Sunday, January 24

பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சி - சென்னை - 2016

இன்று தான் பொங்கல் சிறப்புப் புத்தகக் கண்காட்சிக்கு பொய் வந்தேன். பொருளியல் சிக்கல்களுக்கு மத்தியில் முடிந்த அளவு செலவிட்டு அள்ள முடிந்ததை அள்ளினேன். எப்போதும் போல சில புத்தங்களை மனதில் வைத்துக் கொண்டு அதைத் தவிர எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன்.


போகும் முன் என் மனதில் இருந்தது தி.ஜ.ரங்கநாதன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி இவர்களுடைய புத்தகங்களை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று செல்லில் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். மிகச் சரியாக அவற்றைத் தவிர எல்லாம் வாங்கிவிட்டேன்.

வாங்கிய புத்தகங்களில் பெரும்பாலானவை ஏதோ ஒரு தருணத்தில் வாங்க வேண்டும் என்று நினைத்துதான் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும் வாங்க எண்ணி போனதை வாங்க முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. நினைத்தால் எல்லாவற்றையும் வாங்கலாம். ஆனால் காசு என்று ஒன்றையும் சேர்த்து கேட்பதனால் கொஞ்சம் தடங்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் ஏனோ பெரும்பாலான கடைகளில் credit card எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சில முன்னிலைப் பதிப்பகங்களைத் தவிர பிற பதிப்பகத்தாரிடம் இந்த பிரச்சனை இருக்கிறது. இதை செயல்படுத்தியிருந்தார்களெனின் நிச்சயமாக இன்னும் அதிகமாக வாங்கியிருப்பேன். எனக்கு அதிகமாக கடன் ஏறி விடக் கூடாது என்ற நல்லுள்ளத்துடன் இதை அவர்கள் செய்ததாக நினைத்துக் கொள்கிறேன்.

