Sunday, November 22

துளி (சிறுகதை)


அவளுக்கு இந்த பாரம் தேவையில்லைதான். பாரம் என்று அவள் கருதவில்லையே. அது தான்தான் என்ற உணர்வு அவளை உள்ளூர குத்திக்கொண்டிருந்ததனால்தான் இப்போது அதை சுமக்கிறாள். அதன் தாய் சுமந்த பின் இவள் சுமக்கிறாள். எவ்வித சம்மந்தமும் இல்லை. இருந்தாலும் வாழ்கையில் பல இடங்களில் நாம் காணும் பாதைகள் கண்ணாடி பிம்பங்களே. வந்த வழியை காட்டிக்கொண்டு, தன்னையே மீண்டும் பிரதிபலிக்கும். சுட்டெரிக்கும் சிமெண்ட்டுத் தரையில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தவித்த அக்குழந்தையை பார்த்தால் யாருக்குத் தான் மனம் இளகாது. ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும். இவளால் கூச்சலிட்டுக் கதற முடியுமா? இல்லை இவள் கதறுவது கேட்குமா? அவளுக்கென்று ஒரு மொழி. சில நேரம் உதடுகளில். சில நேரம் கைகளில். அதுவாக தோன்றி மறையும். அர்த்தமற்றது. 


எங்கெங்கோ பார்வை சுற்றுகிறது. எங்கிருந்தோ வந்து அவள் கண்ணில் விழுந்தது அக்குழந்தை. கண் வழியே இப்போது கைகளில். மண்டையில் நரம்பு புடைத்தெழுந்து, பட்டு மயிர்த்துளிகளின் நடுவில் பிரகாசிக்கிறது. நெஞ்சுக்கூடு அதனை சுற்றியிருந்த சதைகளை விழுங்கி மேலெழுந்து வரி வரியாக கொடு வரைகிறது. வயிறு முதுகை முத்தமிடுகிறது. ஆனால் கண்கள், நாபியிலிருந்து வெளியேறும் கதறலின் சக்தி தாளாது சுருங்கியிருக்கிறது. பட்டப்பகல். உஷ்ணத்தால் வெளியேறும் வியர்வைத் துளிகள், நிலத்தில் விழுந்து, அந்த சூட்டோடு ஆவியாகி காற்றோடு கலக்கிறது. எங்கும் வெளிச்சம். மரங்களும் இலை விரித்து ஆட, ஒளிக்கிரணங்கள் அதை மிளிர வைக்கிறது. ஆள் அரவம் இல்லாத அவ்விடத்தில், குழந்தையின் கதறல் மட்டுமே தனக்கு ஆதரவாய், அவள் செய்வதறியாது தவிக்கிறாள்.

குழந்தைக்கு பசி. ஆனால் தருவதற்கு என்ன இருக்கிறது?

அவளே ஒரு பிச்சைக்காரி. ச ச ... பிச்சைக்காரி அல்ல. அது போன்ற சமூகப் பட்டப்பெயர்களுக்கூட தகுதி அற்றவள். ஒவ்வொரு நாள் எப்படி கடக்கிறது என்பது அவளுக்கே புரியாத புதிர். விலாசமென்று ஒன்று கிடையாது. இருக்கும் இடம் இல்லம், விழுந்த இடம் மஞ்சம், தின்னுவதேல்லாம் சோறு. அது சோறா? அது கூட அவளுக்கு தெரியாது. அவள் உடம்பில் நாக்கு ஒரு அவசியமற்ற உறுப்பு. அவளுக்கு வலி புதிதுமல்ல. அது வலி என்பது கூட அவளுக்கு தெரியாது. ஏதேதோ சமயங்களில் அவள் எத்தனயோ பேரின் பாரத்தைத் தாங்கியிருக்கிறாள். ஆனால் இந்த குழந்தை கனக்கிறது.

