Wednesday, January 27

அற்பப் பிதற்றல்கள்

இன்று (இந்த நேரத்தில் என்றுதான் சொல்ல வேண்டும்) நான் இப்பதிவை எதற்காக எழுதுகிறேன் என்பது எனக்கே புரியவில்லை. சில சமயங்களில் முழு நாளும் நன்றாக கடத்தியபின் உறங்கப் போகும் முன் ஏதோ ஒரு கனம் மனதில் இறங்குகிறது. 


சில நொடிகளில் வாழ்க்கையில் இதுவரை எடுத்த அனைத்து முடிவுகளும் தவறு என்று தோன்றுகிறது. இந்த நொடியில் வாழ்க்கையையே தொலைத்து விட்டது போல் எண்ணங்கள் உதிக்கிறது. என் வயதில் என் நண்பர்கள் தத்தம் கனவுகளை நோக்கி பயணிக்கிறார்கள். நினைத்ததை செய்கிறார்கள். என்னால் அதை செய்ய முடியாதது என்னை மேலும் சோர்வடைய செய்கிறது. மனதளவில்.

எல்லாவற்றுக்கும் என்னையன்றி வேறொருவரும் காரணமாக இருக்க முடியாது. என் நிலையில் நான் என்றுமே தீவிரமாக இல்லாதது தான் என் பெரிய தவறு என்று எனக்கு எப்போதும் தோன்றுகிறது. நான் இதுவரை செய்த மமுயற்சிகள் அனைத்தும் பிரயோஜனமற்று கிடக்கிறது.

இது மிகப்பெரிய உளவியல் சிக்கல் ஒன்றும் அல்ல. எனக்கும் கீழே கோடி பேர் இருக்கக் கூடும். அவர்கள் பிரச்சனைகளோடு என்னுடையதை ஒப்பிட்டுப் பார்த்தால் துச்சமாகத் தெரியும். அனால் என் பிரச்சனை, என் சிக்கல்கள் என்னை மட்டுமே பாதிப்பவை.

நடு இரவு தாண்டி இருக்கும் இந்த ஒரு அமைதி என்னை வெகுவாக ஈர்க்கிறது. இந்த அமைதியும் தனிமையும் தரும் ஒரு நிறைவு வேறெங்கேயும் காண முடியாத ஒன்று என்று எனக்குப் படுகிறது. தனிமையில் என் சிந்தனைகள் உரக்கமாக ஒலிக்கின்றன.

இதனால்தான் தனிமையை பலரும் வெறுக்கின்றனரோ? தன் சிந்தனைகளின் தீவிரத்தை தாளமுடியாது அது தன்னை மெல்ல மெல்ல ஆட்கொள்வதின் மூலம் ஏதோ ஒரு பயம் தொற்றிக் கொள்கிறதோ? எனக்கு அத்தகைய பயம் என்றுமே இருந்ததில்லை.

தனிமையில் நம் நிஜ சொரூபம் தெரிகிறது. அந்த நேரங்களில் மட்டுமே ஒரு மனிதன் தனக்கென வாழ்கிறான். வாழ்கையை திறந்த புத்தமாக வைத்து வாழ்பவர்கள் பெரும்பாலும் தங்களின் அகத்தை உள்ளுணர்வுகளை அடைத்து விட்டுதான் வாழ்கிறார்களோ? அப்படிப்பட்ட வாழ்வின் உண்மையான அர்த்தம் தான் என்ன?

இந்த குழப்பங்களோடு என்னால் சமநிலை கொண்டு இருக்க முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்கள் எது கேட்டாலும் சரியான பதில் தரத் தோன்றவில்லை. சில நேரங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதே புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இந்த தருணத்தில் சிந்தனை எல்லாவற்றையும் முடக்கி மங்கச் செய்கிறது.

இது ஒரு வெற்றுப் புலம்பல்தான். என் உள்ளுணர்வுகளின் வெளியேற்றத்திற்கு இந்த இணைய எழுத்துருக்கள் எந்த அளவு ஞாயம் செய்யக்கூடும் என்பதே எனக்கு புதிர்தான். ஆனால் இது எனக்கு அவசியமானது. ஆழ்மனதிலிருந்து வெளியேறுவதை ஐம்புலன்கள் மூலம் மீண்டும் மனதிற்கே அளிக்கிறேன். அறிவியல் மொழியில் - ஆக்கப்பூர்வமான பின்னூட்டம்.

அதாவது positive feedback. இதன் செயல்பாட்டை நான் control systems என்னும் பாடம் படிக்கும்போதுதான் உணர்ந்து கொண்டேன். பொதுவாக இத்தகைய பின்னூட்ட செயல்முறை இல்லாத எந்த ஒரு கருவியும் அல்ல ஒரு இயந்திர அமைப்பும் நிலையான சீரான செயல்பாடோடு இயங்க முடியாது என்பதே அது. அந்த வகையில் இந்த எழுத்தும் கூட எனக்கு அதை செய்வதாகவே நினைக்கிறேன்.

உணர்வுகளை நிர்வாணமாக்குவதன் மூலம் அதை உதாசீனப் படுத்தவில்லை. அதன் உணமையான உருவத்தை வெளிக்கொணர்கிறேன். அதன் உண்மை உருவினை எவ்வித மாற்றமோ திருத்தலோ அன்றி மனமார ஏற்றுக் கொள்கிறேன். எனக்குள் ஏற்பட்ட இந்த உளச் சோர்வுக்கு இது மட்டுமே மருந்தாக இருந்தால் நல்லது. இந்த நொடியில் நான் எந்த சங்கிலியிலும் பிடிபடாமல் இருப்பதாக உணர்கிறேன். நாளை எழுந்ததும் நிதர்சன வாழ்வு என்னை உதாசீனப் படுத்தத் தொடங்கிவிடும். அதுவரை உறக்கதிலேனும் ஒரு நிம்மதி கிடைக்கட்டும்.