Sunday, November 1

கோழி செய்திகள்: சென்னை அமிர்தாவில் அஜித் சிறப்புரை


சென்னை அமிர்தா கல்லூரியில், ஒரு பாடத்திற்காக சிறப்புரை ஆற்ற சம்மதித்துள்ளார் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

பிரியாணி செய்வது எப்படி என்ற வகுப்பில் தான் பிரியாணி செய்த அனுபவத்தையும், அதனால் தான் கற்று கொண்ட பாடங்களை பற்றியும் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் அல்டிமேட் ஸ்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய முயற்சியாக இது எல்லோராலும் கருதப்படுகிறது.

தல பிரியாணி

டேபிள் மேட்டிற்கு அடுத்தாதாக தொலைகாட்சிகளில் அதிகமாக சுய விளம்பரம் செய்துகொள்ளும் கல்வி நிறுவனம் என்ற பெயர் பெற்றது சென்னை அமிர்தா. ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று சொல்லப்படும் சரவண பவன் சர்வர் வேலையை கற்றுக்கொடுப்பத்தகற்காக தன் மாணவர்கள் அனைவரையும் கோட்டு போட வைப்பதே சென்னை அமிர்தாவின் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்று. "எங்கள் மாணவர்கள் அனைவரும், கோட் சூட் போட்டுக்கொண்டுதான் பாத்ரூமிற்கு கூட சொல்வார்கள்" என்று அந்த கல்லூரியின் ஆயா கூறினார்.

விளம்பரங்களைத் தாண்டி ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தபோது தான் இந்த யோசனை கல்வி நிர்வாகத்திற்கு எட்டியது. " பிரியாணி என்று சொன்னாலே அஜித் தான் நம் நினைவுக்கு வருவார். அதையும் தாண்டி எங்கள் கல்லூரியின் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்றான - கோட் அணிவது - அஜித்திற்கு கை வந்த கலை. பிரியாணி, கோட் இரண்டையுமே நினைத்து பார்த்த பொது அஜித்தை தவிர வேறு யாரும் எங்களுக்கு தோன்றவில்லை. அதனால்தான் இந்த சிறப்புரையை ஏற்பாடு செய்தோம்" என்று கல்வி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கூறினார். "கொஞ்சம் யோசித்து பாருங்கள் ... இதை விட அற்புதமான முயற்சி வேறு எந்த நிறுவனத்தாலும் செய்ய முடியாது" என்று பின்னால் சென்னை அமிர்தாவின் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை திரையிட்டார்.

பில்லா படத்தில் கோட் சூட் போட்ட தல அஜித்

இதை பற்றி அஜித்திடம் கேட்க நினைத்தபோது ஒரு மாபெரும் சிக்கல் இருந்தது. அஜித் பேட்டி தருவதே இல்லை என்பதுதான் அது. அதனால் அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து சில விஷயங்கள் எங்களுக்கு கிடைத்தது. "தலன்னாலே பிரியாணி தாங்க. தல பிரியாணி பத்தி செய்தி இல்லாம ஏதாவது குமுதம் இது வரைக்கும் பிரசுரிக்கப்பட்டிருக்கா?" என்று வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது.

அஜித் இதற்கு முன்பு அண்ணா பல்கலைகழகத்தில் ஏரோ மாடலிங் பற்றி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். நடிப்பை தவிர எல்லா துறைகளிலும் அஜித் "தலை" சிறந்து விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. "என்ன சொன்ன" என்று கேட்ட தல ரசிகர்களிடம் பேச்சை மாற்றி அவர் ஏரோ மாடலிங் உரையை பற்றி விசாரித்தோம். "அதாம்பா எங்க தல ... சொன்னத செஞ்சாரா" என்று கூறிய அவர்களிடம் என்ன செய்தார் என்று கேட்டோம். "அதாம்பா ... பில்லா-2 ல ஹெலிகாப்டர்ல தொங்கிட்டே போஸ் கொடுத்தாரே அதான ஏரோ மாடலிங்?" என்று சொன்னபோது அவர் அதீத அறிவை கண்டு மெச்சினோம். "தல பிரியாணிய சாப்டுதான் வெங்கட் பிரபு பிரியாணி படத்தோட கதைய ரெடி பண்ணாரு" என்று அவர் கூறிய போதுதான் ஒரு பெரிய விஷயம் நமக்கு புலப்பட்டது. பிரியாணி படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறது.