இம்முறை நான் வாங்கிய புத்தகங்கள் கீழே வருமாறு

 • கடலுக்கு அப்பால் & புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் - நற்றிணை பதிப்பகம்  - நெடுநாட்களாக starmark - ல் கேட்டும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக வாங்கிவிட்டேன்.
 • நிழலற்ற பெருவெளி - தாஹர் பென்  ஜீ லோவ்ன் (தமிழில் எஸ்.அர்ஷியா) - எதிர் வெளியீடு - டப்ளின் இம்பாக் விருதுபெற்ற "This blinding absence of light" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. உலகிலேயே மிக உயரிய இலக்கிய விருது பெற்ற நூல் என்பதால் கண்டவுடன் வாங்கிவிட்டேன்.
 • இயந்திரம் - மலையாற்றூர் ராமகிருஷ்ணன் (தமிழில் பா.ஆனந்தகுமார்) - நாஷனல் புக் ட்ரஸ்ட் - மலையாளத்தில் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நாவல் என்று கேள்விப் பட்டதால் வாங்கினேன். படித்துவிட்டுத் தான் இனி சொல்ல வேண்டும்.
 • சிப்பி வயிற்றில் முத்து - போதிசத்வ மைத்ரேய (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி) நாஷனல் புக் ட்ரஸ்ட் - தமிழ்நாட்டின் மீனவர்களைக் குறித்து எழுதப்பட்ட "ஜினுகர் பேடே முட்கோ" என்ற வங்க நாவல் என்ற குறிப்பு உள்ளது. அதை மீண்டும் தமிழில் படிப்பதால் ஒரு வித்தியாசமான பார்வை இருக்கும் என்று நம்புகிறேன்.
 • அக்னி நதி - குர் அதுல் ஐன் ஹைதர் (தமிழில் சௌரி)நாஷனல் புக் ட்ரஸ்ட் - இந்தப் புத்தகத்தைப் பற்றி ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய கட்டுரையை படித்துத்தான் தெரிந்து கொண்டேன். மிகவும் ஆர்வம் தூண்டுவதாக இருந்தது. பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.
 • பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியன் - நற்றிணை பதிப்பகம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை. க.நா.சு என்பதாலேயே வாங்கிவிட்டேன்.
 • இனி நான் உறங்கட்டும் - பி.கே பாலக்ருஷ்ணன் (தமிழில் ஆ.மாதவன்) - சாஹித்ய அகாதமி - மலையாளத்தில் இனி ஞான் உறங்கட்டே என்ற பெயர்போன நாவலின் தமிழாக்கம். வியாச மகாபாரதத்தின் பார்வை என்பதாலும், ஆ.மாதவனின் மொழியாக்கம் என்பதாலும் வாங்கினேன்.
 • சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன் - காவ்யா - சமீபத்தில் மறைந்த வெ.சா வை பற்றி அதிகம் கேள்வி பட்டிருந்தாலும் படித்ததில்லை. இந்த புத்தகத்தின் முதல் பிரதி 2003-ல் அச்சிடப்பட்டது. மறுபதிப்பு செய்யப்படவில்லை. கொஞ்சம் ஆங்காங்கே பழுது அடைந்திருந்ததனால் குறைவான விலைக்கு வாங்கிவிட்டேன்.
 • கங்கவ்வா கங்கா மாதா - சங்கர் மோகாசி புணேகர் (தமிழில் எம்.வி. வெங்கட்ராம்)நாஷனல் புக் ட்ரஸ்ட் - எம்.வி.வி மொழியாக்கம் செய்தது என்பதாலும், கொஞ்சம் பிரசித்தி பெற்ற கன்னட நாவல் என்பதாலும் வாங்கியது.
 • 18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன் - கிழக்கு பதிப்பகம் - எக்கச் செக்க மொழிகளில் சரமாரியாக மொழியாக்கம் செய்யப் பட்ட நாவல் என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது. தமிழில் கிடைக்கும் அறிய coming  of age நாவல்களில் இதுவும் ஒன்று என்று கேள்விப் பட்டேன்.
 • முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீ ரங்க (தமிழில் ஹேமா ஆனந்ததீர்த்தன்)நாஷனல் புக் ட்ரஸ்ட் - மீண்டும் ஜெயமோகன் தளத்தில் கிடைத்த அறிமுகத்தால் வாங்கியது. என்னவோ தெரியவில்லை இம்முறை நிறைய கன்னட நாவல்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
 • குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி - கிழக்கு பதிப்பகம் - இ.பா வின் எந்த நாவலையும் படித்ததில்லை என்பதால் வாங்கியது.
 • வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் (தமிழில் மு.ஞானம்)நாஷனல் புக் ட்ரஸ்ட் - இந்தியில் சாரா ஆகாஷ் என்று வெளிவந்து பலத்த வரவேற்பை பெற்றதாகக் கூறப் படுகிறது. விடலைப் பருவ சிக்கல்களை எடுத்துரைப்பதாகவும், பெண்ணியத்தை பற்றி பேசுவதாகவும் முன்னறையில் எழுதப்பட்டுள்ளது. படித்துப் பார்த்துதான் சொல்ல வேண்டும்.
 • மங்கியதோர் நிலவினிலே - குர்தயாள் சிங்க் (தமிழில் தி.சா. ராஜு) நாஷனல் புக் ட்ரஸ்ட் - அர்த் சாந்தினி ராத் பஞ்சாப் கிராமப்புற வாசிகளின் கதை. எனக்கு பரிச்சயமில்லாத களம். வாங்கிவிட்டேன்.
 • ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்ப ராய் (தமிழில் ஜெய சாந்தி)நாஷனல் புக் ட்ரஸ்ட் - பெயரிலியே எல்லாம் இருக்கிறது. 1978-ல் வெளிவந்த கன்னட நூல். 
