Saturday, January 30

வடிவச்சிக்கல்கள்

தினமும் ஏதேனும் ஒன்றை எழுதி பதிவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த மூன்றாம் நாள் அதை செய்ய முடியாமல் போனது. முதல் காரணம் நான் இந்த தளத்தின் வடிவமைப்பை மாற்ற எடுத்துக் கொண்ட நேரம். எனக்கு பிளாக்கர் இயல்பாக அளிக்கும் வார்ப்புருக்கள் அல்லாது படிக்க எதுவாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன்.


கூகிள் துப்பிய எண்ணற்ற சுட்டிகளில் நான் தேர்ந்தெடுத்தது கூயாபி டெம்ப்ளேட்ஸ் என்ற தளத்தை. இதில் பலவிதமான இணையதள வார்ப்புருக்கள் விதவிதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் கிடைக்கிறது. எளிமையான இணையதள வடிவங்கள் என்னை வெகுவாக ஈர்ப்பவை.

முதலில் தேர்ந்தெடுத்த சில வடிவங்கள் பிடித்திருந்தாலும் அது பல பிரச்சனைகளை உருவாக்கிவிட்டது. குறிப்பாக கூகிள் ப்ளஸ் கருத்துப் பெட்டி சரியாக வராமல் இருந்தது. அதை சரி செய்ய எண்ணி அரும்பாடுபட்டு HTML-ஐ திருத்தியபோதும் பயனில்லை.

கடைசியாக இப்போதுள்ள வடிவத்தை தேர்ந்தெடுத்தேன். இது எனக்கு பிடித்திருக்கிறது. தளத்தின் மையத்தில் தெரியும் புகைப்படத்தை பவர் பாய்ன்ட் கொண்டே வடிவமைத்தேன். என்னிடமிருந்த ஒரு புகைப்படத்திற்கு பவர் பாய்ன்ட்டில் இருக்கும் சில வடிவமாற்ற தெரிவுகளை புகுத்தியபின் அருமையான அருவக் காட்சியாக உருக்கொண்டது. அதனுள் எளிமையான வேர்ட் ஆர்ட் மூலம் ஒரு கோழியின் கூவல் என்று எழுதிய பின் அவ்வடிவம் முழுமை அடைந்தது.

தற்போதைய இவ்வடிவத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேர்க்கப்படுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~

தாஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து முடித்து அதைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். எழுத எழுத எத்தனை எத்தனையோ சிந்தனைகள் அலை மோதிக் கொண்டே இருந்தன. கட்டுரை வடிவில் எழுத நினைத்த பொது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ரீதியில் இருக்கக் கூடாது என்று விரும்பினேன்.

கொஞ்சம் நீளமானதுதான். அதை எழுதி முடித்தபின் ஏனோ அது சீராக இல்லாதது போல் ஒரு உணர்வு. எழுத நினைத்த விஷயங்கள் அனைத்தையும் ஒரு விதம் எழுதியிருந்தாலும் அது சரியான வடிவமைப்பில் இல்லாததை மீள்வாசிப்பில் உணர முடிந்தது.

இப்போது அதற்கான பிழை திருத்தமும் வடிவ சீரமைப்பும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அழுத்தித் தொட்டால் துளை விழும் காகித்தத்தில் இருக்கும் அந்த நாவலை பல காலம் முன்பு என் குடியிருப்பில் வசிக்கும் ஒரு மாமா குடுத்தார். எதற்கென்று தெரியவில்லை. அதன் நிலையை பார்பதற்கே பரிதாபமாக இருந்தது.

பல காலம் மூலையில் கிடந்த அந்தப் புத்தகத்தை, "சரி படித்தே தீருவோம்" என்ற எண்ணத்துடன் இந்த வருடத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். விட்டு விட்டு வாசித்தாலும் நாவலின் பல கட்டங்கள் நம் மனதுக்குள் அப்படியே பதிந்துவிடும் அளவிற்கு காட்சிகள் வனையப்பட்டிருக்கிறது. அனைத்துமரியும் படர்க்கைக் கூற்று மொழிபை தாஸ்தயவ்ஸ்கி அதன் முழுமையான தீவிரத்தோடு பயன்படுத்தியிருக்கிறார்.

படித்த மாத்திரத்தில் ஏதோ ஒரு இமாலய சாதனை புரிந்ததுபோன்ற உணர்வு. அதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி படிக்கும்போது நாவலில் இருக்கும் பல உள்ளர்த்தங்கள் புலப்படுகிறது. வெகு விரைவில் என்னுடைய பார்வையையும், வடிவச் சிக்கல்களை நிறைவு செய்த பின், பதிவேற்றுவேன்.