Saturday, February 6

இன்பத்தின் நிறம் பழுப்பு

நான் படித்தது, வளர்ந்தது அனைத்தும் சென்னையின் புற நகர் பகுதியான நங்கநல்லூரில். 1990 களில் துவங்கி 2000 த்தின்  முன்பகுதி வரை எனது வளர்ப்பு காலங்கள் அனைத்தும் அங்கேதான் கழிந்தது. நங்கநல்லூரில் எனக்குத் தெரிந்தவரை இருக்கும் ஒரே நூலகம் (இன்றும் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்) ரெங்கா வாடகை நூலகம். என் நண்பன் இந்த நூலகத்தில்  அடிக்கடி சென்று புத்தகம் எடுப்பதை பார்த்து  எனக்கும் அதில் ஓர் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அம்மாவிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு சேர்ந்தேன். எனக்குத் தரப்பட்ட உறுப்பினர் எண் 5000.


நான் நூலகத்தில் சேர்ந்தது ஒரு வீம்புக்குத் தான். அதுவரை தினமலர் சிறுவர் மலர் படித்தது மட்டுமே என் மொத்த வாசிப்பனுபவம். அதன் பிறகு பள்ளியில் library என்ற ஒரு வகுப்பு இருக்கும்.அந்த நேரத்தில்தான் பெரும்பாலும் வீட்டுப் பாடங்கள் செய்வோம். சில சமயங்களில் எங்களுக்கு புத்தகங்கள் தரப்படும். அமர் சித்ர கதா இல்லையேல் டிங்கிள் இதைத் தவிர வேறெதையும் தர மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் புத்தகம் வாசிப்பதை என் நண்பன் கோவி எனக்கு அறிமுகம் செய்தான். அவன் நூலகத்திற்கு என்னை இட்டுச் சென்ற போது மலை மலையாய் புத்தகம் குவிந்திருந்ததை கண்டு வாய் பிளந்து நின்றேன். எனக்கு அந்த இடத்திலேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியது.

நான் உறுப்பினனான ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் கோவி எடுத்த புத்தகங்களை மட்டுமே எடுப்பது வழக்கம். ஏனெனில் எனக்கு எந்த புத்தகம் எடுக்க வேண்டும் என்பதே தெரியாது. அவன் ஹார்டி பாயிஸ் புத்தங்களை தான் அதி தீவிரமாக படிப்பான். அதையேதான் நானும் எடுப்பேன். எடுத்த எடுப்பிலேயே சலிப்பு தட்டியது. இருக்கும் கொஞ்ச நஞ்ச பற்றும் போய் விடுமோ என்றே நினைக்கத் தோன்றியது. அந்த நேரத்தில்தான் என் அம்மா தமிழ் புத்தகங்களை எடுத்து படிக்கச் சொன்னார். என் பள்ளியில் அதுவரை எவரும் தமிழ் புத்தகங்கள் படித்து நான் பார்த்ததில்லை. அதனால் அதை எடுத்துப் படித்தால் வகுப்பில் கொஞ்சம் தனித்து தெரிவோம் என்று நினைத்தபோது எனக்கு ஆர்வம் கூடியது. அந்த ஆர்வம் என்னை இட்டுச் சென்றது பொன்னியின் செல்வனிடத்தில்.

பல பேரின் தமிழ் வாசிப்பு ஆரம்பமாவது கல்கி நாவல்களில் என்று சொன்னால் மிகையாகாது. அது போன்ற ராஜா காலக் கதை எழுதிய சாண்டில்யனின் நாவல்களும் சிலருக்கு வாசிப்பு அறிமுகமாக இருந்திருக்கக் கூடும். நானும் கல்கியின் முப்பெரும் நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவினை மாங்கு மாங்கு என்று படித்து முடித்தேன். முடித்த பிறகு அடுத்தது என்ன என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது எனக்கு அதற்கான பதில் தெரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் தெரியாத நிலை. என் மனோ நிலைக்கு ஏற்ப ஒத்திசைக்கும் கதைகள் கிடைக்காததால் பல காலம் எதையுமே வாசிக்காமல் இருந்தேன். நெடுநாட்கள் கழித்து தற்செயலாக எனக்கு லா.ச.ரா வின் கழுகு கிடைக்காவிடில் என் வாசிப்பே அத்தோடு முடிவுற்றிருக்கும்.