பசிக்கு ஆகாரம் வேண்டும் குழந்தைக்கு. குழந்தையின் கதறல்கள் காற்றை கிழித்து அவள் செவிகளை குத்துகிறது. வலி பொறுக்க முடியாமல் அவள் ஓடுகிறாள். ஏதாவது கொடுக்க வேண்டுமே. வீடு வீடாய் இருக்கும் அவ்விடத்தில் செங்கல் மட்டும்தான் கிடைக்கும் போலும். ஆனால் செவிற்றை உடைக்கும் சக்தி அவளிடம் இல்லை. வீடு வீடாக போய் கதவைத் தட்டினால்? அது அவளுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். எத்தனை முறை அதை செய்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் இரண்டு கண்கள் மட்டும் கதவின் ஒரு துவாரத்தில் இருந்து வெளிப்படும். அக்கண்கள் ஏதோ கேட்கும். ஆனால் அது இவளுக்கு புரிவதில்லை. ஒரே மாதிரி முழித்துக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு கதவிற்கு பின் ஒவ்வொரு கண்கள். சிலது சின்னதாய், சிலது முட்டை முட்டையாய், சிலது நீலமாய், சிலது பச்சையாய், இரண்டாய், நான்காய். ஆனால் எல்லாம் சிறிது நேரத்திற்கு பின் அனலை கக்கும். அனலின் வெப்பம் தாங்காது அவள் நகர்வாள்.

குழந்தைக்கு பசி. ஏதாவது தர வேண்டும்.

யோசனை செய்யக் கூடத் தெரியாது, அந்த உச்சி வெய்யிலில் நனைகிறாள். அழுகை சத்தம் வெயிலைக் காட்டிலும் அதிகமாக எரிகிறது. எங்கோ ஒரு மணியோசை ... டாண் ... திடீரென்று ஒலிக்கிறது ... டாண் ... குழந்தையின் அழுகையை விழுங்கியபடி ... டாண் ... மீண்டும் மீண்டும் ... டாண். ஒலி பிறந்த திசையை நோக்கி ஓடுகிறாள். ஒலி வரும் திசையில் ஒரு வழி இருக்க வேண்டும் என்று நினைத்தாளோ? எந்நேரமும் குழைந்தையின் அழுகை ஒலி கேட்க அதை தாண்டிய ஒரு ஒலி அவளுக்கு ஒரு நிம்மதி அளித்தது போலும். ஓடுகிறாள் ... பாய்ந்து ... எங்கிருந்து வந்தது இத்தனை சக்தி? யாரிடம் பெற்றாள்? அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. அவள் ஓட்டத்தை வரவேற்றவாறு மரங்கள் சற்று பலமாக ஆடத் தொடங்கின.

கோவிலில் நடக்கும் பூஜைக்காக மணி அடிக்கப்பட்டது. இந்நேரத்தில் பூஜையா? யாருக்காக? அவள் பாதங்கள் வெய்யிலில் பொசுங்க, அவள் வேகம் இன்னும் அதிகரித்து, அவ்விடத்திற்கு வந்தாள். அவள் இவ்விடத்திற்கு பல முறை வந்திருக்கிறாள். பச்சை பச்சையாக குப்பையில் கிடக்கும் தொண்ணை இலைகளை எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறாள். சில சமயங்களில் அதனுள் ஏதேதோ வண்ணங்கள் தீத்தப்பட்டிருக்கும். வெள்ளையாக, சிவப்பாக, இள மஞ்சளாக ... அவள் நாக்கின் ருசி நரம்புகளும் அவ்வப்போது வேலை செய்கிறது. அவளுக்குள் அசட்டுத்தனம் கலந்த ஒரு மகிழ்ச்சி. இந்த இடத்தை மறந்து விட்டோமே? என்று நினைத்தாள் போலும். முட்டாள்தனம் தான்.

கோவில் முன்வாசலில் நின்று கர்பக்ரஹத்தை காண்கிறாள். பாதி மூடிய திரையினுள் ஒரு கல், அதன் மேல் பல்வேறு வண்ணங்கள் பொதிந்திருக்க - தொண்ணையின் வண்ணங்கள்? - அழகாய் தன்னைப்பார்த்து சிரிப்பதை காண்கிறாள். அந்தக் கல்லின் கருமையில் தன்னையே காண்கிறாள். அவளே அவளைப்பார்த்து சிரிக்கிறாள்.