 • ரப்பர் - ஜெயமோகன் - நற்றிணை பதிப்பகம் - ஜெயமோகனின் பிரசித்தி பெற்ற நாவல் என்பதைத் தாண்டி இதற்கு வேறென்ன அறிமுகம் வேண்டும்.
 • கடைத்தெருக் கதைகள் - ஆ.மாதவன் - நற்றிணை பதிப்பகம் - கிருஷ்ணப் பருந்து வாசித்தது முதல் எனக்கு ஆ.மாதவனின் மொழி நடை மேல் அதி தீவிர ஈர்ப்பு ஏற்பட்டது. கடைத்தெருக் கதைகள் அவர் படைப்புகளில் அதிகமாக போற்றப்பட்ட ஒன்று என்று தெரிந்ததால் வாங்கினேன்.
 • தன் வெளிப்பாடு - சுநீல் கங்கோபாத்தியாய் (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி)நாஷனல் புக் ட்ரஸ்ட் - இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஒரு நடுத்தர வர்க்க வங்க குடும்பத்தின் கதையாக எழுதப்பட்ட ஆத்மப்ரகாஷ் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. "முற்றிலும் வேறுபட்ட எந்த விதிக்கும் கட்டுபடாத நாவல்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
 • தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி - நற்றிணை பதிப்பகம் - சா.கந்தசாமியின் எழுத்துக்களுக்கு எனக்கு அறிமுகம் தேவை என்பதால் அவரின் முதல் சிறுகதை தொகுதியை எடுத்துள்ளேன். படித்த பின் பார்வைகளை பதிவேற்றுகிறேன்.
 • யாகம் - காளிப்பட்டினம் ராமாராவு (தமிழில் பா. பாலசுப்பிரமணியன்)நாஷனல் புக் ட்ரஸ்ட் -  நான் வாங்கிய முதல் தெலுங்குப் படைப்பு. தெலுங்குச் சிறுகதை உலகில் "யக்ஞம்" புதிய சகாப்தம் படைத்ததாக கூறப்பட்டுள்ளது. படித்துப் பார்க்க வேண்டும்.
 • ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் - நற்றிணை பதிப்பகம் - வண்ணநிலவன் படைப்புகளுக்கு நுழைவாயிலாக இருக்க இதை வாங்கியுள்ளேன்.
 • மித்ராவாந்தி - கிருஷ்ணாஸோப்தி (தமிழில் லட்சுமி விஸ்வநாதன்)நாஷனல் புக் ட்ரஸ்ட் - மீண்டும் ஒரு ஹிந்தி நாவல். இது ஒரு அசாதாரணமான நாவல் அல்ல. சாமான்யமான விஷயங்களை நோக்கும் மிகவும் சாதாரண கதை என்று கூறியது எனக்கு பிடித்திருந்தது.
 • நாய்கள் - நகுலன் - நற்றிணை பதிப்பகம் - நகுலனின் மொழிநடை வித்தியாசமும் குழப்பமும் மிக்கது என்பது தெளிவு. அதனாலேயே அவர் எழுத்துக்கள் என்னை ஈர்த்தன. நாய்கள் பரவலாக பேசப்படும் ஒரு படைப்பு என்பதால் பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.
 • அவரவர் பாடு - க.நா.சுப்ரமணியன் - நற்றிணை பதிப்பகம் - நற்றிணையில் க.நா.சு வின் அனேக நூல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதிகமாக நாவல்களும் சிறுகதைகளுமே இருக்கின்றன. கட்டுரைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நாவல் ஒரு மர்ம நாவல் என்பதால் படிப்பதற்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.
 • நிழல்கள் - நகுலன் - நற்றிணை பதிப்பகம் - நகுலனின் நாவல். அவ்வளவுதான் தேவைப் பட்டது இந்த புத்தகத்தை வாங்க நினைக்கும்போது.
 • கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா - எதிர் வெளியீடு - சமீபத்தில் இணையத்தில் இந்நாவலைப் பற்றிய விவாதங்களை அதிகம் படித்ததால் வாங்கினேன். 
 • சீறா ஆல்பத்திலிருந்து சில சித்திரங்கள் - குர்ரம் முராத் (ரஹ்) (தமிழில் சையது அப்துர் ரஹ்மான் உமரி) - இக்றா பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் - சீறாப்புராணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக வாங்கியது. படித்துப் பார்த்த பின் பார்வைகளை பகிர்கிறேன்.
சென்னை பொங்கல் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடக்குமிடம் - YMCA ராயப்பேட்டை மைதானம்.

பார்கிங் வசதி சரியாக இல்லை என்பது ஒரு குறை. நந்தனம் மைதானத்தில் இருப்பதில் பாதி கூட இல்லை. கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாததையும் தவிர்க்கலாம். ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலும் சர்சார்ஜ் போடுவதெல்லாம் ரொம்ப ஓவர். மேலும் ஆங்கில இலக்கிய நாவல்களை அதிகம் காணவில்லை. டி. ஹெச். லாரன்ஸ், ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட், ஜான் ஸ்டைன்பெக், ஜார்ஜ் பேர்எக் போன்ற பலரைத் தேடியும் கிடைக்கவில்லை. நான் சரியாகத் தேடவில்லை என்பதும் ஒரு குறையாக இருக்கலாம்.

சொட்டுத் தண்ணீர் குடிக்காமல், உணவருந்தாமல் 3 மணி நேரம் ஓடி ஓடி புத்தகங்கள் வாங்கியது ஒரு வித்தியாசமான, சற்றே நிறைவான அனுபவமே.