புத்தக வாசகனாக இருக்கும் எவ்வோருவனுக்கும் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை இது. எதிர்பாராத விதமாக ஏதாவது விபத்து நடந்தாலே ஒழிய அவன் இலக்கிய வாசிப்புக்குள் நுழைய முடியாது. அதுவும் என்னைப் போல் அச்சமயத்தில் சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவனுக்கு அதைத் தவிர வேறு சந்தர்ப்பம் அறவே இருந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். இன்றும் அந்தப் பிரச்சனைகள் பலருக்கு உண்டு. அதுவும் தமிழ் வாசகனுக்கு எக்கச் செக்கமாகவே இருப்பதுண்டு. இந்தப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டே இலக்கிய அறிமுக நூல்கள் எழுதப் படுகின்றன. அந்த நூல்களின் மூலம் எழுத்தாளர்களின் அறிமுகமும் அவர்களின் படைப்புலக அறிமுகமும் நமக்குக் கிடைக்கிறது.

பொதுவாக இலக்கிய அறிமுக நூல்கள் நடுநிலைமையுடன் பகுப்பாய்ந்து எழுதப்படும் நூல்களாக இருக்கக் கடவது. நூலாசிரியரின் நோக்கில் வெவ்வேறு படைப்பாளிகளை கண்டு, அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை கணக்கில் கொண்டு அதன் மூலம் அவர் படைப்புகளின் நிறை குறைகளை பற்றிய அவதானிப்புகளுக்கு வாசகன் வர வேண்டும் என்ற நோக்குடன் எழுதப்படும் நூல்கள் இவை. எனவே இந்நூல்களின் மூலம் தெளிவடைவதற்கு குறைந்த பட்ச வாசிப்பெனும் அவசியமாகிறது. ஆனால் இலக்கியத்தின் அரிச்சுவடி அறியாத ஒரு எளிய வாசகனுக்கு இத்தகைய நூல்கள் எவ்வித பயன் தரும் என்பது கேள்விக்குரியது.

அப்படிப்பட்ட ஒரு கடை நிலை வாசகனின் மனதிற்கேற்ப இலக்கிய கதவுகளைத் திறப்பதுதான் சாரு நிவேதிதா தினமணி ஜங்கஷனில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களின் முக்கியப் பணி. பழுப்பு நிறப் பக்கங்கள் துவங்கிய காலம் முதல் அதை வாசித்து வரும் எனக்கு அது என் இலக்கிய வாசிப்பை மாற்றி அமைத்ததைப் பற்றி சொல்லி மாளாது. ஏனெனில் பழுப்பு நிறப் பக்கங்கள் இலக்கியத்திற்கு உள்ளிழுப்பது ஒரு தேர்ந்த ஆய்வாளனையோ, திறமையான வாசகனையோ அல்ல - எளிமையான ரசிகனை. அத்தகைய ரசிகத் தன்மையை கருத்தில் கொண்டே எல்லா பத்திகளையும் சாரு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா - கேலிச்சித்திரம்

சரி இதற்கும் மற்ற இலக்கிய நூல்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களைப் பற்றி ஒரு கட்டுரையை தேர்ந்த கிரிக்கெட் நிபுணர் ஒருவர் எழுதுகிறார். அதே இந்திய வீரர்களை பற்றி அவர் அவர் ரசிகர்கள் தனித்தனியாக தத்தம் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். இரண்டிற்கும் எவ்வகையான வேறுபாடு இருக்கும்? முதல் பகுதியில் கறாரான மதிப்பீடுகளுடன் நமக்கு ஒரு கட்டுரை கிடைக்கும். அது முற்றிலும் வாசகனின் கள அறிவை மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாமாவை உணர்ச்சிப் பதிவுகள். அது முழுக்க முழுக்க தனி மனித உணர்வுகளைச் சார்ந்தது. அதில் இருக்கும் மித மிஞ்சிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், அந்த கொந்தளிப்புகளில் இருக்கும் உண்மைத்தன்மையும் படித்த மாத்திரத்தில் நம் மனதில் பதிந்துவிடும். பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் வகையறா.

