Thursday, February 4

முதற்கனலில் காய்ந்த லெப்பை

ஏற்கனவே எழுதியிருந்தது போல் குற்றமும் தண்டனையும் பற்றி நீட்டி சுழற்றி எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். இடைப்பட்ட சமயத்தில் சிறுசேரி - தி நகர் பேருந்து பிரயாணத்தின் போது இரண்டு புத்தகங்கள் படித்து முடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவை நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் மற்றும் கீரனூர் ஜாகீர் ராஜாவின் கருத்த லெப்பை.


என்பிலதனை படித்த பின் எனக்குள் எழுந்த எண்ணம் அது எவ்வகையில் குற்றமும் தண்டனையும் நாவலோடு ஒத்துப் போகிறது என்பதே. கதை அமைப்பும் களமும் முற்றிலும் வித்தியாசமானது எனினும் இரண்டு நாவல்களிலும் இருக்கும் நாயகர்களும் அவர்கள் மன நிலையும் கிட்டத் தட்ட ஒரே போல்தான் இருக்கிறது.

இரண்டு நாவல்களும் தன் மையக் கதாப்பத்திரத்தின் ஆழ் மனது உணர்வுகளை நுண்ணிய நோக்கோடு விவரிக்கிறது. இருவரும் விளிம்பு நிலையில் இருக்கும் சிந்தனை முதிர்ச்சி பெறாத இளைஞர்கள். சமூகத்திற்கு எதிராக சதா சர்வ காலமும் அறைகூவல் விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களைக் காட்டிலும் தாங்கள் மேன்மையானவர்கள் என்று காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள். இந்த எண்ணங்கள் ராஸகோல்னிகோவை பிறழ்வு நிலைக்கு தள்ளுகிறது. ஆனால் சுடலையாண்டியிடம் அவன் மனதிற்குள்ளேயே புதைந்து அழிகிறது.

நான் படித்த வரையில் குற்றமும் தண்டனையும் ஒரு பிராயம் அடைதல் என்ற ரீதியில் யாருமே சித்தரிக்கவில்லை என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. பிராயமடைதல் எனில் என்ன? தெளிவற்ற நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தான் காண்பதைக் கொண்டும், தனக்கு நிகழ்வதைக் கொண்டும் வாழ்க்கையைப் பற்றிய அவதானங்களுக்கு வருவது பிராயமடைதல் என்று பொருள் கொள்ளலாம். அவ்வகையில் பார்க்கும்போது குற்றமும் தண்டனையும் நிச்சயமாக ஒரு coming of age ஸ்டோரி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


நாஞ்சில் நாடன்

அதே போலதான் என்பிலதனை வெயில் காயும் நாவலும். நேற்றுதான் படித்து முடித்தேன் என்றாலும் படித்தவுடனே அதைப் பற்றி எழுத வேண்டும் என்றிருந்தது. எழுதி முடித்துவிட்டேன். ஞாயிறு மாலை 4 மணிக்கு பதிவேறும். அது என்னவோ அப்படி செய்து செய்து பழகிவிட்டது. நாஞ்சில் சூழல் விவரணைகளுக்காக பயன்படுத்தும் உருவகங்களாகட்டும், உணர்வு விவரிப்புகளுக்காக உபயோகிக்கும் உபமேயங்களாகட்டும் என்னை மிகவும் கவர்ந்தது. சொல்லாடலைக் கொண்டே வாசகனை கட்டுப்படுத்தும் திறன் லா.ச.ரா வுக்கு அடுத்து நான் நாஞ்சில் நாடனிடம் தான் கண்டேன். இது போன்ற நாவல்கள் படிக்கும்போது என்ன ஒரு உன்னத அனுபவம் எழுகிறது.


கீரனூர் ஜாகீர் ராஜா

கருத்த லெப்பையை சமீபத்தில் நடந்து முடிந்த பொங்கல் சிறப்புப் புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கினேன். மிக மிக சிறிய நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். குறுநாவல் என்று கூட சொல்ல முடியாது. படித்த மாத்திரத்தில் நாவலில் தனித்தனி படிம உருவங்கள் மட்டுமே எஞ்சியது. நாவலில் கதை என்று ஒன்று கிடையாது. ஆனால் ராவுத்தர் லெப்பை என்ற இரண்டு இஸ்லாமிய சமூகங்களைப் பற்றி எளிமையான விவரணைகளும், அவர்களுக்கிடையே இருக்கும் உட்பூசல்களும் பெரும்பான்மையான இடங்களில் காணப்படுகின்றன. கருத்த லெப்பையும் நாம் இதற்கு முன்னே கண்ட நாயகர்கள் போல முதிச்சியடையாதுதான் இருக்கிறான். ஆனால் வெறும் பருவமெய்தல் என்ற நோக்கல்லாது இந்நாவலில் இருக்கும் மாய எதார்த்தம் இதை வேறொரு தளத்தில் கொண்டு செல்கிறது. இப்படைப்பு எனக்குள் எத்தகைய உணர்வை ஏற்படுத்தியது என்று கூற முடியாது எனினும் என் நெஞ்சில் இது வரைந்த சித்திரங்கள் அப்படியே திட்டு திட்டாக இருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்தை மேலும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது. விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.


