Sunday, October 9

அவள்

எதிர்ப்பார்ப்பில் ஏங்கிக்கொண்டிருக்கும் அத்தருணம் எதிர்பாரா நேரத்தில் நிகழ்கையில், அந்த சர்பச்சீண்டலில் மனம் அதிர்வது ஏனோ? பன்னெடுங்காலமாய் பதுக்கியிருந்த எண்ணற்ற உணர்வுகள் முத்துக்கொதிப்பாய் வெடித்தெழுகிறது. துளையில் சாவி போட்டு வாயிலை திறந்தபோது மனதின் ஜன்னல்கள் அனிச்சையாக அடைத்துக் கொண்டது. மெல்லிய கோடுடன் இழைந்த வெள்ளை நிற முழுக்கை சட்டையுடன், சோஃபாவில் கைநீட்டி அமர்ந்து, புருவ மத்தியில் அழுந்திய நாசித்தண்டை சுருக்கி வரைந்த கோடுகளுடன், கண்களை குறுக்கி அவன் என்னை கண்டபோது, ஓலை வேய்ந்த கூரையின் துவாரங்களிலிருந்து குதித்த ஒளிப்பந்துகளாய் ஞாபகங்கள் பொட்டுப் பொட்டாய் உதிர்ந்தன.


காதலின் ஒப்பற்ற வெறியில், அதிவேக மூளை செயல்பாட்டில் முடிவெடுத்து அவனை கரம் பிடித்த நாள் மட்டும் தொண்டையில் வழிந்தோடிய வெல்லப்பாகைப் போல் இனித்தது. அந்தச் சமயத்தில் காலம் நின்று, செயலிழந்து, புதுமுகங்களை கண்ட குழந்தை போல வாய் பிளந்து நோக்கிக் கொண்டிருந்தது. எம்மிருவர் மத்தியில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த இடைவெளியில் தவழ்ந்த அந்த காலக் குழந்தையை  கட்டி அணைக்கையில், ஸ்தம்பித்திருந்த ஒரு உலகத்தின் காட்சித் திரையில்  வனைந்த வண்ண அருவங்களாய் இருவரும் குழைந்தோம். அன்று ஸ்பரிசித்து குளித்த அம்மோகத் தணல், இன்று கருகி துர்வாடை வீசி மனதில் கசந்தது.

பார்த்த மாத்திரத்தில், சற்று நேரம் பிடித்து எழுந்து நின்றான். தொலைகாட்சியில் ஏதோ நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. என்ன அது? ஏதோ ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள். யார் அவள்? எதற்கு அழுகிறாள்? அவன் ஏன் இதை பார்கிறான்? இதையா இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்? இல்லை பார்ப்பதைப் போல் வேறெதையேனும் அசை போட்டுக் கொண்டிருந்தானா? அவன் பார்வையில் காணும் காட்சிகளுடன், அவன் கண்ட காட்சிகளின் ஓலமும் சேர்ந்து கண்களின் வழியே பிளிறியது.

சோஃபாவை விட்டு நீங்கி மெல்ல வெளியே வந்தான். அவன் முழுத் தோற்றமும் தெரிந்தது. மணநாளில் கண்ட உருவம். அந்நாள் வீட்டுச்சுவரின் மூலையில் அசையா படமாக மங்கி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. முதலும் கடைசியுமாக கண்ட ஒரு உருவத்தின் மீள் தரிசனம். மாறிவிட்டானா? இருக்கக் கூடும். அதை நினைவு கூர்வது ஒரு பிரயாசையாக இருக்கிறது. முதுகுத் தண்டு புடைத்தெழுந்து உயரம் ஏறியதுபோல் உள்ளது. உடலும் சற்றே மெலிந்தார்பொல். மெலிந்திருக்கிறானா? இப்படித் தான் இருந்தானா?

கட்டுமஸ்து என்று சொல்ல முடியாது எனினும் நல்ல உறுதியான உடற்கட்டு. விரித்த தோள்களுடன், ஒட்டிய முட்டுக் கால்களுடன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நிற்பதுபோல் அவன் நிற்பதை கண்டவுடன் எனக்கு சிரிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் நிலைகுலையாமல் அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததில் பிரக்ஞையில் ஒரு சஞ்சலம். எங்களைப் பிரித்திருந்த அந்த மௌன வெளி, நுரை வியர்த்த ஆடைக்கடியில் பதுங்கியிருக்கும் பாலின் கனத்தை ஒத்திருந்தது. விடுபட்ட காலத்தின் ஒவ்வொரு நொடியும் அவன் கரத்தில் குவிந்திருப்பது போல் கைவிரல்களை இறுக்கி பிடித்து அவன் நின்று கொண்டிருந்ததை கண்டபோது, தன்னுள்ளே இருக்கும் குரூரங்களை என்னிடம் கூறாது புதைத்து அழிக்க நினைக்கிறானோ என்று தோன்றுகிறது.

