Monday, January 25

விருது என்ற தண்டமழுதல்

விருதுகள் ஒரு அங்கீகாரம் என்பது நாம் அறிந்ததே. ஒருவரின் சாதனையையோ, பங்களிப்பையோ கருத்தில் கொண்டு அந்த முயற்சியை, அற்பணிப்பை கௌரவிக்கும் வண்ணம் விருதுகள் வழங்கப்படுவதுண்டு. அதாவது ஒரு மனிதன் தன் வாழ்கையின் பெரும்பங்கை செலவழித்ததற்கு ஒரு வகையான சன்மானம்.

அனால் திகட்டி வெறுத்துப் போகும் அளவிற்கு விருதரசியல் சமீப காலங்களில் தலை தூக்கியிருக்கிறது. விருதுகள் என்ற தனிப்பட்ட ஒருவரின் சொத்து சமூகத்தில் எதிர்வினை அரசியலுக்கு ஒரு கருவியாகப் பயன்படுகிறது. எனக்கு இது இன்னும் பிடி படவில்லை.

நயன்தாரா சேகல் இந்தியாவில் புதிதாக (?) தலை தூக்கியிருக்கும் வன்முறை கலாச்சாரத்திற்கு எதிராக தன் விருதினை திருப்பி அளித்தார். பரிசு பணத்தை திருப்பிக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இதை ஆதரித்தும் எதிர்த்தும் பல கூக்குரல்கள் எழும்பின.
இந்த போராட்டத்தின் அர்த்தம் தான் என்ன. தன் தனித்திறமைக்கு பரிசாக அளிக்கப்பட்ட சாஹித்ய அகாடமி விருதிற்கும் வன்முறைக் கலாச்சாரத்திற்கும் என்ன உறவு? அதை மீண்டும் இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? இப்போது வன்முறை கலாச்சாரம் அடங்கி விட்டதா? விருதுகளை துச்சமாக மதித்தவருக்கு எதற்கு அந்த விருது திருப்பி அளிக்கப் பட வேண்டும்?

இது ஒரு புறமெனில் விருது மறுப்பு என்பதும் இப்போது வாடிக்கையாகி உள்ளது. பத்ம விருதுகளை நிராகரித்தவர்கள் பட்டியலில் ஜெயமோகன் இணைந்துள்ளது வருந்தத்தக்க விஷயம். தேசிய அளவில் தரப்படும் முக்கியமான அங்கீகாரமாக கருதப்படும் பத்ம விருதுகளை நிராகரித்திருப்பதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறியிருந்தாலும் அதெல்லாம் அவசியமா என்றே தோன்றுகிறது.

இதுபோல் பலர் செய்திருக்கிறார்கள். ஸ்டீபன் ஹாகிங் கூட பிரிட்டிஷ் அரச குடும்பத்தால் தனக்கு கொடுக்கப்பட்ட நைட்ஹூட்டை வாங்க மறுத்தார். அதற்கான அரசியல் காரணங்கள் பல இருந்தாலும் அந்த அங்கீகாரம் அவருக்கு அவசியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்னே அவர் புகழ் பெற்ற விஞ்ஞானியாகவும், வானவியல் மேதையாகவும் அறியப் பட்டிருந்தார்.
இந்தியா போன்ற மொழி வேறுபாடுகள் அதிகம் உள்ள நாட்டில் ஒரு மொழியில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பிற மொழிக் கலைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவது இது போன்ற விருதுகளே. அதாவது ஒரு தேசிய விருதின் மூலம் அந்த கலைஞனுக்கு மட்டுமல்லாது அந்த மொழிக்கும் அந்த மொழியில் பணியாற்றும் வேறு பல எழுத்தாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை பிற மொழிகளில் அறிமுகப்படத்த அற்புதமான நுழைவாயிலாக அமையும்.

ஜெயமோகன் தமிழில் இன்று முதன்மையான எழுத்தாளர் என்பது எல்லோரும் பரவலாக ஒப்புக்கொள்ளப் படும் ஒன்றே. அவர் இலக்கிய ஆளுமை மட்டுமல்லாமல் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு ஆசான் ஸ்தானத்தில் இருக்கிறார். அவரின் பல படைப்புகள் சீரிய கருத்துக்களையும், சிந்தனைகளையும் முன் வைப்பவை. அவர் பத்ம விருது பெறுவதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது. அதற்கு அவர் அரசியல் நோக்கோ, சார்போ அவசியமே அல்ல.ஆனால் அவர் மறுத்ததின் மூலம் இத்தகைய விருதுகளின் உண்மையான பங்கு என்ன என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அடிப்படையான கோணத்தில் பார்த்தோமேயானால் நம்மை பாராட்டும் எந்த ஒரு உள்ளத்தையும் நிராகரிப்பது ஒரு வித வன்முறையே. இதன் மூலம் தான் ஜெயமோகன் தன் கருத்து நிலைப்பாட்டை தெளிவு படுத்தி நிறுவிக்கொள்ள வேண்டுமென்பதில்லை. வசை பாடுபவர்கள் தத்தம் பணியை செய்து கொண்டேதான் இருப்பார்கள். அதேபோல் அவர் எழுத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் அவரை வாசிக்காமல் இருக்கப் போவதில்லை.

இந்த நிலையில் ஒரு சொந்த காரணத்திற்காக அவர் இந்த விருதை நிராகரித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. இது அவருக்கு மட்டும் கிடைப்பதல்ல. தமிழ் இலக்கியத்திற்கு கிடைக்கும் ஒரு கௌரவமாக கருதியிருக்க வேண்டும். விருதினை வைத்து அரசியல் செய்பவர்கள் அந்த விருதுகள் அல்லாமலும் அதை செய்யலாம். யாரோ நான்கு பேர் பேசுவார்கள் என்பதற்காக விருது மறுப்பு செய்வதென்பது ஏற்புடையதாகவே அல்ல. இத்தனைக்கும் கருத்தியல் தெளிவுகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுபவர் இப்படி செய்யும்போது என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இந்த விருதின் மூலம் வெண்முரசு என்ற இமாலய முயற்சி மட்டுமல்லாது, அவரின் பல படைப்புகள் பிற மொழி கவனத்திற்கு வந்திருக்கும். அதன் மொழி பெயர்ப்பும் கூட சாத்தியமாகியிருக்கும். அதன் மூலம் தமிழின் பல்வேறு படைப்புகளைப் பற்றிய பொதுப் புரிதலும் ஏற்பட்டிருக்கும். சாஹித்ய அகாடமி ஒரு கண் துடைப்பு என்றாகிவிட்ட கதியில் பத்ம விருது ஒரு முக்கியமான அங்கீகாரமாக இருந்திருக்கும். அதை அவர், எத்தகைய எதிர்ப்பிருந்தாலும், பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதுவும் என்னோடு புதைந்து போகட்டும்.