இடைவெளி சம்பத்

அது உங்களிடம் கோருவது உங்கள் இலக்கிய நுண்ணறிவு சமாச்சாரங்களை அல்ல. வாசிப்பிற்கான அடிப்படை ஆர்வத்தை மட்டுமே. நீங்கள் இதுவரை வணிக இலக்கியங்களிலிருக்கும்  குமுதவிகடகுங்குமத்தனத்தை மட்டுமே படித்தவராய் இருக்கலாம், முகநூல் மற்றும் கீச்சுத் தமிழ் விர்ப்பன்னறாய் இருக்கலாம், பிற மொழியிலிருந்து தமிழுக்கு வரத் துடிப்பவராய் இருக்கலாம், இல்லை வாசிக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கலாம், எந்த ஒரு நிலையிலும் உங்களை பழுப்பு நிறப் பக்கங்கள் அந்நியப் படுத்தாது. ஏனெனில் அது உங்களுக்கு காட்டும் தரிசனம் அத்தகையது. ஒரு உதாரணத்திற்கு சம்பத்தின் இடைவெளி பற்றி சாரு எழுதுவதை கவனிக்கவும்


சம்பத் எழுதிய அனுபவம், மரணம். வேறு யாருடைய மரணமோ அல்ல; அவருடைய மரணம். தன்னுடைய மரணத்தையே அணுஅணுவாக வாழ்ந்து, அதனோடு உரையாடி, தர்க்கித்து, பிணங்கி, பயந்து, மோதி, சரணடைந்து அந்த அனுபவத்தை எல்லாம் தொகுத்து ஒரு மகத்தான கலைப்படைப்பாக உருவாக்கியிருக்கிறார் சம்பத். மரணத்துடனான அவரது உரையாடல் முடியும் தருணத்தில் - இடைவெளி நாவலின் அச்சுப் பிரதியில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் – சம்பத் மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார். அந்த வகையில் சம்பத்தின் இடைவெளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் ஆல்பெர் கம்யூவின் அந்நியனை விட உலக அளவில் பெரிதும் பேசப்படும்

 இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பத்தியின் கடைசி வரியை. அந்த வரியில் இருக்கும் தர்க்கப் பூர்வமாக நிரூபிக்கப் பட முடியாத ஒரு மிகையுணர்வை தான் நாம் பல கட்டுரைகளில் காண முடியும். இந்த மிகையுணர்வு ஒரு இலக்கியவாதியின் கண்ணோட்டத்தில் எழுதப் படுவதல்ல. இலக்கிய ரசிகனின் பதிவாகவே தோன்றுகிறது. நடுநிலையான விமர்சனம் படித்த பின் படம் பார்ப்பதுண்டு. ஆனால் அதே நேரத்தில் நமக்குத் தெரிந்த ஒருவர் ஒரு படத்தை பரிந்துரை செய்தால் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்குள் வந்துவிடும். இதில் சாரு விமரிசன அவதாரத்தைப் பூணாமல் நமக்குத் தெரிந்த சக ரசிகராவே தன்னை காட்டிக் கொண்டு பரிந்துரைக்கிறார்.

எம்.வி வெங்கட்ராம்

பழுப்பு நிறப் பக்கங்கள் படித்தபோது என்னை வெகுவாக ஈர்த்த/ பாதித்த கட்டுரை என்று சொல்லப் போனால் அது காதுகள் பற்றி அவர் எழுதியதுதான். காதுகள் என்னை சமநிலை இழக்கச் செய்த ஒரு நாவல். ஒரு விளிம்பு நிலை மனிதனின் அகப் பிறழ்வுகளை சித்தரிக்கும் ஒப்பற்ற இலக்கியப் படைப்பு. அதுவரை எம்.வி வெங்கட்ராம் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதே தெரியாது. அவர் கும்பகோண வாசி என்பதையும், தி.ஜானகிராமனின் நண்பர் என்பதையும் படித்த பின்னர் அப்படி ஒரு ஆள் காதுகளை எழுதியிருக்கக் கூடுமா என்று பிரமிப்பில் ஆழ்ந்திருந்தேன். இதில் சாரு கடைசியாக காதுகள் எவ்வகையில்  பின் நவீனத்துவ கோட்பாடுகளுடன் ஒத்துப் போகிறது என்று எழுதியதைக் கண்டதும் அதை படிக்காமல் மறுவேலை செய்ய முடியாத அளவிற்கு நிலையற்று அலைந்து கொண்டிருந்தேன். இதுதான் இதன் வெற்றி என்று நான் கருதுகிறேன்.