எந்த தருணத்திற்காக இருவரும் காத்திருந்தோமோ, அது எத்தியபின் அதன் வீரியம் தாங்காத அரையில் செவி அடைத்துப் பொய் கண்களும் ஊமையாகியிருந்தது. வெற்றுப் பார்வையில் இருவருள் எதையோ தேடிக் கொண்டிருந்தோம். அந்தப் பார்வையும் அதனுள்ளே எதையோ தேடிக் கொண்டிருந்தது.

தேடலுள் தேடல்
அடியில்லா அந்தகாரக் குழியில்
இன்பங்களின் மின்மினிஜ்ஜோதியில் தெரிகிறது
ஆங்காங்கே தனித்து விடப்பட்ட காலத்தின் சுவடுகள்
அகச் சிலந்தி பின்னிய வலையில்
சிக்கிக் கொண்ட பூச்சிகளாய் சொற்கள்
தொனியிழந்து
பொருளிழந்து
அதனுள்ளே எங்களை இழந்து
திக்கற்று வீசும் அனல் காற்றில்
எஞ்சிய உயிர்தாதுக்களாய்
ஒருவரையொருவர்
புசித்துக் கொண்டிருந்தோம்.

பொறுமை தாளாமல் ஒரு உவர்ப்பு உள்ளிருந்து பீறிட்டெழ திறந்திருந்த படுக்கையறைக்குள் போய் கதவை அடைத்தேன். அலங்கார மேஜையின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்து அழ நினைத்தேன். அழுவதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் அறைதானே. படுக்கையறையில் தனிமை என்னும் நகைமுரண் மட்டுமே குடியிருந்தது. அந்த நகைமுரண் ஒன்றே என் வாழ்க்கையாய் இருந்தது. அந்தத் தனிமைக்கு சொந்தக் காரன் அவன். அரூபமாகத் தோன்றி, குவிக்கரங்களில் கவிந்து. அடிவயிற்றில் இறங்கி, மைதுனித்த அவன் நினைவுகள் இன்று பருவடிவம் கொண்டு கண் முன்னே தோன்ற அதை ஏற்க முடியாத மனம் வெடிக்கிறது. ஏன் இன்று?

இத்தனை வருடங்களில், இத்தனை யாமங்களில், தனிமைப் பெருவெளியில் அஃகுவஃகெனலில் வீணடித்த மணிக்கூருகளில் தோன்றாத அவன் இன்று தோன்றக் காரணம் என்ன? அதை ஏற்க ஏன் மனம் மறுக்கிறது. இது என் தவறா? தவறென்று உணர முடியாத தவறா? பிழை என்னிடத்திலா? தன்னுணர்வால் என்னையே குத்திக் கொள்ளும்படி செய்த அவனிடத்திலா? இத்தனை அலைகழிப்பிற்கு மத்தியில் நான் அலைந்து கொண்டிருக்க எவ்வித சலனமுமில்லாமல் அவன் இருந்தது எனக்கு திகைப்பூட்டியது.

மேஜை மேலிருந்த ஆடியில் என் பிம்பம் விழுந்ததில் எழுந்த ஒலி கொண்டு சுருதி மீட்டி நாணேற்றும் தம்புராக்களின் சப்தங்கள் ஆழ்கடலை கடையும் கடும் புயல் போல் அகோரமாக ஒலித்தது. ஆடியில் தெரிவது நானல்ல. என் நிழல். ஒளியின் காலடியில் இருக்கும் கனத்த நிழல். தொலைந்த என் உருவத்தின் ஒரு நிழல். காது மடலருகெ தீத்தியிருந்த வெண்மை, தேனை தலையில் கவிழ்த்ததுபோல் இப்போது தலை மயிரெங்கும் பரவி விட்டது. வழ வழப்பில் மிளிர்ந்து சிமிட்டும் சருமம் ஒளியிழந்து, காலத்தின் ரேகைகளை கண்களின் அடியில் வரைந்திருந்தது. இளமை, உடலின் வாளிப்பை விழுங்கி பெருகி, மனதிற்குள் மட்டும் ஒரு ஓரத்தில் தஞ்சம் புகுந்திருந்தது.