"எங்கே இருந்தாய் நீ?"

"இங்கேதான்"

"என்னைப் பார்க்கவே இல்லையே நீ"

"இப்போது தானே பார்க்கிறேன்"

"இத்தனை நாள் கழித்து, இப்போதுதான் என்னை காண்கிறாய்"

"இல்லை உன்னில் என்னை காண்கிறேன். நீ நான்தான் என்பதால்தான் உன்னை என்னிடமிருந்து மறைத்தனர் போலும். என்னையே என்னிடமிருந்து மறைத்தனர் போலும்"

அவர்கள் சம்பாஷனை அவர்கள் மொழியில் நடந்தேறியது.

வெடுக்கென்று ஒரு கை அத்திரையை இழுத்து, அவளை அவளிடமிருந்து மறைத்தது. பிரக்ஞை திரும்பியவள் போல் அவள் பார்வை அக்கம் பக்கத்தில் இருந்த மனிதர்களை கண்டது. கர்பகிரஹத்தில் இருந்து பற்கள் நற நறக்க ஒருவர் வெளியே தோன்றினார். கையை பக்கவாட்டில் வீசி ஏதோ சமிஞ்யையில் சொல்ல முயன்றார். பற்களுக்கு இடையில் அவர் உரைக்கும் மந்திரங்கள், அவள் முகத்தில் தெறித்ததில், உஷ்ணம் படர்ந்து தஹித்தது. எல்லோரும் அவளையே பார்த்தனர். அனைவரின் கண்களும் கதவிற்கு பின் தெரியும் கண்கள் போல வெறுப்பை கக்கியது. அவளுக்கு புரிந்தது. அந்த குழந்தையின் அழுகை சத்தம் மணி ஒலியையும், மந்திரத்தையும் நசுக்கித் தின்று கொண்டிருந்தது. அவர்கள் பார்வையின் உஷ்ணம் வெயிலினும் மிகுதியாய் அவளை எரிக்க உடனே விலகினாள்.

தொண்ணை விழும் இடத்தில் குழந்தையை மூன்றாவது கை போல் வைத்துக்கொண்டு தேடினாள். ஒன்றும் அகப்படவில்லை. அவளுக்கே ஆச்சரியம்தான். குழந்தையின் அழுகை அதிகரித்தது. கூடவே கோவில் மணியின் சத்தமும் கூடியது. யார் பெரியவர் என்ற போட்டி போலும்? இரண்டில் ஏதாவது ஒன்றை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவள் மண்டை வெடித்து விடும். கோவில் மணியை நிறுத்த முடியாது. ஆனால் குழந்தையின் அழுகையை? ஏதாவது வழி இருக்க வேண்டும்.

அவள் நினைத்ததை அவளே உணர்ந்தாளோ? கோவிலின் பின்னிலிருந்து, வெள்ளை வெளேரென்று, நுரை கொப்பளிக்க பால் வழிந்தது. அது தொண்ணை விழும் குப்பை மேட்டின் விளிம்பில் உள்ள சிறு கால்வாயில் ஓடிக்கொண்டு, அதன் வழியே இருந்த குப்பைகளை விழுங்கிக் கொண்டிருந்தது. உச்சி வெய்யிலில் ஒளி தெறிக்க அந்தப் பாலின் வெண்மை மிளிர்ந்தது. தனக்குத்தானே வழி காட்டிக்கொண்டதை நினைத்து ஒரு சந்தோஷப் பெருமையுடன், அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள். கால்வாயின் முடிவில் வழிந்த பால், சாக்கடையில் கிடந்த மல மூத்திரத்தொடு கலந்தது. அவ்விடத்தில் அக்குழந்தையின் வாய் வைத்து பாலூட்ட முயன்றாள். திடீரென்று இரு நாய்கள் அவளருகே வந்து "லொள்" என்றன. அதிர்ந்து போய் பின் வாங்கினாள். கைகளில் படிந்த வியர்வையால் குழந்தை வழுக்கியது. அந்தரத்தில் பறந்து சாக்கடையில் விழும்முன் அதை பிடித்துத் தூக்கி அணைத்துக் கொண்டாள். இரு நாய்களும் மீண்டும் "லொள் லொள்" என்ற போது அதன் கண்களிலும் அவள் மனிதர்களையே கண்டாள். சற்று விலகி பின்வாங்கியதும், அவ்விரு நாய்களுக்கிடையில் இருந்த ஒரு குட்டி, சாக்கடையில் வழிந்த பாலை நக்கியது. குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு வேறு திக்கை நோக்கி திருப்பினாள். அந்தக் காட்சியை காண அவள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

