Sunday, January 17

நீலக்கல்

காற்று வீசிய திசையில் சற்றே தலை நிமிர்ந்து ஆடி, மீண்டும் துவண்டு வீழ்ந்த பிடரி மயிரின் அடர்த்தியை உணர்ந்தவாறு மண்டை ஓட்டின் உள்ளில் விறைத்திருந்த நரம்புகள் பின்னிப் பிணைந்து நர்த்தனமாடுகையில் விண்ணென்று ஒரு வலி உச்சந்தலையில் இருந்து கண்களுக்குள் இறங்கி நீராய் கசிந்தது. அழவில்லை. சிரிக்கவில்லை. ஆனால் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. உணர்ச்சியற்ற ஜடம் என்ற நினைப்பு மட்டுமே உறுத்த, குத்திட்டு நோக்கிய கண்களின் பார்வை வலையில் மையைப்புள்ளியாய் குவிந்தது நீலக்கல்.
நீலக்கல் எரியத் தொடங்கியது.

வீசும் காற்று தரும் வீரியத்தில், அதனோடு சல்லாபித்தவாறு தன்னை சுய மைதுனம் செய்துகொண்டு நீலக்கல் அழியத் தொடங்கியது. நீலத்தின் நீளம் பரப்பி அஹங்கார ஆட்டம் புரிந்து அதை களைந்தெறிந்து, காமத்தின் உச்சத்தில் நிர்வாண சொரூபியாய், நாணிக்கொண்டு சிவந்திருந்த அந்தி வானை புணர எத்தனித்து, புடைத்தெழுந்த தன் அக்னி லிங்கத்தை வான் நோக்கி நீட்டியது நீலக்கல். இந்த நெருங்கிய சரசத்தில் என் பங்கு என்ன? இது அழகா? இல்லை அந்தரங்கத்தை சிறு துவாரத்தில் நோக்கும் தன்மை கொண்ட கோணல் எண்ணங்களா?

நீலக்கல் விழித்தது.

யாருக்காக? தனக்குளே புதைந்திருக்கும் உச்சகட்ட உணர்ச்சியை வெளியேற்ற விழிப்பது அவசியமா? உணர்ச்சியைத் தாண்டி உணர்வுகளை உணர, புலன்களற்ற ஒரு ஜடப்பொருள், நீலக்கல், தனக்கே உண்டான அரூப புலன்களை சிருஷ்டிக்கிறது. சிருஷ்டியின் அவசிய இருளைத்தாண்டிய ஒரு ஒளியில் தான் உருபெற்ற விநோதத்தை நினைத்து விழித்துக்கொண்டது. என் கண்கள் அந்த ஒளியை காண மட்டுமே விழைந்தது. இந்த உணர்வற்ற பாலியக்கத்தை காண மட்டுமே என் கண்கள் படைக்கப்பட்டது. தணல் பெருக பெருக அது நெருங்கி வருகிறது. கண்களை குத்தி கண்ணீரை உறிஞ்சுகிறது. வலியில்லை. வேதனையில்லை. உணர்ச்சி ... அறவே இல்லை.

நீலக்கல் சிரிக்கிறது.

வாய் பிளந்த நீலக்கல்லின் உள்ளிருந்து வெளிப்பட்டது ... அது என்ன ... ஒளியா ... வெளிச்சமா ... இல்லை ... ஜோதி ... பிரபஞ்சத்தை ஆட்கொள்ளும் பெருஞ்சோதி. ஆட்கொண்டவனின் மனதிலிருக்கும் பரஞ்சோதி. அது சத் என்ற உண்மையின் நிறம். நிறங்களை அடக்கி உண்ணும் இருளின் ஒளி. அகண்டப்பெருவேளியின் இருளின் உச்சமான ஒளி. இல்லாமையின் நீட்சியாய் விளங்கும் இருப்பின் ஒளி. இதுவே எல்லாமுமற்றது. எல்லாம் இருந்தும் எதுவும் அற்றதாய் விளங்கும் இருப்பு. மனதின் புலனுணர்வை புலப்படச்செய்யும் சக்தி. சக்தியை விழுங்கும் பெரும் சக்தி. தனக்கே தன்னை உணர்த்திக்கொள்ளும் வல்லமை பெற்ற சக்தி.