நல்ல விஷயங்களெல்லாம் கூறினாலும் இதில் சில நெருடல்கள் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சில ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் அது அமைக்கப் பட்ட விதத்தினாலும், அது எடுத்துக் கொள்ளும் பேசுபொருளினாலும் சற்றும் நிறைவளிக்கவில்லை. குறிப்பாக தஞ்சை பிரகாஷ் பற்றி வருகின்ற கட்டுரைகளின் 5 பாகங்களிலும் அதன் வடிவம் என்னை வெகுவாக குழப்பியது. பிரயத்தனப் பட்டு படித்தாலும் சில இடங்களில் என்ன சொல்லப் படுகிறது என்றே புரியாத நிலை உருவாகிறது. அதே போல் லா.ச.ரா வின் பகுதியையும் கூறலாம். லா.ச.ரா என் ஆதர்ச எழுத்தாளர் என்ற ஒரு சுயநல உணர்வு எனக்குள் இருந்தாலும் அவரைப் பற்றி எழுதிய பத்தி கொஞ்சம் தட்டையாக இருந்தது போலவே எனக்குத் தோன்றியது. இந்தப் பத்தியைக் காட்டிலும் சாரு லா.ச.ரா நூற்றாண்டு விழாவில் பேசிய பேச்சு சிறப்பாக இருந்தது என்பது என் கருத்து.

பழுப்பு நிறப் பக்கங்களின் பலம் என்று கூறியவற்றையே அதன் பலவீனமாகவும் கூற முடியும். ஏனெனில் இதன் முக்கிய எண்ணம் வாசகனை வாசிக்க வைப்பதே. ஆனால் வாசித்து முடித்த பின் ஏற்படும் அனுபவங்களுக்கு இந்த கட்டுரைத் தொகுப்பு உதவக் கூடியதாக தோன்றவில்லை. ஏனெனில் ஏற்கனவே பரிச்சயமுள்ள எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்கள் படைப்புகளைப் பற்றியும் படிக்கும் போது இந்த கட்டுரைகள் வெறும் தகவல் திரட்டிகள் மட்டும்தானோ என்ற எண்ணம் எழுகிறது. சில கட்டுரைகளில் இருக்கும் பேசுபொருள்கள் மையக் கருத்திற்கு சம்பந்தமில்லாததுபோல் தோன்றுகிறது. இதைத் தான் தி.ஜானகிராமனின் கட்டுரைகளில் நான் உணர்ந்தேன். ஏற்கனவே கூறியது போல லா.ச.ரா வின் எழுத்தை விரும்பி படிக்கும் எனக்கு அவரைப் பற்றியோ அவர் எழுத்தைப் பற்றியோ புதிதாகத் தெரிந்து கொள்வதற்கு இந்த கட்டுரைகளில் எந்த வித உதவியும் இல்லை. புதிய பார்வையோ, கோணமோ இல்லை.

ஆனால் தன் கடமை என்ன என்ற தெளிவுடன் இத்தொடரை எழுதிய சாரு இப்பணியை செவ்வென செய்கிறார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதை வாசிக்கும் எண்ணற்ற கோடி பேர்களில் ஒருவனாய், சற்றே புதிதாக இலக்கிய வெளிக்குள் நுழைந்திருக்கும் ஒரு புழுவாய் பழுப்பு நிறப் பக்கங்கள் என் சிந்தனைகளையும், கருத்தியல் நோக்குகளையும் மெருகேற்றியிருக்கிறது என ஐயம் திரிபற கூறுவேன். இதை கடமையாக செய்யும் சாரு நிவேதிதாவிற்கும், வெளியிடும் தினமணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

என்னைப் பொறுத்த வரையில் இந்த வரிசையில் அமைந்த சாலச் சிறந்த கட்டுரைகளென எனக்குத் தெரிவது: தி.ஜ. ரங்கநாதன், உ.வே.சா, அசோகமித்திரன், ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், சம்பத், எம்.வி வெங்கட்ராம், க.நா.சு,

நீங்கள் பழுப்பு நிறப் பக்கங்கள் படித்திருக்கிறீர்களா? அதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? கீழே கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.