பிரபஞ்சன்

தற்போது நூலகத்திலிருந்து பிரபஞ்சனின் வானம் வசப்படும் எடுத்திருக்கிறேன். இதுவும் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல்தான். எனக்கென்னவோ இந்த சாஹித்ய அகாடமி நாவல்கள் பெரும்பாலும் பிடிப்பதில்லை. எழுத்தாளரை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொண்டு தரப்படும் விருதாக மாறி வருகிறது சாஹித்ய அகாடமி. லா.ச.ரா வுக்கு கூட சிந்தா நதிக்கு கிடைத்த பொது அது அன்றைய சூழலில் சமீபமாக வெளிவந்திருந்த படைப்பு என்ற ஒரே காரணத்திற்காக தரப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையேல் அவரின் புத்ர, கழுகு, அபிதா இவைதான் விருதுக்குரிய படைப்புகளாக இருந்திருக்கக் கூடும். சரி புத்தகத்தை எடுத்தாயிற்று. இனி என்ன வியாக்கியானம் செய்து என்ன பிரயோஜனம். படிக்க துவங்கிவிட்டேன். விரைவில் எழுதுகிறேன்.

வெண்முரசு வரிசையையும் கூடவே படித்து வருகிறேன். முதல் நாவலான முதற்கனலை முடித்து இரண்டாம் நாவலான மழைப்பாடலை துவங்கியுள்ளேன். முதற்கனல் துவங்கியபோது அதன் மொழி அடர்த்தி என்னை வெகுவாக அந்நியப்படுத்தியது. ஒரு காரணத்தோடுதான் இந்த அமைப்பை நாவல் கொண்டுள்ளது என்றும், வாசகர்கள் சற்றே முயற்சியெடுத்து படிக்க வேண்டும் என்பதையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். சிக்கலென்னவென்றால் இது முற்றிலும் தொன்மையான ஒரு நோக்கில் அமைக்கப் பட்டதுதான். குறிப்பாக முதற்கனலின் முதல் பகுதியை படிக்கும்போது அதில் உலகத்தின் பிறப்பைப் பற்றிய விளக்கங்கள் கிட்டத் தட்ட வேத உபநிடத மொழி நடையை கொண்டிருப்பது போன்ற உணர்வு. வேதங்களுக்கு இருக்கும் தனிச் சிறப்பு வாக்கியங்களின் பொருளில் மட்டுமல்ல சொற்களின் த்வனியிலும் இருக்கிறது. ஆனால் நவீன மொழியில் அது சற்றே திகட்டுகிறது.


ஜெயமோகன்

மழைப்பாடல் இப்போது 12 பாகங்கள் முடித்திருக்கிறேன். முதற்கனலைக் காட்டிலும் இந்தப் பகுதியின் பேசுபொருள் மிகத் தெளிவாக உள்ளது. மழைப்பாடலில் இருக்கும் நுண் அரசியல் விவாதங்களும், சூழல் சித்தரிப்புகளும் பிரமிப்பூட்டுகிறது. இவ்வளவு ஆழமான விளக்கமான காட்சி சித்தரிப்புகளை வேறெந்த நாவலிலும் இதுவரையில் நான் கண்டதில்லை. அதுவும் முதற்கனலைக் காட்டிலும் நடையில் ஒரு வேகம் இருக்கிறது. தனித் தனித் கதைகளாக இல்லாமல் ஒரே தொடர்ச்சியில் வருவதால் இப்படி தோன்றுகிறதோ? தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் படிக்க வேண்டும். ஏற்கனவே படிக்கத் துவங்கியதில் தாமதம். இனி நேர விரயம் கூடவே கூடாது. முதற்கனலைப் பற்றியும் எழுதலாமா? ஏற்கனவே எக்கச்செக்க பேர் எழுதியதைத் தாண்டி என்ன எழுத முடியும்? குற்றமும் தண்டனையும் முடிந்தபின் பார்க்கலாம்.