குழந்தையின் குரல்வளை உடைந்து சத்தம் குறைந்தது. அகண்ட வாய் விழுங்கிய மூச்சுக் காற்று, குழாயுள் நுழைந்து அபஸ்வரமாய் குழலூதியது. தாடையின் கீழ் கம்பி கம்பியாய் நரம்புகள் வெளித்தோன்றி அந்த பிஞ்சுத் தலையை தாங்கிக்கொள்ள, குழந்தை துடித்துக் கொண்டிருந்தது. எங்கோ எவளோ செய்ததை அறிந்து, தன் மேலுள்ள சட்டையை விளக்கி, குழந்தையின் தலையை அதனுள் புதைத்து, தன் உடலோடு அழுத்துகிறாள். கேவல் அதிகமாகிறது.

அவளால் அந்த அழுகையை பொறுக்க முடியாமல் ஓடுகிறாள்.
காற்று பலமாக அடித்து அவளின் ஓட்டத்திற்கு உதவுகிறது.
ஓடுகிறாள். காற்றின் ஒலி குழந்தையின் சப்தத்தை ஒடுக்கியது.
ஓடுகிறாள். கால்களே வழிகாட்டியாய், கையில் ஏந்திய குழந்தையை மறந்து எங்கோ செல்கிறாள்.
திசுக்களின் செல்லெரிய, ஓடி ஓடி, அயர்ந்தபின் தனக்குப் பரிச்சயப்பட்ட ஒரு குப்பை மேட்டில் நின்றாள். ஆனால் அங்கே துர்நாற்றம் வீசியது. அவ்விடத்திற்கு அது புதிது. நாசியைத் துளைக்கும் அந்த வாடை அவளிடமிருந்து வருவதை உணர்ந்தாள். குழந்தை கையில் இருப்பது அப்போதுதான் அவள் நினைவிற்கு வந்தது. தன்னோடு ஒட்டியிருந்த குழந்தையை, தன் மாரிலிருந்து பிய்த்தெடுத்து தன் கையில் ஏந்திக் கொண்டாள். குழந்தையின் புட்டத்திலிருந்து சிவந்த மலம் வெளியேறியிருந்தது. அது மலமல்ல. அந்தக் குழந்தையின் பச்சிளங் குருதி. குழந்தை இறந்திருக்கிறது.

வாழ்கையே துர்நாற்றமடைந்த அவளுக்கு இந்த வாடை திகட்டியது. முட்டிக்கால் பாரம் தாங்காமல் மடங்க, அப்படியே அவள் கீழே அமர, குழந்தை தன் கையினின்று விலகி அவள் அருங்கே விழுந்ததைக்கண்டு அவள் வயிறு சுரீலென்றது. இதயத்தில் கல் தொங்கிக்கொண்டிருக்க, அதனிலிருந்து இரத்தம் பாய்ந்து உடலெங்கும் பரவ, கண்களில் நீர் தேங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு துளி சிந்தி அக்குழந்தையின் சில்லிட்ட மேனியில் விழுந்தது. அதனருகே இன்னொரு துளி. இன்னொன்று. இன்னொன்று. துளிகள் அம்மேனியில் வளர்ந்தது. வானமே அழுதது. பல்வேறு துளிகள் ஒன்றாய் சேர்ந்து மழையாய், அவள் கையில் பதிந்த கரையையும், காலிடையில் கசிந்த இரத்தத்தையும், தன்னோடு சேர்த்துக் கரைத்தது.