இந்த புது முயற்சிக்கு எதிர்ப்புகளும் குவிந்திருக்கின்றன. குறிப்பாக தொலைக்காட்சிகளில் வரும் சமையல் கலை நிபுணர்களின் எதிர்வினை இந்த முயற்சிக்கு சாதகமாக இல்லை. "அஜித் ஒரு நடிகர். அவருக்கு பிரியாணி சமைக்க தெரிந்தால் சிறப்புரை ஆற்ற வேண்டுமா? அப்போது நாங்கள் எதற்கு இருக்கிறோம்? இப்படி சினிமா நடிகர்களை மட்டுமே வளர்த்து எங்களை போன்ற கலைஞர்களை அழிக்கின்றனர்" என்று கூறுகிறார் தாமு. "ஏரோ மாடலிங் எடுத்தது சரி. ஏனென்றால் அது என்னது என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் பிரியாணி என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதில் உள்ள நுட்பங்களை எடுத்துரைக்க ஒரு தேர்ந்த கலைஞனால் மட்டுமே முடியும். நிச்சயமாக இந்த செயல் எங்களை வெகுவும் பாதித்திருக்கிறது" என்று கூறுகிறார் வெங்கடேஷ் பட். மல்லிகா பத்ரிநாத் தன் கருத்துகளை பதிவு செய்ய நினைத்த போது அவர் "தலை" அட்டமி போட்டதைக்கண்டு "தல" யே அதிர்ந்திருப்பரோ என்ற ஐயம் எங்களுக்குள் எழுந்து இடத்தை காலி செய்தோம்.


"தாமுவும், வெங்கடேஷும் ஏன் இப்படி கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இது ஒரு அற்புதமான முயற்சி, ஆனால் இது முதல் முயற்சி அல்ல. அஜித்திற்கு முன்னே இதை நான் செய்திருக்கிறேன்" என்று கூறுகிறார் சமையல் சமையல் சுரேஷ். இவர் ஒரு காலத்தில் படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தியும் நாங்கள் அப்போது தான் தெரிந்துகொண்டோம். "அவர்களின் பிரச்சனை எனக்கு புரியவில்லை. இத்தனை நாள் நான் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் சமையல் சமையலில் எத்தனை கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் நான் தந்திருப்பேன். எனக்கு என்ன தகுதி இருந்தது. அது போல் தான் இதுவும்" என்று தனக்கு வெந்நீர் கூட வைக்க தெரியாததையும் எடுத்து சொன்னார்.

வெங்கடேஷ் பட், சுரேஷ், தாமு

இத்தனை பிரச்னைக்கு நடுவிலும், இது உண்மையாகவே ஒரு படிப்பு தானா என்று மாணவர்கள் "தலை"யை சொரிந்துகொண்டிருக்கையில், "தல"யின் வரவு அவர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. "தல தீபாவளி", "தல பொங்கல்" போல இந்த "தல பிரியாணியும்" நாளை குமுதத்தில் வருமா? காலம்தான் பதில் சொல்லும் ... ஹி ஹி ... காலமென்ன காலம். நிச்சயமாக வரும் என்பது நமக்கு தெரிந்ததுதானே.

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒரு அபத்தமான பதிவு என்று இன்னும் உங்களுக்கு புரியவில்லை எனில் இதை நீங்கள் படிக்க வேண்டாம் :P