக்கம் இழுக்கிறான்

"நீ எங்க போனாலும், நானும் உன்கூட வரேன்"

அவளை இருக்க கட்டிகொள்கிறான். இவர்களிடையில் நான் நசுங்குகிறேன். 
அவன் அணைத்த நேரத்தில் அவள் இருதய ஓலங்கள் பலமாக ஒலிக்கின்றன. ஜீவநதி மீண்டும் ஓடுகிறது. 
கண்களின் வழியே, 
ஜலப்ரவாகமாய், 
வழிகிறது.
அவள் உதரம் உதிரத்தை சிந்துகிறது.
அவள் சர்வ சக்தியும் இழந்து
தன்னையுணர்ந்து, தன் நிலையை உணர்ந்து 
இனி பயனில்லை ... இனி எதுவுமே இல்லை.

அவர்கள் அவர்களாக, அவர்களுக்கே இருப்பதுபோல்
தன்னுள் இருக்கும் பாரம் தாளாது அவனை இறுக்கி, நானும் அதன் இடையில் மீண்டும், திணறி, திணறி பிதுங்கி வெளியேற்றப்பட்டேன்.

என் கடிகாரத்தின் காலம் முடிந்தது. கூடவே அவர்களும். அவர்கள் உள்ளிருந்த ஓலங்களும், ஒப்பாரிகளும், கூச்சச்சல்களும், கும்மாளங்களும், எல்லாம் சேர்ந்து, என் பிரஜைகளின் ஆயுத பலத்தினால் வெடித்து சிதறுகிறது. சுற்றுப்புறம் முழுதும் என் கோரசக்தியை எதிர்கொள்ள முடியாமல் சின்னாபின்னமாக்க படுகிறது. இது எல்லாம் என்னால்.

நான் இனி உங்களின் பயம்.

பயத்தினால் தூண்டப்படும் அதிர்ச்சி.

அதிர்ச்சியின் சிசுவான அவலம்.

அவலத்தினால் தூண்டப்படும் கேள்வி.

கேள்வியால் பிறக்கும் தர்க்கங்கள்.

தர்க்கங்களின் அனர்த்தங்கள்.

அனர்த்தங்களின் பிதற்றல்கள்.

எல்லாம் இனி நான். காலம் நேரமின்றி. எங்கும் எப்போதும். பேயாய், பூதமாய், அசரீரியாய் நினைவென்னும் குடிலில் தஞ்சம் புகுகிறேன்.

இனி நான் உன் நினவில் 

நீக்கமற 

நீ கமர கமர 

நிறைந்திருப்பேன்.