Sunday, January 31

மூன்று பாடல்கள்

சங்கீதமென்பது மொழிகளைக் கடந்தது என்பதை நாம் எப்போதும் கேட்பதுண்டு. அது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே இசையின் அழகை ரசிக்க முடியும். நாம் சில பாடல்களை இசைக்காக மட்டுமே கேட்பதுண்டு. சில வரிகளுக்காக. சில பாடகருக்காக.

எத்தனை கோடி காரணங்கள் இருப்பினும் நாம் ரசிப்பது இசையென்ற அக்கலை வடிவத்தை மட்டுமே. 


அற்புதமான பாடல்கள் என்றுமே எல்லாம் சேர்ந்த பல்லிசை வடிவாமாக ஒலிப்பதுண்டு. எல்லா வாத்தியக் கருவிகளின் சங்கமத்தில், அதில் குழைந்து திளையும் குரலோடு ஒன்றிச்செல்லும் வரிகளுடன் இசை ஒலிக்கும்போது நம் புற உணர்வுகளை மட்டும் தொடாது அகத்தில் சென்று ஆழ்மனதை எட்டும். அந்நேரத்தில் தன்னிலை இழந்து அதோடு கலந்திருப்போம்.

அழுவதும், நகைப்பதும், அகம்திறந்து புறமொன்றி ஒலியுடன் இழைவதும் என எதுவென்றாலும் நம்மை அம்மகோன்னத நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய பாடல்கள் கணக்கிலடங்கா. அவ்வகையில் வெவ்வேறு தருணங்களில் என்னை நெகிழ வைத்த மூன்று பாடல்கள் கீழே வருமாறு:


1.தில் சேடு கோயி ஏசா நக்மா

ராஷ்ட்ரபாஷாவில் என் ஹிந்தி படிப்பு நின்றதால்தானோ என்னவோ எனக்கு ஹிந்தி சினிமாவிலோ பாடல்களிலோ பெரிய ஈடுபாடு இருந்தது கிடையாது. டி.ஜே நைட் என்ற பேரில் ஒரே தொகுப்பில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஹிந்தி பாடல்களை நாராசமாக அலறவிட்டு கேட்டதைத் தவிர்த்தால் சொற்பமே எஞ்சும். ஆனால் என் தந்தை, தாய் மற்றும் இன்ன பிற உறவினர்களின் தாக்கத்தில் பழைய ஹிந்தி பாடல்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அப்படி கேட்ட பாடுதான் "தில் சேடு கோயி ஏசா நக்மா". இந்த பாடலை சோகமாக இருக்கும்போது எப்போதும் நான் கேட்பதுண்டு. தொடக்கத்தில் வரும் பியானோ இசையிலிருந்து லதா மங்கேஷ்கரின் குரலில் இந்த பாடல் நீள நீள, அடித்தொண்டையை இறுக்கிக் கடித்துக் கொண்டிருந்த சோகம் அனைத்தும் பீறிட்டு எழுந்து விழிகளை குளமாக்கும். ஏன் என்னும் ஆலோசனைக்கு நான் இன்னும் செல்லவில்லை. செல்ல விருப்பமும் இல்லை.
2. திருவாரன்முள கிருஷ்ணா

"உயிரே இல்லாத பாட்டு" என்று என் அம்மா பல சமயங்களில் கூறுவதுண்டு. அதன் பொருளைக் கேட்டால் "அதெல்லாம் சொல்ல முடியாது. கேட்டாலே புரிஞ்சிடும்" என்று கூறுவார். ஆனால் உயிருள்ள ஒரு பாடல் என்ன என்பதை தெரிந்து கொண்டால் பிற உயிரில்லாத பாடல்களை நம்மால் எளிதில் பிரித்துக் கூற முடியும். திருவாரன்முள கிருஷ்ணா என்று சித்ரா பாடும் இப்பாட்டு உயிருள்ள பாட்டிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. ஆரன்முள கோவிலில் வீற்றிருக்கும் கண்ணைப் பற்றி பாடும் இப்பாட்டு கிட்டத் தட்ட ஒரு தாய் தன் இளம் வயது மகனைப் பார்த்துப் பாடும் தோரணையில் அமைந்திருக்கிறது. ஒரு தாய் ஏங்கி ஏங்கி தன் குழந்தையைப் பார்த்து, அவன் அழகை அணு அணுவாக ரசித்து, அந்த தூய்மையான முகத்தை கண்ட மாத்திரத்தில் எல்லாம் மறந்து தன் குழந்தையை கொஞ்சிப் பாடினால் எப்படி இருக்குமோ அத்தகைய ஒரு காட்சியை தன்  குரலால் மட்டுமே நம் கண் முன் நிறுத்துகிறார் சித்ரா. அதிலும் இப்பாடலில் வருகின்ற "என்னே மறக்குந்நென்  துக்கம் மறக்குந்நு எல்லாம்  மறக்குந்நு ஞான்" என்ற வரி, சந்தத்திற்கு ஏற்றாற்போன்ற சொற்கள் அமைந்த விதம், தன்னை மறந்த பின் தன்னையும் விஞ்சியிருக்கும் துக்கங்களையும் மறந்து எல்லாம் மறந்து இன்புறும் ஒரு தாய் என அழகின் மெருகேற்றல் அதன் உச்சத்தைத் தொடுகிறது. இந்த அற்புதமான உணர்வை வார்த்தைகளைக் கொண்டு வர்ணிப்பதை விட அதை கேட்டு மகிழ்வதுதான் நியாயம்.

3. ஆறுமுகமான பொருள்

என் அப்பாவின் சகோதரிகளென எனக்கு ஐந்து அத்தைமார்கள். என் அப்பாவிற்கு ஒரே ஒரு அண்ணா. அவருக்கு குழந்தையில்லை. என் அப்பாவிற்கு நான் பிறந்தபோது வம்ச வாரிசு என்ற ரீதியில் என்னை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என் அத்தைகள். இப்போதும் எல்லோருக்கும் என் மேல் கொள்ளைப் பிரியம். நான் தொட்டிலில் இருக்கும்போது என்னை தூங்க வைப்பதற்காக "ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தாய் ... அழகன் இவன் முருகன் இனிய பெயர் கொண்டாய்" என்ற பாட்டை பாடுவார்கள் என என் பாட்டியும் அம்மாவும் அடிக்கடி சொல்லி கேட்டதுண்டு. எப்போது இந்த பாட்டைக் கேட்டாலும் என் ஐந்து அத்தைகள் ஒருமித்து பாடுவது மட்டுமே என் கற்பனையில் ஓடும். நெடுநாள் கழித்து ஏதோ ஒரு சந்தர்பத்தில் என் குழந்தைப் பருவத்தை பற்றி பல கதைகள் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இந்த பாட்டினை பற்றி பேசலானார்கள். அப்படியே ஐவரும் எதேச்சையாக அந்த பாட்டை மீண்டும் பாட அதை கேட்டுகொண்டே உறங்கியபோது என்னை அறியாமல் கண்களில் நீர் கோர்த்து தேங்கிக் கொண்டிருந்தது. தூய்மையான அன்பை எதிர்கொண்டதின் விளைவாக வெளியேறும் ஒப்பற்ற ஆனந்தத்தின் கண்ணீர் அது.இதைப் போலவே நீங்கள் ஏதாவது ஒரு பாடலைக் கேட்கும்போது உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.