இதுதானா அவனை ஏமாற்றியது? என் உருவத்தில் நான் இல்லை என்று அவன் நினைத்தானோ? நான் எங்கேனும் என்னுள் இருக்கிறேனா? இல்லை இந்த ஆடித்துகள்கள் வீசியெறியும் ஒளிப்பிழை தான் நானா? புறத்தோற்றத்தின் நகலுடன் அகத்திலிருக்கும் காழ்புகளையும் சேர்த்து வீறுவதால்தான் இந்த அலங்கோலமா? நான் அழகில்லையா? இழந்த என் அழகின் அடையாளம் கூட என்னுள் இல்லையா? ஒருவேளை நான் அழகாக இருந்ததே இல்லையா? என் கண்களும் கூட என்னைப் பழித்து விட்டதா? என்னைப் பிடித்துக் கொள்ளாமல் தொலைத்து விட்டதா? விழி நரம்புகளில் படர்ந்த பாசியாய் தொலைந்து போன "நான்" அவனுக்கு அந்த விழிச் சங்கமத்தில் தெரியவில்லையா?

சில கணங்கள் முன் நிகழ்ந்த அந்த தருணத்தை புதிய நினைவலைகள் எம்பி அணைக்க கடந்த காலத்திலிருந்து ஒரு துளி சிதறி வேள்வித்தீயில் விழும் நெய்போல் சொட்ட அக்கினிக் கங்குகளாய் பழைய ஞாபகங்கள் கனன்று எழுந்தது. ரயிலின் சப்தத்தில், அர்த்தமற்ற அளவலாவல்களுக்கு இடையில் கடைசியாக நாங்கள் பார்த்துக் கொண்ட ஒரு தருணம். எத்தனை நேரம் அப்படி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தை மட்டும் ஒரு குப்பியில் அடைத்து சொட்டு சொட்டாக தினம் அருந்திக் கொண்டிருந்தேன். மணலடியில் காலப்புழு அரித்து நொதிந்த மதுவினப் பருகியதுபோல் நினைவுப் போதையில் திளைத்திருந்தேன். அந்த மகோன்னத மதமதப்பிலிருந்து விழித்தெழுந்து நிதர்சனத்தை எதிர் கொள்ளும் நேரம் வந்து விட்டது.

இனி இதுதான் வாழ்க்கை என்ற நிர்பந்தத்திற்குள் ஒரு இயந்திர வடிவத்தை பொருத்தி இயக்கிக் கொள்ள மட்டுமே சந்தர்பங்கள் எஞ்சி இருக்கிறது. வேனில் காலப் பூக்கள் இதழுரிவது போல் தேக்கி வைத்த நினைவுகள் அனைத்தும் நீரில் மூழ்கி கரைகிறது. இனி புது வாழ்க்கையில், புத்தம் புது நினைவுகளின் சிருஷ்டியின் நறுமணக் களபச் சிதறலில் கமழ்ந்து மீண்டெழுவது மட்டுமே எங்கள் காதலை உயிர்ப்பிக்க வல்லது. இமை மயிர்களை விலகத் துணிந்த கண்ணீர்த் துளிகளை துடைத்தவாறு தலையை லேசாகக் கோதி, நடுவகிடின் அடியில் குங்குமம் வைத்துக் கொண்டு அவனைக் காண கதவை திறந்து சென்றேன். என்பிலவள்

அங்கே அவன் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தாலும் அவன் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. அவன் விட்டுச் சென்ற பார்வை மட்டும் எங்கிருந்தோ என்னை பார்த்துக் கொண்டிருந்தது.மூலையில் டி.வி மட்டும் இரைந்து கொண்டிருந்தது. அதை அணைக்க போகும்போது அதற்கு முன்னிருந்த மேஜையில் காலண்டரிலிருந்து கிழித்த ஒரு திகதிக் காகிதம் காற்றில் பட படபத்துக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துக் கொண்டிருந்த ரிமோட்டை விலக்கி எடுத்துப் பார்த்தேன். ஆயிரம் அகடூரிகள் கால் நகத்தில் சுழன்று மேலேறி நுனி நாக்கின் கூர்மையால் உதரத்தை கிழித்தது. சுறீலென எழுந்த வலியில் விண் விண்ணென்று நரம்புகள் அதிர கண்களில் நீர் கோர்த்து குளமாகியது. கடந்து போன காலங்கள், உமணக் கிடங்கில் குவிந்த உப்புக் கற்கள் போலக் கரிக்க அதை கரைத்து அழித்தது அக்காகிதத்தில் இருந்த ஒரு வார்த்தை - "Sorry"