நீலக்கல் உடைகிறது.

பாளம் பாளமாய் வெடித்த காய்ந்த நிலப்பரப்பில், மயிர்த்தண்டு போல் பிறந்த வாய்க்கால்களில் நீரோடுவது போல் நீலக்கல்லின் உடலில் விரிசல் விழத் தொடங்கியது. தன் யோனியை கிழித்து தன்னுளிருந்த ஒளியின் தரிசனத்தை காட்டியது. அது தான் எல்லாம் என்ற உணர்வு மட்டும் தோன்றியது. என்னை சுற்றி காட்சியாக நிறைந்த இயற்கை என்னும் பொய், இத்தருணத்திற்காக காத்திருந்தவள் போல் கண்ணிலிருந்து மறைந்தாள். தன் ஆன்மாவையே கருவாக்கி, சிசுவாக்கி பிறப்பிக்கும் நீலக்கல் ஆணுமல்லாது பெண்ணுமல்லாத முரணாய், பாலற்ற பேரின்பத்தை அனுபவித்து என்னை பார்த்து சிரிக்கிறது.

ஏன் சிரிக்கிறாய்?
நீ என்ன செய்கிறாய்?
எதற்கு இந்த வக்கிர தரிசனம்?
நான் உனக்கு என்ன செய்தேன்?

நீலக்கல் பேய்போல் சிரித்தது. அகண்டு திறந்த வாயிலிருந்து வெளியேறி மோவாயை தொட்டன கூர் பற்கள். சக்தி சொரூபமாய் காட்சியளித்தாள். பேரண்டத்தின் ஏதோ ஒரு முடிவில்லா வெளியில், இடம் நேரம் என்ற பிரபஞ்ச பொருளியக்கத்திற்கு அப்பாற்பட்டு என்னை சோதிக்கிறது நீலக்கல். அதற்கு நான் ஒரு கோமாளி. விதூஷகன். மனம் என்னும் பேரியக்கத்தை உடல் சார் வரையறைகளுக்கு ஆட்படுத்தி சிறையிலிட்ட மூடன். புலனடக்கம் என்பது புலன்களை, அது சார்ந்த உணர்வை அடக்குவதா? புலன்களின் தன்னிலையறியா கட்டுப்பாடற்ற செயல்பாடு தானே புலன் அடக்கம்? அடங்காத பெருவெளியில் அடங்காமல் இயங்கும் எல்லாமே அடங்கியவை தானே? அருவமாக தன்னை உணர்ந்த ஒரு மனம்தானே அது? மனதின் உச்சத்தில் புலன்களேது, உடலேது. மனதின் விடுதலை உணர்வை வெளிக்கொணரும் சிறையே நான் என்ற உன் உடல். நான் காவலன். அரசன். ஏன் அதற்கு நான் விடுதலை அளிக்க வேண்டும்? ஏன் அதை நான் கட்டுப்படுத்தி துன்புறுத்தக் கூடாது? அது நான் தான் என்பது உண்மையெனில் அவ்விடுதலையை நான் உணர்வேன். ஆம் அது நானே. அதை வெளியேற்ற என்னால் மட்டுமே முடியும்.

நீலக்கல் மறைந்தது.

பேரொளியை தன்னுள் கொண்ட நீலக்கல் தன்னை பிரதிநிதிதுவப்படுத்திய நெருப்புடன் கலந்து உன்னதமான உருவாய், உருவம் அற்ற உருவாய், பரிசுத்தமாய் காட்சி அளித்தது. அகண்ட அலகு கொண்ட பருந்தை போல கைகளை விரித்தாடி, விரல்களை சொடுக்கியது. காற்றோடு இழைந்து தன் பிணத்தின் மேல் தானே ருத்ரதாண்டவம் ஆடுகிறது. இனி நீலக்கல் இல்லை. இந்த நொடிப்பொழுதில் அதன் உண்மை இருக்கிறது. இதுதான் மிகப்பெரிய நிலை. ஒளி ரூபத்தை தாண்டிய கருமை கொண்டு காற்றோடு கலந்து மேலுழுகிறது. தன் வாழ்கையின் பொருளை உணர்த்திவிட்டு சென்றது. இதழ் விரியாத புன்னகை உதிர்த்தேன். நீர் கசியாத கண்களுடன் அழுதேன்.